×

பழனி பிள்ளைத்தமிழ்…

பழனி! அந்தப் பழனியைச் சுற்றி ஏராளமான ஊர்கள் இருந்தன. அவற்றில் நாயக்கன்பட்டி என்பதும் ஒன்று. சின்னோவள் என்னும் தேவதையை வழிபடுவார்கள். அவர்களில் ஒருவர் கல்வியில் சிறந்து, கேள்வி அறிவு சிறந்தவராக விளங்கினார்; ஒழுக்கத்தில் உயர்ந்த அவரை சின்னோவள் ஐயன், சின்னோவையன் சின்னோபா என்றெல்லாம் அழைத்து, அன்போடு பழகினார்கள் மற்றவர்கள். தமிழ்த் தாத்தா என்று சொல்லப்படும் உ.வே.சா. அவர்கள், இவரை `சின்னப்ப நாயக்கர்’ என்று அறிவிக்கிறார். இவர் பெயர் அப்படியும் வழங்கி இருக்கிறது என்பது தெரிகிறது. இந்தச் சின்னப்பரின் மனைவி பெயர் மாதங்கி. அவர்கள் இல்லறம் நல்லறமாக நடந்து வந்தது.

நாள்தோறும் அந்தத் தம்பதிகள் மாபெரும் பழனிமலை மேலேறி, பழனி ஆண்டவரைத் தரிசித்து வணங்கி மகிழ்ந்தார்கள். பழனி தண்டபாணி மீது, பக்தர் சின்னப்பர் பாடிய பாடல்களும் பல உள்ளன. ஆனால், திடீரென்று என்ன நடந்ததோ தெரியவில்லை. தர்மம் நிறைந்த தமிழ்நாட்டில் காலக்கொடுமையோ, யாரிட்ட சாபமோ தெரியவில்லை. சில சில சமயங்களில், பல கோணங்களில் வம்புகள் பெருகி எழுந்த வரலாறு பல உள்ளன.

தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் சிறுசிறு குற்றங்கள் சிலிர்த்தெழுந்து மலையாகி வளர்ந்தன. நாள்தோறும் கொலையும் கொள்ளையும் ஏராளமாக நடந்துகொண்டிருந்தன. குடிமக்கள் எதிர்த்து நின்றார்கள். ஆனால் அதன் பயனாகக் கலகம் மிகவும் பலம் அடைந்தது. ஒன்றுமறியாத பலர் பலியானார்கள். அபலைகள் அஞ்சி அலறினார்கள். மன்னர்கள் பலர் இவைகளை அறிந்து, படைகளைத்திரட்டி அநியாயக் கலகங்களை அடக்க, இடையறாமல் முயற்சி செய்தார்கள். அந்த நேரத்தில்தான், சின்னப்பரும் இதைப் பற்றிச் சிந்தித்தார். வருந்திய அவர் மனைவியுடன் மலையேறிப் பழனி ஆண்டவரை வழிபட்டுத் திரும்பினார்.

இரவு மணி 9. “நேரம் ஆயிற்று. உணவு கொள்ளலாமே’’ என்றாள் மனையாள்.“மாதங்கி! நாடு இப்போது இருக்கும் நிலை உனக்கே தெரியும் அல்லவா? உண்டு, உடுத்து, உல்லாசமாக இருப்பது நல்லவர்களுக்கு அழகு அல்ல! நமது வழக்கப்படி வாள் வித்தையில் நல்ல பயிற்சி இருக்கிறது எனக்கு. மன்னருடைய சேனைகளில் ஒருவனாக சேரப்போகிறேன். இந்த அக்கிரமக் கலகங்களை அடக்குவேன். முருகப் பெருமான் துணை புரிவான். நான் திரும்பும் வரை பழனி ஆண்டவனையே நம்பி இரு!’’ என்றார். மனம் துடித்த மாதங்கி, பேசத் தொடங்கினாள்;

“சுவாமி! உங்கள் எண்ணம் நல்லதுதான். இருந்தாலும் வெற்றியும் தோல்வியும் ஒருவர் பக்கமே இருக்காது அல்லவா?’’ என்றாள். சின்னப்பர் பதில் சொல்லத் தொடங்கினார்; “பைத்தியக்காரி! சித்தம் எப்போதும் சிதைவதே கூடாது. தெரிகிறதா? செய்யும் செயல்களால் வரும் அரிய புண்ணியம் ஒன்றுதான், ஆத்ம சாந்தியை அளிக்கும்.

“அருள் நிறைந்த சேரர்கள் ஒரு காலத்தில் கொங்கு நாட்டை ஆண்டார்கள். ஒரு காலத்தில் இந்த நாடு பாண்டியர்களுக்கு மாறியது. ஒரு காலத்தில் சோழர்கள் இதைத் தங்களுக்கு உரிமையாக ஆக்கிக் கொண்டார்கள். அவர்கள் வரலாறு என்ன ஆயிற்று? கொங்கு நாட்டிலேயே 24 சிறுசிறு நாடுகள் உள்ளன. அவைகளில் ஒன்று இந்த வையாபுரி நாடு. இதை ஆண்ட வையாபுரி அரசர், வேள் ஆவிக்கோ ஆகியோர் வரலாறு என்ன ஆனது? உனக்குத்தெரியாதா?’’ என்று விரிவாக சின்னப்பர் சொல்லிக் கொண்டு போகும் போது… மாதங்கி அழத் தொடங்கினாள்.

“ஏன் அழுகிறாய்? அசடு! இதுதான் உலக நியதி. நாளைக்கு நம் நிலையும் இதுதான்’’ என்றார் சின்னப்பர். அதற்குள் தன்னை நிலைப்படுத்திக் கொண்ட மாதங்கி, “சுவாமி! வாழ்க்கையின் நிலையாமையை இந்த மக்கள் எப்படி மறந்து போகிறார்கள்?’’ என்றாள். சின்னப்பர் தொடர்ந்து,“அவர்கள் ஏன் தெரிந்து கொள்வதில்லை என்ற ஆராய்ச்சி இப்போது வேண்டாம்’’ என்று முடித்தார். பொழுது விடிந்தது; எழுந்து செய்ய வேண்டிய கடன்களை முடித்துக் கொண்டு, நீராடினார்; புனித மனதோடு புறப்பட்டார், தூய்மையான மனத்தோடு புறப்பட்ட சின்னப்பர், பழனிக்கு (மூன்று கிலோ மீட்டர் தூரத்தில்) அருகில் உள்ள பால சமுத்திரம் எனும் ஊரை அடைந்தார். காரணம்?

அந்தப் பகுதியை ஆட்சி செய்துவந்த மன்னர் விஜயகோபால துரை எனும் அரசர், அங்கே பால சமுத்திரம் எனும் அந்த ஊரில்தான் எடுப்பானதோர் அரண்மனையில் இருந்தார். தகுந்தவர் மூலம் மன்னரைச் சந்தித்தார் சின்னப்பர். சின்னப்பரின் திரண்ட தோள்கள், பரந்த மார்பு, கனிவு காட்டும் கண்கள், கம்பீரமான தோற்றம் ஆகியவற்றைக்கண்ட அரசர், தன் கருத்தை இழந்தார். அதன் பயனாகச் சின்னப்பர் சேனை வீரர்களில் ஒருவராக சேர்ந்தார். வாள் வலிமையும் தோள் வலிமையும் அதிவிரைவாக சின்னப்பரைச் சேனாதிபதியாக்கியது. ஆழ்ந்தகன்ற அறிவாலும் தெய்வத்தின் அருளாலும், நாட்டில் எழுந்த கலகங்களை அப்படியே அடக்கினார் சின்னப்பர். நாடு அமைதியான நிலையை அடைந்தது.

அதைக் கண்டு மகிழ்ந்த மன்னர், சின்னப்பரைப் பலவாறாகப் பாராட்டினார்; அந்தரங்கத் தோழராகவே ஆக்கிக்கொண்டார். அதன் பின் சின்னப்பர், மன்னருக்கு கண்ணுக்குக்கண்ணாக விளங்கினார்; மன்னரை காக்கும் கவசமாகவே ஆனார். உயர்ந்த நிலை அடைந்த அந்த நிலையிலும் சின்னப்பர்,“வையாபுரி ஆண்டவா! தண்டபாணி!’’ என்று வாய் நிறையப் பழனி ஆண்டவனை வாழ்த்தினார். அவர் உடம்பில் பூசிய திருநீறு, இவர் உள்ளமும் இதே தூய்மையாகதான் இருக்கும் என்பதே அறிவிப்பதைப் போல இருக்கும்; விரல்களில் ஜெபமாலை உருளும். அதே காலத்தில்… மன்னர் வயோதிகர். அந்த மன்னருக்குப் பிள்ளைகளும் கிடையாது.

சின்னப்பரைப் பார்க்கும்போதெல்லாம்,

“நல்ல சிந்தனையும் நற்செயலும் நிறைந்த சின்னப்பரை எதிர்கால மன்னராகச் செய்துவிட வேண்டும்’’ என்று தனக்குள் தீர்மானித்துக் கொண்டார் மன்னர். ஒரு நாள் அவையைக்கூட்டி, தன் உள்ளத்தில் இருந்த கருத்தை அங்கே சபையில் வெளியிட்டார் அரசர். அதைக் கேட்ட சின்னப்பர் உடம்பு, ஆடிக்குலுங்கி அதிர்ந்தது; “நானா? மன்னனாகவா? நிம்மதியான மனம் நிலை குலையும். பொறுப்புகள் வளரும். பழனியாண்டவர் வழிபாட்டிற்கு பலவகையிலும் இடையூறாக இருக்கும். என்னை மன்னித்து விடுங்கள்! வேறு யாரையாவது தேர்ந்தெடுக்க வேண்டுகிறேன்’’ என்று படபடப்போடு பேசி முடித்தார் சின்னப்பர். அதை ஏற்க யாரும் தயாராக இல்லை.

குடிமக்களும் மன்னரும் சேர்ந்து,“சின்னப்பர்தான் இனிமேல் மன்னர்’’ என்று தீர்மானித்து முடித்தார்கள். “இனிமேல் சின்னப்பர்தான் மன்னர்’’ என்ற பேச்சு ஊர் எங்கும் பரவியது. அன்று இரவு மணி ஒன்று. சின்னப்பரும் மாதங்கியும் நன்கு தூங்கிக்கொண்டிருந்தார்கள். திடுக்கிட்டு எழுந்த சின்னப்பர், “அப்படியே.. அப்பா… அப்படியே.. அப்பா..’’ என்று கதறினார். அந்த அலறல் கேட்டு மாதங்கியும் விழித்துக் கொண்டாள்.“சுவாமி! சுவாமி! ஏன் இப்படி அலறுகிறீர்கள்?’’ என்று கேட்டாள்.

“மாதங்கி! நான் பழனி ஆண்டவன் சந்நதியில் அடிமைப் பணி செய்ய விரும்புகிறேன். ஆனால், என் கனவில் எழுந்தருளிய முருகன், அரசனாக இரு என்று ஆணையிட்டான்’’ என்று சொல்லி முடித்தார், சின்னப்பர். அதைக் கேட்ட மாதங்கி,“சுவாமி! மயிலேறும் பெருமான் ஆணையை மறுக்கலாமா? மன்னராக இருந்தாலும் சரி! ஆண்டியாக இருந்தாலும் சரி! ஆண்டவனுக்கு இந்த ஆன்மா அடிமை என்ற நினைவு நியதியில் நிற்க முடியும் அல்லவா?’’ என்றாள். சின்னப்பர் மனம் மகிழ்ந்தார்;“இப்படி நல்லவைகளைச் சொல்லிக் கொடுக்கும் மாபெரும் மனைவி வாய்த்தால், துறவியும் இல்லறத்தான் ஆகலாம்’’ என்று வாய் விட்டுச் சிரித்தார். ஒரு நல்ல மங்கல நாளில் மகுடாபிஷேகம் நடந்தது. அன்றுவரையில் அரசராக இருந்தவர், அவையில் நின்று,“இன்று முதல் சின்னப்பர்தான் அரசர்’’ என்றார்.

“இன்றைய அரசர் சின்னப்பர்! பழைய மன்னர் பெரியப்பர்’’ என்று பாராட்டியது சபை. சின்னப்பர் காலத்தில், ஆன்றோர் நிறைந்த ஆலோசனை சபை அமைந்தது; நிர்வாக திறமை நன்றாக நீடித்தது. அப்படிப்பட்ட நேரத்தில்தான் ஒரு நாள், சின்னப்பர் சொல்லத் தொடங்கினார்,“சபையில் உண்மை உள்ளத்தில் தோன்றினால் வாயில் வருவது சத்தியமாகும். அதன் பிறகுதான் உண்மையான வாழ்க்கையை, நாம் அடைய முடியும்; வாழமுடியும். நலம் நிறைந்த அந்த வாழ்க்கையில் அருள் நடமாடும்.

அதற்கு வழி காட்டுவது ஆன்மிகம். மக்கள் மனதை அப்படித் திருத்துவதுதான் தர்மம். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?’’ என்று ஆலோசனை சபையில் ஒரு கேள்வியை எழுப்பினார், சின்னப்பர். அவ்வளவு பேர்களும் சேர்ந்து,“ஆம் அதுதான் சரி!’’ என்று முழங்கினார்கள். ஆவினன் குடியில் பேரருள் வழங்கும் பெரியநாயகி; லட்சுமி நாராயணர்; ஜெகன்மோகன வேணு கோபாலர்; பட்டத்து விநாயகர்; முக்தர் போற்றும் முத்துக்குமாரர் எனும் அத்தனை திருக்கோயில்களிலும் விரிவான பல திருப்பணிகளைச் செய்தார் சின்னப்பர்.

“வருவதும் போவதும் இந்த உலகத்தில் வழக்கம். நான் மட்டும்தான் நிலையாக இருப்பேன்’’ என்று சொல்வதைப்போல பழனி மலையில் போகர் இருக்கிறார். பழனிமலையில் சேரமான் பெருமாள் நாயனார் அமைத்த ஆலயப்பகுதிகள் பல உள்ளன. அப்படிப்பட்ட பழனி மலையில் அளவிறந்த திருப்பணிகள் செய்தார் சின்னப்பர். விசேஷகால விழா ஆகியவைகளை விரிவு படுத்தினார்; ஒவ்வொரு காலத்திலும் முறையாக அங்கே இறைவனுடைய பெருமையை விளக்கும் சொற்பொழிவுகள் நிகழச் செய்தார். தெய்வத்திருவருள் நுட்பங்களைத் தெளிவுபெறக் கேட்டுப் பலன் பெற்றார்கள் மக்கள். அதன் பலனாக ஆலய வழிபாடு அதிகமானது. எந்த நேரத்திலும் பஜனை; எங்கும் ஹர ஹர முழக்கம்; உணர்ச்சி வசப்பட்டு உள்ளம் உருகினார்கள். பக்தி வழிபாடு பலித்தது. காலத்தில் மழை பெய்தது. செல்வம் செழித்தது. எங்கும் நல்லவர்கள் நிறைந்து அன்பு மிகுந்த இன்ப வாழ்க்கை எய்தினார்கள்.

“மக்கள் அமைதியாக வாழ வழிசெய்த இது அல்லவா அரச தர்மம்!’’ என்று வாயாரறச் சொன்னார் பழைய மன்னர். ஒரு நாள் காலம் வந்து கண் மூடினார், பழைய மன்னர். சின்னப்பர் முதல் குடிமக்கள் அனைவரும் வருந்தினார்கள். பழைய மன்னருக்குச் செய்ய வேண்டிய இறுதிச் சடங்கை நலம்பெற நிகழ்த்தினார், சின்னப்பார். அந்த நேரத்தில்தான் ஈஸ்ட் இந்தியா கம்பெனிகாரர்கள் கொடூரமான குணம் உடையவர்களாகத் தமிழ்நாட்டில் புகுந்தார்கள். திடீர்திடீரென்று கிராமங்களில் எல்லாம் புகுந்து, கிராமங்களைக் கொளுத்தினார்கள்.

கொலையும்கொள்ளையும் பெருத்தன; என்னென்ன தொல்லைகளை உண்டாக்க முடியுமோ உண்டாக்கி கொண்டிருந்தார்கள் வெள்ளைக்காரர்கள். அந்த நேரத்தில்தான், பழனியில் பங்குனித்தேர் திருவிழா தொடங்கியது. அபிஷேகம் எல்லாம் முடிந்து கற்பூர ஆரத்தி காட்டினார்கள். எல்லா அடியார்களும் “முருகா! முருகா!’’ என்று கூவினார்கள். சின்னப்பருக்கு மெய்சிலிர்த்தது. கைகள் இரண்டையும் தலைக்குமேல் குவித்தபடி முருகப் பெருமானைத் தரிசித்தார்; வாய் திறந்து பாடத் தொடங்கினார்;

“பங்குனித் தேரேறிப் படி வலம் செய்தே அருளும்
சங்கரனார் மைந்தன் எனும் தற்பர ஓம் சிற்பரனே!
செங்கமலம் கருங்குவளை செல்வியர்த்தம் மணவாளா!
இங்கு எழுந்தாய் வேலா எம் இடர் அழிந்தது இன்றோடே’’
– என்று பாடி முடித்தார்.

எல்லோரும் சேர்ந்து அந்த தேரின் வடத்தைப்பிடித்து இழுக்கக்கூடிய நேரத்தில்…

திடீரென்று எல்லோரும் சிதறி ஓடினார்கள். தடுக்கி விழுந்தவர்கள் எழுந்து, முன்பைவிட வேகமாக ஓடினார்கள்.

“ஐயோ! அப்பா! அம்மா! அண்ணா! தம்பி! மகனே! அக்கா!’’ என்று பலவிதமாகக் கூவிக்குமுறி அலறியபடி ஓடினார்கள். பார்த்த சின்னப்பருக்கு ஒன்றும்  புரியவில்லை.அப்போது உடல் உதற, இதயம் பதற ஒருவன் ஓடி வந்தான்;

“மன்னா! கொடியவர்களான கும்பினி ஆட்கள் இதுவரை இந்தப் பக்கம் வந்ததில்லை. இன்று வருகிறார்களாம். தாங்களும் சில நாட்கள் தலைமறைவாக இருப்பது நல்லது. அவ்வளவுதான்!’’ என்று சொல்லி விட்டு அவனும் ஓடினான். சின்னப்பர் கண்ணீர் சிந்தினார்;“தமிழ்நாடே! எங்கே உன் வீரம்? மக்கள் இவ்வளவுதூரம் கோழைகளாக மாறிவிட்டார்களே! அர்ச்சகர் முதலிய யாருமே இங்கு இல்லை. ஒப்பாரும் மிக்காரும் இல்லா குமரேசா! உன் திருவிழா குறைவுபடக்கூடாது. ஆறிலும் சாவு; நூறிலும் சாவு! என்ன நடந்தாலும் சரி! முருகா! வாழ்விக்கும் மாட வீதியில் உன் தேர் வலம் வந்தே ஆக வேண்டும்.

அதுவரை நான் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன். அருளாயா அப்பா! ஏழையருக்கு இரங்காயா முருகா!’’ என்று புலம்பினார். அப்பொழுது அவர் வாயில் இருந்து வெளிப்பட்ட பாடல், நேருக்கு நேராக அங்கே நடக்கும் தெய்விக வழிபாட்டைச் சொல்வதுபோல் இருக்கும்!

“இந்திரன் குடைபிடித்திட, அழல் கடவுள் வந்து
எதிர் நின்று விசிறி வீச,
இயமனுடன் திருவெண்சாமரைகள் முறைமுறை
இரட்ட வருணன், வாயுவும்

சந்திரனும் உடைவாளை ஏந்தி நின்று இருபுறம்
தாம் நிற்ப, அளகை வேந்தன்
தயவினோடு காளாஞ்சி ஏந்த கலந்து எந்த
சசானன் இது சரியென்று முறுவல் கூர,

மந்திரப்புனல் கொண்டு அருசித்து வேதன் முதல்
மறை முனிவர் துதிகள் செய்ய,
வானகத்து அமரர் நறுமலர் பெய்ய, மழகதிர்
மறைத்த கார் மழைகள் பெய்யச்
சிந்தனை மகிழ்ந்து நவ மணியினால் ஒளிர்கின்ற
சிறு தேர் உருட்டி அருளே!

தென் பழனி நகரிவரு சிவகிரியின் முத்தையன்
சிறுதேர் உருட்டி அருளே!’’
– என்று பாடி உள்ளம் உருகினார்.

அதே வினாடியில் அங்கே அதிசயம் நடந்தது! தேர் தானாகவே உருண்டது. கண்ட சின்னப்பரின் கண்களில் கண்ணீர் வழிய, “பழனித்துரையே! முத்துக்குமாரா! எளியேன் பாடல் கேட்டு மகிழ்ந்தாயா? இரக்கம் கொண்டு வந்தாயா? வாரும்! வாரும்! பிரபுவே… வாரும்! வாரும்!’’ என்று வாழ்த்தினார். அவரைப் பின் தொடர்ந்து, ஆடி அசைந்து வந்தது, அருமையான அந்தத் தேர்!

பி.என்.பரசுராமன்

Tags : Palani Pillaithamizh ,Palani ,Sinnovaal ,Sinnovian Iain ,Sinnovian Sinnoba ,
× RELATED அன்பும் மரியாதையும் வேண்டுமா?