×

நம்பிக்கை வாக்கெடுப்பில் திருப்பத்தூர் தவெக எம்எல்ஏ பங்கேற்க உயர் நீதிமன்றம் தட; ஐகோர்ட் உத்தரவு

 

சென்னை: திருப்பத்தூர் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதி, நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்கக் கோரி திமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், சிவகங்கை-திருப்பத்தூர் தொகுதிக்கு பதிவான தபால் வாக்கு திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் தொகுதிக்கு அனுப்பப்பட்டதால் அந்த வாக்கை மீட்டு சரிபார்க்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எல்.விக்டோரியா கவுரி மற்றும் என்.செந்தில்குமார் அமர்வு, தபால் வாக்கு வேறு தொகுதிக்கு அனுப்பப்பட்டது குறித்து திமுக வேட்பாளர் அனுப்பிய புகார் மனுவுக்கு பதிலளிக்காதது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்த மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன், இந்த பிரச்னை தொடர்பாக தேர்தல் வழக்கு தான் தொடரமுடியும். நள்ளிரவு வரை வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது எந்த ஆட்சேபமும் தெரிவிக்கப்படவில்லை. முடிவுகள் வெளியிடப்பட்ட பின் தேர்தல் ஆணையத்தின் பணிகள் முடிவடைந்து விட்டது. தபால் வாக்கு வேறு தொகுதிக்கு அனுப்பப்பட்டு விட்டதாகக் கூறுவது கற்பனையானது. தபால் வாக்கு தொகுதி மாறி அனுப்பப்பட்டுள்ளதாகக் கூற எந்த ஆதாரங்களும் இல்லை என தெரிவித்தார். பெரியகருப்பன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, தபால் வாக்கு வேறு தொகுதிக்கு மாறியுள்ளதற்கு ஆதாரம் இல்லை என்பது தவறு. வாக்கு மாறி வந்தது குறித்து தேர்தல் அதிகாரியே தகவல் தெரிவித்திருக்கிறார். தபால் வாக்கு தொகுதி மாறி அனுப்பப்பட்டுள்ளது என்பதை தேர்தல் ஆணையம் மறுக்கவில்லை.

தபால் வாக்கு வேறு தொகுதிக்கு அனுப்பப்பட்டிருந்தால் என்ன நடைமுறை பின்பற்ற வேண்டும் என சட்டத்தில் தெரிவிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் எல். விக்டோரியா கெளரி, என். செந்தில் குமார் அமர்வு இன்று இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், “பெரியகருப்பன் அளித்த புகாருக்கு போதுமான ஆதாரம் உள்ளது. அதனால், நீதிமன்ற மறு உத்தரவு வரும் வரை சட்டமன்றத்தில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பு, நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு உள்ளிட்ட எதிலும் திருப்பத்தூர் தவெக சட்டமன்ற உறுப்பினர் சீனிவாச சேதுபதி கலந்து கொள்ள தடை விதிக்கப்படுகிறது.

சீனிவாச சேதுபதியின் தேர்தல் வெற்றியை நீதிமன்றம் ரத்து செய்யவில்லை. அதே சமயம், அவரது தேர்தல் வெற்றியை ஏற்றுக் கொள்வதாகவும் கருதக் கூடாது. வாக்கு எண்ணிக்கை சுற்று விவரங்கள் மற்றும் மின்னனு வாக்குகள், தபால் வாக்குகள், நிராகரிக்கப்பட்ட தபால் வாக்குகள், அதன் கவர்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் பாதுகாப்பாக தேர்தல் ஆணையம் வைத்திருக்க வேண்டும். திருப்பத்தூர் தொகுதி எண் 185-க்கு அதே பெயரில் உள்ள திருப்பத்தூர் தொகுதி எண் 50 இல் இருந்து தபால் வாக்குகள் வந்திருந்தால் அதை திறக்காமல் பாதுகாத்து வைக்க வேண்டும். ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற இந்த உத்தரவால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

இது மறு வாக்கு எண்ணிக்கைக்கானது எனவும் கருத கூடாது” என கூறப்பட்டுள்ளது. மேலும், “திருப்பத்தூர் தொகுதியில் எத்தனை தபால் வாக்குகள் உள்ளன? அதில் எத்தனை வாக்குகள் பதிவாகின? வேறு தொகுதிக்கு எத்தனை வாக்குகள் சென்றன? என்று தேர்தல் ஆணையம் விசாரணை செய்ய வேண்டும். தபால் வாக்குகள் மற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது எடுக்கப்பட்ட காணொலி காட்சிகள் அனைத்தையும் பாதுகாப்பாக வைக்க வேண்டும்” என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 19-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

Tags : High Court ,Tirupathur ,Daweka MLA ,iCourt ,Chennai ,Taweka ,MLA ,Siniwasa Sedupati ,Chennai High Court ,
× RELATED என்ஆர் காங்., பாஜகவைச் சேர்ந்த 5...