தொண்டையே நாடும் தொண்டை நன்னாட்டில், குன்றையம் பதிவாம் சேக்கிழார் என்னும் பாக்கிழார் அருளியது பெரியபுராணம். இது அறுபான்மும்மை அடியவர் வரலாறு பேசும் ஓர் அருட்பனுவல். இந்த நூலின் பெருமையை,
‘‘…ஒள்ளியசீர்த் தொண்டர் புராணம்….
தண்டமிழின் மேலாம் தரம்’’ என்று,
தமிழிலுள்ள உயர்வான இலக்கியங்கள் பலவுள்ளும் ஆறு நூல்களை மட்டும் வரிசைப்படுத்தி, அவற்றுள் பெரியபுராணமும் ஒன்று. என ஏற்றம் தருகிறார் உமாபதிசிவம். இவ்வண்ணம், சிறந்து விளங்கி சிறந்ததையே பயிற்றும் இவ்விலக்கியத்தில் ‘அடியார் நோக்கில் அருளும் பொருளும்’ எப்படியிருந்தது என்பதை ஆயும்நோக்கில் இக்கட்டுரை அமைகிறது.
அருளும் பொருளும் – ஓர் அறிமுகம்
‘அருள்’ என்ற சொல் இறைவரிடமிருந்து கிடைக்கும் கருணையாகிய ‘திரு அருளை’யும், ஒரு மனிதன் மற்றொரு உயிரின்மீது காட்டும் இறவாத இன்ப அன்பையும் குறிக்கும். பிற உயிர்கள் மீது காட்டும் அன்பினைத் திருவள்ளுவர் ‘அருள்’ என்று குறிப்பிடுகிறார். உதாரணம்
‘‘தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள்’’ (251)
‘பொருள்’ என்பது, பொன் முதலிய செல்வங்களையும் வாழ்க்கையில் பின்பற்றும் நெறிமுறை அல்லது குறிக்கோள்களைக் குறிக்கும்.வினையின் நீங்கி விளங்கிய அறிவனை, வணங்கி அருள்பெற்ற அடியார்கள் அனைவரும் பொன் முதலிய பொருளைப் பெரிதெனக் கருதாது அருளையே பெரிதெனக் கருதியவர்கள்.
அருள் தரும் ஆலயங்களுக்குச் சென்று, ஆயிரக்கணக்கில் பொன்பொருளைச் செலவு செய்து (அருச்சனை, சிறப்பு தரிசனம் முதலியன) அப்படியேனும் அருளை வேண்டுமென வேண்டாமல் பொருளை வேண்டும் இக்கால வாழ்வைப் போல் அன்றி, அடியார் நோக்கில் அருளே பெரிது; அவர்களைப் பொருத்த அளவில் பொருள் என்றால் ஓடும் ஒன்றுதான் தங்கமும் ஒன்றுதான். இதனைக்,
‘‘கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்
ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவர்’’
என்று சேக்கிழார் அறிமுகந் தருவதில் அறியமுடியும்.
தொடக்கமே-அருள்
பெரியபுராண விருட்சத்தின் வித்தாக விளங்குவது ‘திருத்தொண்டர்த் தொகை.’ இந்த விதை சுந்தரரால் ஊன்றப்பட்ட மண் திருவாரூர் மண். (திருவாரூர்-மண் திருத்தலம்). இவ்வூரின் சிறப்பைத், திருநகரச் சிறப்பில் சேக்கிழார் கூறும்போது மனுநீதிச் சோழன் வரலாற்றை வழங்குகிறார்.மனுநீதிச் சோழனின் மகன் தேரில் போகும்போது ஒரு கன்றுக்குட்டி தானாகவந்து விழுந்து இறந்து விடுகிறது. அதனுடைய தாய்ப்பசு ஆராய்ச்சிமணியை அடித்து, தன் துயரத்தைத் தெரிவிக்கின்றது. இதையறிந்த மனுநீதிச் சோழன் தாய்ப்பசுவின் நிலையைத் தானும் அடையத் தயார் ஆகிவிடுகிறாள். அப்போது அமைச்சர்,
‘‘வளவ நின்புதல்வன் ஆங்கோர் மணிநெடுந் தேர்மேலேறி
அளவில் தேர்த் தானை சூழ அரசுலாந் தெருவில் போங்கால்
இளைய ஆன்கன்று தேர்க்கால் இடைப்புகுந்து இறந்ததாகத்
தளர்வுறும் இத்தாய் வந்து விளைத்தது இத்தன்மை என்றான்.’’
என்று, உனக்கு இருப்பதோ ஒரு பிள்ளை, அவன் தேரில் மணி அடித்துக்கொண்டே சென்றான். அவன் மீது குற்றமில்லை. உயரமான தேரில் படைகள் சூழச் சென்றதால், படை வீரர்கள் பார்த்துச் சொல்லியிருக்க வேண்டும். மேலும், அவன் சென்றது அரசர்கள் மட்டுமே செல்லக்கூடிய தெரு. ஆகவே, அந்த வழியில் பசுக்கன்று வந்ததுதான் குற்றம். அதுவும் இளைய கன்று என்பதால் ‘இளங்கன்று பயமறியாது’ என்பது புலப்படுகிறது என்றும், பசுக்கன்றானது தேர்ச்சக்கரத்தின் இடையில் புகுந்து இறந்தமையால் சட்டப்படி இளவரசன் மீது எந்தக் குற்றமுமில்லை என்றும் தெரிவிக்கிறார்.
மேலும், கழுவாயாக (பிராயச்சித்தம்), பொன்னால் செய்யப்பட்ட பசுவை அந்தணர்க்கு வழங்கினால் போதுமானது என, ‘மறைமொழிந்த அறம்’ புரியச்சொல்கிறார். ஆனால் மன்னனோ,
‘‘வழக்கென்று நீர்மொழிந்தால் மற்றதுதான் வலிப்பட்டுக்
குழக்கன்றை இழந்தலரும் கோவுறுநோய்க்கு மருந்தாமோ’’ (மேற்கேள்)
என்று சொல்லித் தன்மகனைத், தேர்க்காலில் இட்டுக் கொன்று தாய்ப்பசுவின் துயரத்தைத் தானும் எய்துகிறான். இதில், மன்னன் மறைகூறும் அறத்தின்படி, பொருளை வழங்கிக் கழுவாய் (பிராயச்சித்தம்) தேடாமல், அருள்நோக்கில் பிறிதின் நோயைத் தன்நோயாகப் போற்றியதோர் மாண்பு போற்றத்தக்கது. ஆகவே, பொருளைவிட அருளே பெரிதென்பது பனுவலின் தொடக்கத்திலேயே பளிச்சிடுகிறது. மனுநீதிச்சோழன் பொருளைக் காட்டிலும் அருளை ஏற்றுப்போற்றியதால் தான் மூலநூலான திருத்தொண்டர்த் தொகையிலும் வழி நூலான திருத்தொண்டர்த் திருவந்தாதியிலும் இல்லாத இவ்வரலாற்றை, அடியவர் வரலாறாகிய தம் நூலிற்கு அடித்தளமாக்கி காட்டுகிறார் சேக்கிழார் என்று எண்ணத் தோன்றுகிறது.
அருளுக்காகவே பொருள்
அருட்கருவூலங்களாக விளங்கும் ஆலயங்களுக்குச் சென்று ஆண்டவனின் அருளை வேண்டாது. பொருளையே வேண்டுவது தற்போது அதிகரித்து வருகிறது. இப்படி, பொருளுக்காகவே அருளை நாடும் நம்முன்னர், அருளுக்காகவே பொருளை நாடிய அடியவர்களின் வரலாறு அளவிடற்கரிய வியப்பைத் தருகிறது. அருளெனப்படுவது மற்ற உயிர்களுக்கு இரங்குவதும் ஆகும். இதனை மேற்கொண்ட திருக்குறளின் மூலம் அறியலாம். ஆகவே பிற உயிர்களிடத்து அன்புகாட்டுதல் அருளெனப்படுகிறது.
அவ்வகையில்,திருவீழிமிழலை என்று ஊரில் ஒரு காலத்தில் பெரும்பஞ்சம் வந்து விடுகிறது. அப்போது திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் நமக்குப்பணி இறைவரிடம் பைந்தமிழில், பதிகம்பாடி. படிக்காசு பெற்று பஞ்சம்போக்கும் பொருட்டு, இருவரும் தனித்தனியே அடியார்தமை அமுதுசெய்வித்தல் செய்கிறார்கள்.அப்போது திருஞானசம்பந்தருக்கு இறைவன் வழங்கிய காசு குற்றமுடையதாக இருக்கிறது.
உடனே, திருஞானம்பந்தர் ‘நமக்கு நல்ல காசு கிடைக்கவில்லையே’ என்று சற்றும் பின்வாங்காமல், எண்ணித் துணிந்த கருமத்தை நிறைவேற்று கண்ணுதற் கடவுளின் பாதம் நண்ணி, பஞ்சம் போக்கினார். இதனை,
‘‘மற்றைநாள் தம்பிரான் கோயில்புக்கு
வாசி தீர்த்தருளும் எனப் பதிகம்பாடிப்
பெற்றபடி நற்ராசு கோண்டு…அமுது செய்வித்தார்’’
என்று சேக்கிழார் குறிப்பிடுகிறார்.
படமாடுங் கோயிற் பரமனிடம் பெற்ற பொருளை நடமாடுங் கோயில் நம்பர்களின் பசி போக்கப் பயன்படுத்தியதன் மூலம், திருஞானசம்பந்தரின் அருள் நோக்கத்தை அறியமுடிகிறது.
இதே போன்று, சுந்தரரும் குண்டையூர் என்ற ஊரில் பஞ்சம் வந்தகாலத்தில்,
‘‘நீள நினைந்தபடி யேனுமை நித்தலுங் கைதொழுவேன்’’
என்ற பதிகம்பாடி கோளிலியம் பெருமானிடம் நெல்லினைப்பெற்று அருள் நோக்கால் அனைவரின் பசிப்பிணி போக்கினார். இந்த அடியார்கள் நோக்கில் அருளுக்காக பொருள் பயன்படுத்தப்பட்டமை புலப்படுகிறது.
அருளே மெய்ப்பொருள், மற்றவை பொய்ப்பொருள்
மெய்ப்பொருள் நாயனார் ‘அருள்நிறை அன்பர் வேடமே மெய்ப்பொருள்’ என்று வாழ்ந்தார்; ஓர் அரசர். இவர் மற்றவை பொய்ப்பொருள் என்று உணர்தல் வேண்டும். இவர், பிற பொருட்களை பெரிதாகக் கருதாமல் ‘அருளே’ பெரிதென்று கருதியதால்தான், தன்னிடமிருந்த அத்துணைப் பொருட்களையும் அடியவர்கட்கே வழங்கி வந்தார். இதனைத்,
‘‘தேடி மாடுநீடு செல்வமும் தில்லை மன்றுள்
ஆடிய பெருமான் அன்பர்க்கு ஆவன ஆகும் என்று
நாடிய மனத்தினோடு நாயன்மார் அணைந்தபோது
கூடிய மகிழ்ச்சி பொங்கக் குறைவறக் கொடுத்து வந்தார்’’
என்ற பாடலின் மூலம் அறியலாம். இவர் ஓர் அரசராக இருந்தாலும் நாட்டினுடைய கருவூலத்தில் இருந்த பொருளையோ அல்லது தன் முன்னோர்கள் சேர்த்து வைத்திருந்த பொருளையோ அடியார்க்கு வழங்கவில்லை. தன் சொந்த உழைப்பால் ஈட்டிய பொருளையே வழங்கினார் என்பதை மேற்கண்ட பாடலின் ‘‘தேடிய’’ என்ற சொல் எடுத்துரைக்கிறது.
ஒருநாள், மெய்ப்பொருளார் போற்றும் வேடத்துடன் ‘‘மெய்யெலாம் நீறுபூசி வேணிகள் முடித்துக்கட்டி…’’ முக்திநாதன் என்பவன் மெய்ப்பொருளாரைக் கத்தியால் குத்தினான். அப்போது உதவிக்கு வந்த பணியாளன் தத்தன், முக்தநாதனை எதிர்க்க முற்படும்போது ‘‘தத்தா நமர்’’ என்று அவரை எதுவும் செய்யாதே, அவர் மெய்ப்பொருள் வேடத்தில் வந்துள்ளார். ஆவரைத் ‘தீதிலா நெறியில் விட்டுவா’ என்று கட்டளையிட்டார்.
தனக்கு உயிரே போனாலும் சரி, அருளாகப் போற்றும் மெய்ப்பொருள் வேடத்தில் வந்த ஒரு தீயவரைத் தாக்காது, ‘தன் உயிராகிய பொருளை வேண்டுமானாலும் வழங்குகிறேன்’ என்று மெய்ப்பொருளார் வாழ்ந்தமையால், நம்மால் அருளின் மேன்மையை அறியமுடிகிறது. மேலும், தான் இறக்கின்ற தருவாயில்கூட, தான் மேற்கொண்ட மெய்ப்பொருளாகிய அருள் (அருட்சாதனம் திருநீறு) போற்றும் திறத்தைக் கடைசிவரை காப்பாற்ற வேண்டும் என, தம்சுற்றத்தாருக்குக் கட்டளையிட்டு மறைந்தார். இதனைப்
‘‘பரவிய திருநீற்றன்பு பாதுகாத்து உய்ப்பீர் என்று
புரவலர் மன்றுள் ஆடும் பூங்குழல் சிந்தை செய்தார்.’’
என்று அடிகள் உணர்த்துகின்றன. ஒரு மனிதனின் இறப்பின்போது அவன் வாயிலிருந்து தெளிவாக சொற்கள் வருமாயின் அவன் அருள்வாழ்வு வாழ்ந்தவன் என்பது ஜென்ம தத்துவம் இத்தத்துவத்தின் படியும் மெய்ப்பொருளார் வாழ்வு அருள்வாழ்வு என்பது விளங்குகிறது.
மனத்தால் தேடிய பொருள்
‘‘செல்வம் என்பது சிந்தையின் நிறைவு’’ என்பார் குமரகுருபரர். பூசலார் என்ற நாயனார், சிவபெருமானுக்கு ஆலயம் அமைக்க எண்ணி, பொருட்செல்வத்தைப் புறத்தே தேடினார். வெளியே பொருட்செல்வமானது கிடைக்காத காரணத்தால், இறைவரின் அருட்செல்வம் அகத்தே இருந்து உந்த, அகத்திலேயே பொருளைத் தேடி, தினையளவு முதலான அனைத்துப் பொருட்களையும் மனத்தினாலேயே திரட்டினார். இதனை,
‘‘நினைப்பினால் எடுக்கநேர்ந்து நிகழ்வுறு நிதியமெல்லாம்
தினைத்துணை முதலாந்தேடி சிந்தையால் திரட்டிக்கொண்டார்’’
என்ற பாடலின் மூலம் அறியலாம். இப்படி தேடிய பொருளால் உள்ளத்தில் ஒரு பெருங்கோயில் அமைத்து குடமுழக்கு நடத்த நாளும் குறிக்கிறார். அதே சமயத்தில் ‘காடவர்கோன்’ என்ற அரசனும் தன் பொருட்செல்வம் கொண்டு கோயில் கட்டினான். இதனைச் சேக்கிழார் ‘‘சிவனுக்காகப் பெருஞ்செல்வம் வகுத்தல் செய்வான்’’ என்று குறிப்பிடுகிறார்.
அதே நாளில் அரசனும் குடமுழக்கு நடத்த முற்படுகிறான். அப்போது இறைவன் காடவர்கோனின் கனவில் தோன்றி,
‘‘நின்றவூர்ப் பூசலன்பன் நெடிதுநாள் நினைந்துசெய்த
நன்று நீடு ஆலயத்து நாளைநாம் புகுவோம் நீயுமிங்கு
ஒன்றிய செயலை நாளை ஒழிந்துபின் கொள்வாய் என்று
கொன்றைவார் சடையார் தொண்டர் கோயில் கொண்டாருளிப் போந்தார்’’
நாளை, நாம் பூசலார் கட்டிய கோயிலுக்குப் போகிறோம். நீ வேறொருநாளில் குடமுழக்கை வைத்துக் கொள் என்கிறார். இதன்மூலம் பொருளைவிட ஆண்டவன், அருளுக்கே அருள் வழங்குகிறார் என்பதை அறியமுடிகிறது. மேலும், அடியார் நோக்கில் ஒரு செயலைச் செய்வதற்கு, யாதொரு பொருளும் இல்லாவிட்டாலும் மனத்திண்மை மட்டும் அருளால் இருந்தால் போதும் என்பதைப் பூசலார் வரலாறு புகல்கிறது. இவ்வரலாறு ‘‘நினைப்பவர் மனம் கோயிலாகக் கொண்டவன்’’ என்ற தேவார அடிக்கும், ‘‘உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்’’ என்ற திருமந்திர அடிக்கும் உயிர்ப்பு ஊட்டுவதாகும்.
பெரியபுராணத்தில் இடம் வகிக்கும் அனைத்து அடியவர்களும், தன் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும் அருளே காரணமென்று கருதினார். ஆண்டவனை அடிபணிவதற்கும்கூட ஆண்டவனின் அருளே துணை செய்ய வேண்டும்.
இதனைத் தான் மாணிக்கவாசகர், ‘‘அவன் அருளாலே அவன்தாள் வணங்கி’’ என்று பாடுகிறார்.
அவ்வகையில், அப்பரடிகள் மாற்றுச்சமயமாகிய சமண சமயம் சார்ந்து சைவ சமயம் சாராது சிலகாலம் கழித்தமைக்குக் காரணம், இறைவரின் இன்னருள் இல்லாமைதான். இதனைச் சேக்கிழார்,
‘‘நம்பர் அருளாமையினால் கொல்லாமை மறைந்துறையும் அமண் சமயம் குறுகுவார்’’
என்று குறிப்பிடுகிறார். மேலும் இறைவர் தம்மை நல்வழிப்படுத்த சோதனையைக் கூட அருளால் கிடைத்ததே என்று கருதுபவர்கள் அடியவர்கள். அவ்வகையில் மாற்றுச் சமயத்திலிருந்து அப்பரடிகளை ஆட்கொள்ள கொடுத்த, ஆற்றமுடியாத சூலைநோயையும் கூட இறைவன், தம்மை உய்விக்கும் நோக்கில் அருளினார் என்று அப்பர் சொல்வதாக,
‘‘பிறதுறையினின்று ஏற, அருள் பெருஞ் சூலையினால் ஆட்கொள்ள’’ என்று சேக்கிழார் குறிப்பிடுகிறார். இன்பதுன்பம் இரண்டும் இறையருளே என்று நோக்கியோர் அடியார். மேலும், தனக்கு ஒரு துன்பம் வந்தாலும் அதனை ஒரு பொருட்டாகக் கருதாமல், பிற உயிர்களுக்கு அருள் செய்கை செய்வதை மேற்கொண்டனர் அடியவர்கள். சான்றாக, திலகவதியார் தம் இளமையில் தன்னை மணஞ்செய்யவிருந்த கணவர் இறந்துவிட, தாய் தந்தையரும் இறந்துவிடுகின்றனர். அப்போது, தன்னுடைய துன்பத்தை விடுத்து, அருள்நோக்கில் திருத்தொண்டுகள் செய்து வாழ்ந்தார். இதனை, ‘‘அம்பொன்மணி நூல் தாங்காது அனைத்துயிர்க்கும் அருள்தாங்கி’’ என்ற அடி உணர்த்துகிறது. மேலும், பொருளைத் தனக்கெனப் பயன்படுத்தாது அருளுக்காகப் பயன்படுத்தி பல அறங்கள் செய்தார் என்பதனை,
நிதியளித்துக் கருணையினால் ஆசில் அறச்சாலைகளும் தண்ணீர்ப்பந்தரும் அமைப்பார்
என இயம்புகிறார் சேக்கிழார்.
பொருளில் தொடங்கி அருளில் நிறைவு
‘பொருளில்லார்க்கு இவ்வுலக மில்லை அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லாகி ஆங்கு’’
என்ற திருக்குறள், பூவுலக வாழ்விற்குப் பொருளும் வானுலக வாழ்விற்கு அருளும் தேவை என்கிறது. அவ்வண்ணம், பெரியபுராணத்தின் பாட்டுடைத்தலைவர் சுந்தரமூர்த்தி நாயனார், இறைவரால் தடுத்தாளப்பெற்று இறைவனின் பதிகள்தோறும் பதிகங்கள்பாடி, பைந்தமிழைப் பதிக்கிறார். அவ்வரிசையில், தொடக்கத்தில் இந்த உலக வாழ்விற்குத் தேவையான பொருளையே வேண்டுமென இறைவனிடம் வேண்டுகிறார்.
‘‘பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை
போகமும் திருவும் புணர்ப்பானை….’’ என்றும், பாடியும்
‘‘தருகிலாப் பொய்மையாளரைப் பாடாதே எந்தை
புகலூர் பாடுமின் புலவீர்காள்
இம்மையேதரும் சோறும் கூரையும்’’
என்று இம்மையில் பொருளே தேவையென்று புலவர்களுக்குப் புகல்கிறார். மேலும்
‘‘கொடுக்கிலாதானைப் பாரியே என்று கூறினும் கொடுப்பாரில்லை’’ என்றும் பாடுகிறார்.
பின்னர், திருநாகைக்காரோணத்தில் தனக்குத் தேவையான உணவு, உடை, ஆபரணம் உள்ளிட்ட பலவற்றையும்
‘‘முத்தாரம் இலங்கிமிளார் மணிவயிரக் கோவை
மெய்க்கு இனிதா நாறும் கத்தாரி கமழ் சாந்து’’ வேண்டியும்
‘‘காம்பினொடு நேத்திரங்கள் பணித்தருள வேண்டும்’’ என்றும்
வாட்டமெலாம் தீரக்கட்டி எமக்கு ஈவதுதான் எப்போது’’ என்றும்
‘‘கந்தமுதல் ஆபரணம் ஆடை பண்டாரத்தே எனக்குப் பணித்தருள வேண்டும்’’
என்றும்,
‘‘பட்டோடு சாந்தம் பணித்தருள வேண்டும்’’ என்றும்
‘‘அருநிதியம் அதனில் தோற்றமிகு
முக்கூறில் ஒருகூறு வேண்டும்’’ என்றும்
‘‘பொற்பூவும் பட்டிகையும் புரிந்தருள வேண்டும் என்றும்,
‘‘கறிவிரவு செஞ்சோறு முப்போதும் வேண்டும்’’ என்றும், பொருட்பட்டியலிட்டு வேண்டுகிறார். ஒரு நிலையில் தன்னிறைவு எய்தி, கயிலை செல்லும் நிலையில் பொருட்செல்வங்கள் அனைத்தையும் விடுத்து, ஆண்டவனின் அருளையே இரந்து, ‘‘நாயினேனைப் பொருட்படுத்து’’ என்று பாடி தன்னை ஒரு நாய் என்றும், என்னை ஒரு பொருளாக ஏற்றுக்கொள் என்றும் பாடுகிறார்.
இவ்வண்ணம், சுந்தரமூர்த்தி நாயனார் அவர்கள் பொருளில் வாழ்வைத் தொடங்கினாலும், அணிதில்லை. சிற்றம்பலத்து அரனீன் அருளால் அடைக்கலம்கண்டு, மாசற்ற ஈசரருள் ஒன்றையே வேண்டி, இந்த உலகவாழ்வு நிறைவுசெய்து, நெஞ்சை அள்ளும் ‘தானெனை முன்படைத்தான்’ என்ற பதிகத்தைத் திருஅஞ்சைக்களத்தில் பாடத்தொடங்கி ஆனை மீதேறி, கயிலை சென்று பதிகம் நிறைவு செய்ததைச் சேக்கிழார்,
‘‘தம்பிரான் அருளால் பொங்கும் மாமதம்
பொழிந்த வெள்ளைனையின் உம்பர்
போற்றிடப் போந்த, நங்கள் நாவலூர்க்
காவலர் நண்ணினார் அண்ணலார் திருமுன்பு’’
என்கிறார். இவ்வண்ணம் சுந்தரர் தம் வாழ்வைப் பொருளில் தொடங்கி அருளில் நிறைவு செய்துள்ளார் என்பது புலப்படுகிறது.
நிறைவுரை
கொள்கையினால் உயர்ந்த அடியார்கள் யாவரும் பொருளை ஒரு பொருளாகப் போற்றாமல் அருளையே போற்றினார் என்பதை அவர்களின் நோக்கில் காணமுடிகிறது. பொருள் அருளுக்குள் அடங்கும். ஆனால், அருள் பொருளுக்குள் அடங்காது என்பதை இக்கட்டுரையின் மூலம் உணரலாம்.
சிவ.சதீஸ்குமார்
