×

கடையை உடைத்து கேரட் விதை திருடியவர் கைது

*தொடர் கைவரிசையில் ஈடுபட்டது அம்பலம்

ஊட்டி : ஊட்டியில் கடையை உடைத்து கேரட் விதை திருடியவர் கைது செய்யப்பட்டார். நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் ஊட்டி எட்டின்ஸ் சாலையில் உரம் மற்றும் விதை விற்பனை கடை நடத்தி வருகிறார். நீலகிரியில் இந்த ஆண்டுக்கான முக்கிய சாகுபடி மே மற்றும் ஜூன் மாதத்தில் தொடங்கும்.

இதற்காக விதை விற்பனை கடந்த மாதத்தில் அதிகமாக இருந்தது. கடந்த மாதம் 11ம் தேதி இரவு கடையில் விற்பனையை முடித்துவிட்டு உதயகுமார் பூட்டிவிட்டு சென்றார். மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது பூட்டு உடைந்து கிடந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கடைக்குள் சென்று பார்த்தார். அப்போது கடைக்குள் ரூ.1 லட்சம் பணம், விற்பனை கொள்முதல் விவரங்கள் அடங்கிய மடிக்கணினி மற்றும் கேரட் விதைகள் திருடு போயிருந்தது. இது குறித்து உதயகுமார் ஊட்டி நகர மத்திய காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

உடனடியாக தடயவியல் நிபுணர்கள் வந்து சம்பவ இடத்தில் சோதனை செய்து கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, ஊட்டியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக திருட்டில் ஈடுபட்டு வரும் ஊட்டி மஞ்சனகொரை அன்பு அண்ணா காலனியை சேர்ந்த சண்முகம் என்கிற பூக்கடை சண்முகம் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து கேரட் விதைகள், மடிக்கணினி, பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். கடந்த ஆண்டும் இவர் ஊட்டியில் இதேபோல் மற்றொரு கடையில் புகுந்து கேரட் விதைகளை திருடி விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Udayakumar ,Neelgiri District Ooty ,Ooty Eatins Road ,
× RELATED ஓமலூர் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் பாமக...