×

மேற்காசிய போர் சூழல் மோசமாகி வருவதால் வெளிநாட்டு தயாரிப்பு பொருட்களை தவிர்ப்போம்: குஜராத்தில் மீண்டும் மோடி வலியுறுத்தல்

வதோதரா: வெளிநாட்டு தயாரிப்பு பொருட்களை தவிர்ப்போம் என்று குஜராத்தில் மீண்டும் மோடி வலியுறுத்தி பேசினார். குஜராத் மாநிலம் வதோதராவில் கட்டப்பட்டுள்ள சர்தார்தாம் விடுதியை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அப்போது மாநிலத்தின் தொழில்முனைவோர் ஆர்வத்தை பாராட்டிய அவர், ‘சவால்களை வாய்ப்புகளாக மாற்றுவது குஜராத்தின் கலாசாரமாகும். வதோதரா நகரம் தற்போது இன்ஜினியரிங், ரசாயனம் மற்றும் மருந்துப் பொருட்களின் மையமாக உருவெடுத்துள்ளது. இங்கிருந்து மெட்ரோ பெட்டிகள் சர்வதேச சந்தைகளுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டு வருகின்றன. கடந்த 2020ம் ஆண்டில் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சவாலாக இருந்தது.

தற்போது மேற்கு ஆசியாவில் நிலவும் போர் சூழல் இந்த தசாப்தத்தின் பெரிய பிரச்னைகளில் ஒன்றாகும். இதன் பாதிப்பு மக்கள் மீது மிகக்குறைவாக இருப்பதை உறுதி செய்ய ஒன்றிய அரசு இடைவிடாத முயற்சிகளை எடுத்து வருகிறது. உலகளாவிய விநியோக சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு, இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது. இதனால் நாட்டின் அந்நிய செலாவணி செலவை குறைக்க, மக்கள் வெளிநாட்டு பொருட்களுக்கு பதிலாக உள்நாட்டு தயாரிப்புகளை பயன்படுத்தும் ‘உள்ளூர் தயாரிப்புகளுக்கு குரல் கொடுப்போம்’ என்ற திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்.

பெட்ரோல், டீசல் பயன்பாட்டை முடிந்தவரை குறைத்து, பொது போக்குவரத்து மற்றும் மின்சார பேருந்துகளை மக்கள் பயன்படுத்த வேண்டும். அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் ஆன்லைன் கூட்டங்கள் மற்றும் வீட்டிலிருந்தே வேலை செய்யும் முறையை ஊக்குவிக்க வேண்டும். தங்கம் இறக்குமதி செய்வதற்காக நம்முடைய லட்சக்கணக்கான கோடி ரூபாய் வெளிநாடுகளுக்கு செல்வதால், நிலைமை சீராகும் வரை தங்கம் வாங்குவதை தள்ளிப்போட வேண்டும்’ என்று வேண்டுகோள்
விடுத்தார்.

5 மாநில தேர்தலுக்கு முன் சொல்லி இருக்கலாம்…
காங்கிரஸ் மூத்த தலைவரான ஹரிஷ் ராவத் அளித்த பேட்டியில், ‘மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியை கண்டு பாஜக பயப்படுகிறது. சாம, தான, பேத, தண்டம் ஆகிய வியூகங்களைப் பயன்படுத்தி ராகுல் காந்தியின் நற்பெயரை ஒன்றிய அரசு கெடுக்கிறது. ஊடகங்கள் மற்றும் அரசியலமைப்பு நிறுவனங்களைத் தவறாகப் பயன்படுத்தி அவரது பிம்பத்தைச் சிதைக்கப் பார்க்கிறார்கள். எப்படியாவது அவரது பிம்பத்தை ஒடுக்க நினைக்கிறார்கள். ஆனால் போராட்ட குணமுள்ள எதிர்க்கட்சித் தலைவராக உருவெடுத்துள்ள ராகுல் காந்தியின் பிம்பத்தை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. தங்கம் வாங்க வேண்டாம் என்று கூறும் மோடி, 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு முன்பே இந்த வேண்டுகோளை விடுத்திருக்க வேண்டும், ஏன் இவ்வளவு காலம் தாமதித்தார் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது’ என்று கூறினார்.

Tags : Modi ,Gujarat ,Vadodara ,Sardartham Hotel ,Vadodara, Gujarat ,
× RELATED நான் தொடர்ந்து சொல்லி வருவதுபோல, நீட்ல...