×

ஓமலூர் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் பாமக ராமதாஸ் அணி வேட்பாளர் மீது தாக்குதல்: செருப்பை கழற்றி அடித்ததால் பரபரப்பு

ஓமலூர்: ஓமலூர் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்திலேயே, பாமக ராமதாஸ் அணி வேட்பாளர் மீது சரமாரி தாக்குதல் நடத்தி, செருப்பால் அடித்து கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்ற தொகுதியில், பாமக ராமதாஸ் அணி சார்பில், டேனிஸ்பேட்டையைச் சேர்ந்த சுரேஷ்குமார் (47) என்பவர் போட்டியிட்டார். இவர் காஞ்சிபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், தேர்தல் செலவு கணக்கு தொடர்பாக சுரேஷ்குமாருக்கும், அதே அணியின் மாநில இளைஞரணி செயலாளர் தமிழன் செந்தில்குமார் என்பவருக்கும் இடையே மோதல் வெடித்தது.

சுரேஷ்குமார் தனக்கு லட்சக்கணக்கில் பணம் தர வேண்டியுள்ளதாக செந்தில்குமாரும், தனது ஜீப்பை செந்தில்குமார் சட்டவிரோதமாக வைத்திருப்பதாக சுரேஷ்குமாரும், ஓமலூர் காவல் நிலையத்தில் பரஸ்பரம் புகார் அளித்திருந்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ரத்னகுமார் முன்னிலையில் நேற்று விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணை முடிந்து வேட்பாளர் சுரேஷ்குமார் வெளியே வந்தபோது, அங்கு காத்திருந்த டேனிஸ்பேட்டை வாளையாந்தோப்பு பகுதியைச் சேர்ந்த அய்யாவு (50) என்பவர், திடீரென சுரேஷ்குமாரை சரமாரியாகத் தாக்கினார்.

மேலும், அவர் தனது செருப்பைக் கழற்றி, சுரேஷ்குமாரை அடித்து கொலை மிரட்டல் விடுத்தார். காவல் நிலையத்திற்குள்ளேயே நடந்த இந்த திடீர் தாக்குதலால் அதிர்ச்சியடைந்த போலீசார், உடனடியாக அய்யாவுவை மடக்கிப் பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், கொரோனா காலத்தில், சுரேஷ்குமார் தன்னிடம் வாங்கிய பணத்தைத் திருப்பி தராத கோபத்தில் தாக்கியதாக, போலீசாரிடம் கூறியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து, போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து வேட்பாளர் சுரேஷ்குமார் கூறுகையில், `என்னுடைய ஜீப்பை ராமதாஸ் பாமக இளைஞரணி நிர்வாகி தமிழன் செந்தில்குமார் வைத்து கொண்டு கொடுக்க மறுத்தார். அதை பெற்று தரக்கோரி, காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தேன். போலீசார் விசாரித்த போது, அவர் வண்டி தன்னிடம் தான் இருக்கிறது. அவருக்கும் எனக்கும், தேர்தல் செலவு கணக்கு எல்லாம் முடிக்கணும். அது முடித்ததும் வாகனத்தை கொடுப்பதாக கூறினார். மேலும், இது தொடர்பாக கட்சி மட்டத்தில் பேசி முடிவு செய்வதாக பேசப்பட்டது. இந்நிலையில், காவல் நிலையத்தில் இருந்த என்னை தாக்கி, அய்யாவு கொலை மிரட்டல் விடுத்தார்.

அவர் ஏற்கனவே என்னிடம் கொஞ்சம் பிரச்னை பண்ணியிருந்தார். அய்யாவு உட்பட 25 பேர் சேர்ந்து, என்னை தாக்க இருப்பதாக ஒரு எனக்கு தகவல் வந்தது. போலீஸ் ஸ்டேஷன் என்பதால் தைரியமாக வந்தேன். ஆனால், அய்யாவு ஸ்டேஷனுக்கு உள்ளேயே புகுந்து, என்னை அடித்து கொலை மிரட்டல் விடுத்தார். இதில், எனது முகத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளது,’ என்றார். போலீஸ் ஸ்டேஷன் வளாகத்திலேயே வேட்பாளர் தாக்கப்பட்ட சம்பவம் ஓமலூர் பகுதியில் காட்டுத்தீ போலப் பரவி, தொண்டர்களிடையே பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

Tags : Bamaka Ramadas ,Omalur police station ,Omalur ,Ramadas ,Salem District ,Omalur Assembly Constituency ,
× RELATED பெசன்ட் நகர் கடற்கரை அருகே நண்பருடன்...