×

மெட்ரோ ரயில் பயணிகளுக்காக இன்று முதல் ‘சிங்கார சென்னை அட்டை’ அமல்: மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: மெட்ரோ ரயில் பயணிகளுக்காக ‘சிங்கார சென்னை அட்டை’ இன்று முதல் அமலுக்கு வருகிறது. பயணிகள் தங்களது பழைய அட்டையில் உள்ள மீதமுள்ள பயணத்தை புதிய அட்டைக்கு மாற்றி கொள்ளலாம் என என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் முதல் கட்டத்தில் 54 கிலோ மீட்டர் தொலைவிற்கு இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. விமான நிலையம் முதல் விம்கோ நகர் மற்றும் பரங்கிமலை முதல் சென்ட்ரல் என 2 வழித்தடங்களில் தற்போது மெட்ரோ ரயில் இயங்குகிறது. சென்னையின் வளர்ச்சி மற்றும் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில், 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தப் பணிகளை 2028ம் ஆண்டு இறுதிக்குள் முடித்து, மெட்ரோ ரயில்களை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயிலில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 3 லட்சம் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். பயணிகளின் வசதிக்காக, டிக்கெட் கட்டணம் செலுத்த பல்வேறு நவீன மற்றும் எளிமையான டிஜிட்டல் முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து நிலையங்களிலும் பணமில்லா பரிவர்த்தனைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, பெரும்பாலான சேவைகள் டிஜிட்டல் முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளன.

பயணிகள் ‘சென்னை மெட்ரோ ஆப்’ செயலியை பதிவிறக்கம் செய்து, அதன்மூலம் பயணச்சீட்டுகளை பெறலாம். மேலும், வாட்ஸ்-அப் வழியாக க்யூஆர் கோடு டிக்கெட்டுகள் பெறும் வசதியும் உள்ளது. ரயில் நிலையங்களில் க்யூஆர் கோடு ஸ்கேன் செய்து, டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்தி டிக்கெட் வாங்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் கட்டணம் செலுத்தும் வசதியும் பயணிகளுக்கு சலுகைகள் உள்ளன. பயண அட்டைகள் மூலம் பயணம் செய்தால் 10 முதல் 20 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டு வந்தது. மேலும், ரூ.100 கட்டணத்தில் நாள் முழுவதும் தடையின்றி பயணிக்க சிறப்பு சலுகை டிக்கெட்டுகளும் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இன்று முதல் பழைய மெட்ரோ பயண அட்டைகள் பயன்பாட்டிலிருந்து முழுமையாக விலக்கப்படுகின்றன. அதனால், இனி அந்த அட்டைகளை ரீசார்ஜ் செய்ய முடியாது என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் ஒரே அட்டையில் அனைத்து போக்குவரத்தையும் உள்ளடக்கிய பயணத்தை மேற்கொள்ளும் வகையில் சிங்கார சென்னை அட்டை கடந்த 2023ம் ஆண்டு மெட்ரோ நிர்வாகம் அறிமுகப்படுத்தியது. அதன்படி ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படி, இந்தியா முழுவதும் உள்ள பொதுப் போக்குவரத்து சேவைகளில் ஒருங்கிணைந்த மற்றும் தடையற்ற பயணத்தை உறுதி செய்யும் நோக்கில், இன்று முதல் இந்த அட்டைக்கு முழுமையாக மாற்றப்படுகிறது. இதன்படி, மெட்ரோ ரயில்களில் பயணிக்கவும், மெட்ரோ வாகன நிறுத்தங்களை பயன்படுத்தவும், பயணிகள் தங்களது பழைய அட்டைகளில் உள்ள மீதமுள்ள தொகையை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மொபைல் செயலி மூலம் ‘சிங்கார சென்னை அட்டைக்கு’ மாற்றிக்கொள்ளலாம் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags : Metro Rail ,Metro Administration ,Chennai ,
× RELATED விமான எரிபொருள் விலை 5% உயர்வு:...