அம்பாலா: அம்பாலா அருகே ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயன்றபோது குண்டு வெடித்ததில் மர்ம நபர் உடல் சிதறி பலியானார். பஞ்சாப் மற்றும் அரியானா எல்லைப் பகுதியான ஷம்பு ரயில் தண்டவாளத்தில் நேற்று இரவு 10 மணிக்கு ஷம்பு – அம்பாலா இடையே சரக்கு ரயில்கள் செல்லும் பிரத்யேக தடத்தில் பயங்கர குண்டு வெடிப்பு நடந்தது.
தண்டவாளத்தை தகர்க்க முயன்ற மர்ம நபர் ஒருவரின் உடல் சிதறிய நிலையில் அங்கிருந்து மீட்கப்பட்டது. சம்பவ இடத்திலிருந்து ஒரு செல்போன் சிம் கார்டு மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து வருண் சர்மா (பாட்டியா எஸ்.எஸ்.பி.,) கூறுகையில், ‘ஆரம்பகட்ட ஆய்வின்படி, இது ரயில் பாதையை தகர்க்க நடத்தப்பட்ட சதி என்பது தெரிகிறது. முன்கூட்டியே குண்டு வெடித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்.
தற்போது பஞ்சாப் போலீசார், ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக பஞ்சாப் மாநிலம் சிர்ஹிந்த் பகுதியில் கடந்த ஜனவரி மாதத்தில் சரக்கு ரயில் இன்ஜின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இந்த விபத்தில் இன்ஜின் பலத்த சேதமடைந்ததுடன், ரயில் பைலட் ஒருவரும் காயமடைந்தார். இச்சம்பவத்தை தொடர்ந்து முக்கிய ரயில் போக்குவரத்து வழித்தடங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
