×

சைல்டு லைன் எண்ணை அழைத்த சிறுமியை மிரட்டி தந்தைக்கு எதிராக போலி பாலியல் புகார் கொடுக்க வைத்த அதிகாரி: நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

 

மதுரை: தந்தைக்கு எதிராக சிறுமியை போலி பாலியல் புகார் கொடுக்க வைத்த அதிகாரி மீது தென்மண்டல ஐஜி நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், தனது மகள் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விருதுநகர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர், இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமி அளித்த வாக்குமூலத்தில் தனது தந்தை செல்போன் பயன்படுத்தியதற்காகக் கண்டித்ததாலும், பெற்றோருக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டதாலும், மன உளைச்சலில் சைல்டு லைன் எண் 1098 என்ற உதவி மையத்தை அழைத்துள்ளார். அந்த அழைப்பை ஏற்ற அதிகாரி, தந்தை தனது மகளுக்கு ‘பேட் டச்’ செய்ததாக பொய் புகார் அளிக்க வைத்தது தெரிய வந்துள்ளது.

காப்பகத்தில் ஐந்து நாட்கள் வைக்கப்பட்டிருந்த அச்சிறுமியை, குழந்தை நலக் குழு அதிகாரிகள், தந்தை மீது புகார் அளிக்காவிட்டால் உன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டியுள்ளனர். இதன் மூலம் தந்தை மீதான குற்றச்சாட்டுகள் அதிகாரிகளின் வற்புறுத்தலால் உருவானது என்பது முதற்கட்டமாகத் தெரிய வருவதால், மனுதாரருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. தவறான அதிகாரிகளால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமிக்கு, விருதுநகர் மாவட்ட கலெக்டர் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். சிறுமியைத் தூண்டிவிட்டு பொய் புகார் அளிக்க வைத்த அதிகாரி மற்றும் குழந்தை நலக் குழுவினர் மீது விசாரணை நடத்தி, தென் மண்டல ஐஜி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதுபோன்ற புகார்களைக் கையாளும் போது குழந்தைகளை மிரட்டவோ, தூண்டவோ கூடாது என்பதை உறுதிப்படுத்த தமிழ்நாடு தலைமைச் செயலாளர் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.

 

Tags : High Court ,Madurai ,Southern Zone IG ,Virudhunagar district ,
× RELATED மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்...