×

விஷ்ணு புராணம் காட்டும் தத்துவங்களும் நீதிகளும்

தன்னுடைய பேரனாகிய பராசரமகரிஷி

“என் தந்தையைக் கொன்ற அரக்கர்களை நான் யாகம் (அபிசார) செய்து தண்டிப்பதில் என்ன தவறு?’’ என்று கேட்ட கேள்விக்கு அவருடைய பிதாமகராக வசிஷ்டர் பதில் கூறினார்.“அருமைக் குழந்தாய். நீ அற்புதமாகத் தவம் செய்வதில் வல்லவன். உலக உயிர்களுக்காகக் கருணையோடு தவம் செய்பவன். நல்லவற்றை மட்டும் தேடித்தேடிக் காண்பவன். கெட்டவற்றைத் தவிர்ப்பவன். அப்படிப்பட்ட நீ கோபம் கொண்டால்.

அது தவறல்லவா! உன்னைப் போன்ற சாத்வீகர்களுக்குக் கோபம் வந்தால், மற்ற ராஜஸ, தாமச குணங்களோடு உள்ளவர்கள் கோபம் கொள்ளக்கூடாது என்பதை நாம் எப்படி சொல்ல முடியும்? இயல்பற்ற உனக்கே கோபம் வருகிறதென்றால், மற்றவர்களுக்கு என்ன அறிவுரை நம்மால்கூற முடியும்? கோபத்தை விடு. உன் தந்தையை யாரோ அரக்கன் கொன்று விட்டான் என்றா நீ நினைக்கிறாய்? அல்ல! யார் ஒருவரையும் யார் ஒருவராலும் கொல்ல முடியாது.

அப்படியானால் உன்னுடைய தந்தையின் சாவுக்கு அவருடைய வினைதான் காரணம். உன் தந்தையின் மரணத்திற்கு அரக்கர்கள் காரணம் என்று நினைக்காதே. அவரவர்கள் கர்மங்களுக்கு ஏற்றபடிதான் மரணங்கள் சம்பவிக்கின்றன. அதற்காகக் கோபம் கொண்டு அதில் சம்பந்தம் இல்லாதவர்களை எல்லாம் அழிப்பதோ தண்டனை கொடுப்பதோ தகாத செயல். அதற்காக உன்னுடைய சக்தியையும் தவத்தையும் வீணாக்குவது மன்னிக்க முடியாத செயல். போதும் யாகம். உன் கோபத்தை விடு. உன்னுடைய வேள்வியை நிறுத்திக்கொள்’’ என்று சொல்ல.

தாத்தாவின் அறிவுரைப்படி பராசர ரிஷியும் தன்னுடைய நிலையை உணர்ந்து யாகத்தை நிறுத்திக்கொண்டார். அப்பொழுது, அரக்கர்களின் தந்தையான பிரம்மாவின் புதல்வர்களில் ஒருவரான புலஸ்திய மகரிஷி, ஆசிரமத்திற்கு வந்தார். அவரை முகமன்கூறி வரவேற்றார் வசிஷ்டரிஷி. அவருக்கு அர்க்க்ய பாத்யாதிகளைச் சமர்ப்பித்தார். நடந்த சம்பவங்களை அறிந்து கொண்ட ரிஷி பராசரரை, அருகே அழைத்து, “உன்னுடைய தாத்தா பேச்சைக் கேட்டு அழிவு தரும் அபிசார வேள்வியை நிறுத்திக்கொண்டாய்.

பெரியோர்களின் பேச்சைக் கேட்டு உன்னுடைய செயலை நீ திருத்திக் கொண்டாய். இது உத்தமமானது. ரிஷிகளுக்குத் தேவையானது அமைதியும் சாந்தமும். கொண்டு எந்த செயலுக்கும் காரண காரியத்தை ஆராய வேண்டும். இப்பொழுது நீ கோபம் தவிர்த்து அமைதியாக இருப்பதனால் உனக்கு நான் ஒரு வரம் தருகின்றேன். உனக்கு எல்லாவிதமான சாஸ்திரங்களும் உள்ளங்கை நெல்லிக்கனி போல விளங்கும். என்னுடைய சந்ததியினரை தண்டிப்பதை நிறுத்திக் கொண்டாய். உனக்கு இன்னொரு வரத்தையும் தருகின்றேன். புராணங்களின் மிகச் சிறந்த புராணமான விஷ்ணு புராணத்தை இயற்றிப் புகழ் பெறுவாய்’’ என்று வரம் கொடுத்தார்.

அந்த வரத்தின் காரணமாகத்தான் விஷ்ணு புராணம் பிறந்தது. ஆக, கோபம்கூட ஒரு நல்ல விஷயத்துக்கு அடித்தளமிட்டது. ஒவ்வொன்றுக்கும் ஒரு காரண காரியம் உண்டு என்பது இதனால் விளங்குகின்றது. மகாபாரத குருசேத்திரப் போரானது கொடுமையானது. அந்தப் போர்தான் பகவத் கீதையையும் விஷ்ணுசஹஸ்ரநாமத்தையும் தந்தது போல, விஷ்ணுபுராணம் பராசர மகரிஷியின் கோபம் சாந்தமானதால் நமக்குக் கிடைத்தது. இதில் முதல் ஸ்லோகம் மிக அற்புதமான ஸ்லோகம் தினம் பாராயணத்திற்கு உதவும் ஸ்லோகம்.

“அவிகாராய சுத்தாய நித்யாய பரமாத்மனே
சதைக ரூப ரூபாய விஷ்ணவே சர்வ ஜிஷ்ணவே’’

இந்த ஸ்லோகத்தை தினம் நாம் பூஜை அறையில் சொல்லலாம். விஷ்ணுஸஹஸ்ரநாம தொடக்கத்திலும் இருக்கிறது.“பரமாத்மாவான மகாவிஷ்ணுவுக்கு எனது வணக்கங்கள். அவர் எந்த காலத்திலும் எந்த மாறுபாடும் அடைவதில்லை. அவர் சுத்த சாத்வீக ஸ்வரூபி. என்றென்றைக்கும் நிலைத்திருப்பவர். எல்லாவற்றிலும் எல்லா காலங்களிலும் பரமார்த்த சொரூபமாக இருப்பவர். எல்லாவற்றிலும் மேலோங்கி இருப்பவர். மும்மூர்த்திகளாக இருந்து அந்தந்தத் தொழில்களை நடத்துகின்றவர் அவரே.

பல வடிவங்களைக் கொண்டவர். எல்லாவற்றிலும் உள்ளும் புறமும் வியாபித்திருப்பவர். பார்க்க முடிந்த பொருளாகவும் பார்க்க முடியாத பொருளாகவும் கலந்து இருப்பவர். அவ்யக்தம் என்ற காரண ரூபமாகவும் வயக்தம் என்ற காரிய ரூபமாகவும் இருப்பவர். எல்லா உலகமும் அவரிடம்தான் சரணடைகின்றன. சூட்சுமத்தில் பரம சூட்சுமம் அவர். உலகத்தின் ஒவ்வொரு அசைவும் அவரால் நிகழ்கின்றன. பரம புருஷோத்தமன் அவரே.

அவருக்கு பிறப்பு இறப்பு தேய்வு போன்ற எதுவும் ஏற்படுவதில்லை’’ என்று இந்த ஸ்லோகம் விவரிக்கின்றது. இந்த ஸ்லோகத்தின் விரிவுதான் எல்லா வேத உபநிடதங்களிலும் சொல்லப்படுகின்றன. எனவே இந்த ஒரு ஸ்லோகத்தை நாம் உணர்ந்து நம்முடைய பூஜையில் சொன்னால் நமக்கு சகல பலன்களும் வசமாகும். இனி விஷ்ணுபுராணத்தில் சொல்லப்பட்ட பல்வேறு கதைகள் குறித்துப் பார்ப்போம்.

விஸ்வாமித்திரரும் ஜமதக்கனி முனிவரும்

ஜமதக்கனி முனிவரின் மகன்தான் பரசுராமன். அப்படியானால் பரசுராமனுக்கும் விஸ்வாமித்திரருக்கும் என்ன உறவு? இந்த உறவுமுறை இந்தக் கதையில் வித்தியாசமாகச் சொல்லப் பட்டிருக்கிறது. அது என்ன என்று பார்ப்போம். நாம் அதிகம் கேள்விப் படாத கதை விசுவாமித்திரர் -ஜமதக்கனி முனிவர்கள் கதை. ஒரு விதத்தில் இவர்கள் இருவரும் மாமன் மருமகன் உறவில் வரும். இக்கதை சில செய்திகளைச் சொல்லும் நெடுங்காலத்திற்கு முன்பு, பாரத குலத்தில் அஜமீத மன்னன் பிறந்தான். அவன் நற்குணங்கள் நிறைந்த மன்னன். அவனுக்கு ஜஹ்னு என்ற மகன் பிறந்தான். அவனுடைய கொள்ளுப்பேரன் காதி ஆவான். வாரிசின்றி இருந்த மன்னன் காதி, ஒரு மகனைப் பெற வேண்டும் என்ற ஆசையுடன் வனத்திற்குச் சென்றான். அப்போது அவனுக்கு சத்யவதி என்ற மகள் பிறந்த செய்தி கிடைத்தது.

அவள் பேரழகியாக இருந்தாள். இவ்வுலகில் அவளுடைய அழகுக்கு நிகர் எவரும் இல்லை. சத்யவதியின் இணையற்ற அழகைக் கண்டு, ரிச்சிக முனிவர் அவளை மணக்க விரும்பினார். ரிச்சிகர், பிருகு குலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற சியவன முனிவரின் மகன் ஆவார். அவர் மிகவும் சக்தி வாய்ந்தவராகவும், ஆனால் முன்கோபியாகவும் இருந்தார். அந்தக் காலத்தில் சாஸ்திரப்படி, கற்றறிந்த தவசீலர்கள் வந்து பெண் கேட்டால், அரசனாக இருந்தாலும் மறுக்கக்கூடாது என்று ஒரு விதி இருக்கிறது. விதி மட்டுமல்ல. வேறு காரணமும் இருக்கிறது.

பெண் தர மறுத்துவிட்டால், அவர் ஏதாவது சாபம் கொடுத்துவிட்டால் என்ன செய்வது என்கிற அச்சமும் காரணமாக இருக்கலாம். ஆனால் பெண் கேட்ட முனிவர் வயோதிகனாக இருந்ததால் மணமுடித்துத் தர அரசன் விரும்பவில்லை. அதனால் அவன் நேரடியாகப் பெண் தரமாட்டேன் என்று சொல்லாமல், ஒரு நிபந்தனையைச் சொல்லி, இதை நிறைவேற்றினால் பெண் தருகிறேன் என்றான். உடம்பு முழுதும் வெள்ளையாகவும் கருப்புக் காதுகளும் உடைய 1000 குதிரைகளைக் கொண்டு வந்தால் நான் பெண் தருகிறேன் என்று சொல்லி விட்டான். அப்படியா என்று ரிஷி சென்றுவிட்டார். மன்னனுக்கு சந்தோஷம். எப்படியோ தொல்லை விட்டது என்று நினைத்தான். ஏனென்றால் உடல் வெள்ளையும் கருப்புப் காதுகளும் உடைய குதிரைகள் இருப்பதற்கு வழி இல்லை.

அப்படி இருந்தாலும், ஆயிரம் குதிரைகள் கிடைப்பது கஷ்டம். எனவே இந்த ரிஷியால் அப்படிப்பட்ட குதிரைகளைக் கொண்டுவர முடியாது என்று நினைத்து சந்தோஷமாக இருந்தான். ஆனால் அந்த ரிஷி வருணனைக் குறித்து கடுமையாக தவம் செய்தார். கடுமையான தவத்திற்கு வருணன் இரங்கினான். ரிஷி கேட்ட ஆயிரம் வெள்ளை உடலும் கருப்புக் காதுகளும் உடைய குதிரைகளைக் கொடுத்தான், இதிலிருந்து என்ன தெரிகிறது?

முயற்சி செய்தால் நடக்காத விஷயம் எதுவும் இல்லை, முயற்சியும் பொறுமையும், இல்லாத விஷயத்தைகூட இருக்கும் படியாக செய்துவிடும் என்பது தெரிகிறது, இந்த விஷயத்தை மட்டும் இந்தக் கதையில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆயிரம் குதிரைகளைக் கொண்டு வந்து கொடுத்து சத்தியவதியை கல்யாணம் செய்து கொண்டார் ரிஷி. இப்போது அடுத்த விளையாட்டு ஆரம்பமாகியது.

சத்தியவதிக்கு வெகு நாள்கள் குழந்தையில்லை. தனக்கு ஒரு மகன் பிறக்க வேண்டும் என்று முனிவரைக் கேட்டாள். முனிவர் தவத்தினால் ஒரு பாயசக் கோப்பையை வரவழைத்தார். அப்போது சத்யவதியின் தாய் மகளுடன் இருந்தாள். தன் மகளிடம் சொல்லி, வயதான காலத்தில் காப்பாற்ற தனக்கும் தவக்குழந்தை ஒன்று கிடைக்கும்படி இறையருள் பாயசத்தை வரவழைத்துத் தரவேண்டும் என்று கேட்டாள். முனிவர் மறுபடியும், தவத்தினால் இறைவனை வேண்டி மற்றொரு பிரசாதத்தை வரவழைத்தார். அந்தந்த பாயசத்தை அவரவர்கள் அருந்தி பிரார்த்தனை செய்தால் குழந்தைகள் பிறக்கும் என்று சொல்லி, தவம் செய்ய காட்டுக்குப் போய்விட்டார்.

சத்தியவதியின் தாய் அரசனுக்கு மனைவி (அரசகுலம்) சத்தியவதி முனிவருக்கு மனைவி. (ரிஷி குலம்) அரசகுலத்துக்கு சத்திரிய தர்மமும் வீரமும் பராக்கிரமமும் உடைய வம்சம் வேண்டும். ரிஷிகளுக்கு ஞானமும் தவமும் பொறுமையும் அடக்கமும் உடைய வம்சம் வேண்டும். இப்பொழுது சத்தியவதியின் தாய் அரசனாக பிறந்த தனக்கு அரச லட்சணத்துடன் உள்ள மகன்தான் பிறக்க வேண்டும் என்று மகளிடம் கேட்டு, பாயச கோப்பையை மாற்றிக்கொண்டாள். காடு சென்ற ரிஷி சில மாதங்களில் திரும்பினார்.

விசாரிக்கும் போது பாயசக் கோப்பை மாறிவிட்டதை அறிந்தார். அப்பொழுதுதான் சொன்னார்; “அம்மா சத்தியவதி, உன் தாய் அரசனுடைய மனைவி என்பதால் சத்திரிய அம்சத்தோடு உள்ள ஒரு குழந்தை பிறக்க வேண்டும் என்று வேண்டி, அப்படிப்பட்ட பாயச கோப்பையை தவம் செய்து தந்தேன். நீ ரிஷியன் மனைவி என்பதால் உனக்குச் சாதுவான ஒரு பிள்ளை பிறக்க வேண்டும் என்று அப்படிப்பட்ட ஒரு கோப்பையை உனக்குத் தந்தேன். ஆனால், உன்னுடைய தாய் சந்தேகப்பட்டுக் கோப்பையை மாற்றிக் கொண்டாள். ம்.. என்ன செய்வது? முனிவராக இருந்தாலும்கூட விதியை மாற்ற முடியாது போலிருக்கிறது’’ என்றார்.

இதனுடைய விளைவாக சத்தியவதியின் வயிற்றில் தவமே உருவாகிய ஜமதக்கனி முனிவரும், சத்தியவதியின் தாயின் வயிற்றில் மகாவீரனாகிய விசுவாமித்திரரும் தோன்றினர்.இந்தக் கதை வியாச பாரதத்திலும், சிறிய மாற்றங்களுடன் இருக்கிறது. கதையின் கருத்து இதுதான். எத்தனை முயற்சி செய்தாலும் விதிப்படி நடப்பதை மாற்ற முடியாது. நாம் அறிவாளியாக இருந்தாலும், நம் கையை வைத்தே நம் கண்ணைக் குத்துவது போல, நம் அறிவை வைத்தே நமக்கு எதிரான செயலையும் விதி நடத்திவிடும். எனவே எல்லாவற்றையும் தெய்வத்தின் கைகளில் விட்டுவிட்டு நாம் நம்முடைய கடமைகளைச் செய்வது நல்லது.

முனைவர் ஸ்ரீ ராம்

 

Tags : VISHNU ,Parasaramagarishi ,Vasishdar ,
× RELATED அன்பும் மரியாதையும் வேண்டுமா?