×

காதலன் மிரட்டியதால் பிளஸ் 1 மாணவி தற்கொலை; மகளின் இறப்புக்கு நீதி கேட்டு கலெக்டர் ஆபீசில் கதறிய பெற்றோர்

 

ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவுட்டுப்பாளையம் அம்பேத்கர் வீதியை சேர்ந்த முருகேசன்(48), இவரது மனைவி மணிமேகலை (36) மற்றும் அவரது உறவினர்கள் நேற்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் கந்தசாமியிடம் கண்ணீர் மல்க மனு அளித்தனர். அந்த மனுவில் முருகேசன் கூறியிருப்பதாவது, ‘‘நான் சலூன் கடை வைத்து நடத்தி வருகிறேன். எனக்கு இரு மகள்கள். மூத்த மகள் தாரணி (16). அந்தியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 முழு ஆண்டு தேர்வு எழுதி விட்டு, வீட்டில் இருந்து வந்தார். எனது மகள் தாரணி கடந்த ஏப்ரல் 21ம் தேதி இரவு எங்களிடம் வந்து, 4 மாதங்களாக ஒரு பையனை காதலித்ததாகவும், தற்போது அந்த பையன் போட்டோவை வைத்து தவறாக பயன்படுத்த போவதாகவும் மிரட்டுவதாக தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து 22ம் தேதி எனது மகளின் செல்போன் எண்ணிற்கு ஒரு அழைப்பு வந்தது. அதை நான் எடுத்து பேசியபோது, மறுமுனையில் பேசிய ஆண் தகாத வார்த்தைகளால் பேசினார். இதையடுத்து அழைப்பினை துண்டித்து விட்டோம். இதைப்பார்த்த எங்களுடைய மகள் கதறி அழுதாள். அவளை சமாதானம் செய்து அருகில் உள்ள எனது மாமியார் வீட்டிற்கு அனுப்பி வைத்தோம். அன்றைய தினம் இரவு பாத்ரூமில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார். அந்தியூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்‌.

ஆனால், அந்தியூர் போலீசார் எங்களது மகள் தற்கொலைக்கு காரணமான நபரை கைது செய்யவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கையும் தரவில்லை. மகளின் சாவுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Tags : Collector ,Erode ,Murugesan ,Manimekalai ,Ambedkar Street, Anthiyur, Erode district ,Kandasamy ,Erode Collector ,
× RELATED திருமங்கலம் அருகே குண்டும், குழியுமான...