பெங்களூரு: டெல்லியிலிருந்து பெங்களூரு சென்ற ஏர் இந்தியா விமானம் பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்கும்போது, வால்பகுதி தரையில் மோதியதால்(tail-strike) பரபரப்பு நிலவியது. விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியதாகவும், பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் அனைவரும் வழக்கமான முறையில் விமானத்திலிருந்து வெளியேறியதாகவும் ஏர் இந்தியா கூறியுள்ளது.
விமானம் புறப்படும்போதோ அல்லது தரையிறங்கும்போதோ, அதன் பின்பகுதி ஓடுபாதையுடன் உராய்வதே ‘வால் உராய்வு’ (tailstrike) ஆகும். இந்த வால் உராய்வைத் தொடர்ந்து, அனைத்து விமானங்களும் கட்டமைப்புச் சிக்கல்களுக்காக ஆய்வு செய்யப்படுகின்றன.
வால் பகுதியில் விமானம் மோதிய சம்பவத்தைத் தொடர்ந்து, குறுகிய உடலமைப்பு கொண்ட ஏர்பஸ் ஏ321 ரக விமானமான ஏர் இந்தியா AI2651, ஆய்வுக்காகத் தரையிறக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் காரணமாக, டெல்லிக்குத் திரும்பும் ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பயணிகளை விரைவில் தங்கவைக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக டாடாவுக்குச் சொந்தமான விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
“ஏற்பட்ட சிரமத்திற்கு ஏர் இந்தியா நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. எங்கள் பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பே எங்களது முதன்மையான முன்னுரிமையாக உள்ளது,” என விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
