×

மதுபான கொள்கை ஊழல் வழக்கு விவகாரம்; ஐகோர்ட் நீதிபதி முன் ஆஜராக மாட்டேன்: நீதிமன்றத்தை புறக்கணித்து கெஜ்ரிவால் கடிதம்

 

புதுடெல்லி: மதுபான கொள்கை வழக்கில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜராகப்போவதில்லை என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில், 2024ம் ஆண்டு முதல் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா முன்னிலையில் இனிமேல் ஆஜராகப் போவதில்லை என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடியாக முடிவெடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மாவிடம் இருந்து எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை முற்றிலுமாக சிதைந்துவிட்டது. அதனால் மகாத்மா காந்தியின் சத்யாகிரகப் பாதையைப் பின்பற்ற முடிவு செய்துள்ளேன். எனது மனசாட்சியின் குரலுக்குச் செவிசாய்த்து இந்த முடிவை எடுத்துள்ளேன். இந்த வழக்கில் நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் உரிமையை அவர் கொடுத்துள்ளார்.

நேரிடையாகவோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ உயர் நீதிமன்றத்தில் இனிமேல் ஆஜராகப்போவதில்லை’ என்று தெரிவித்துள்ளார். முன்னதாக, நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மாவின் பிள்ளைகள் ஒன்றிய அரசின் வழக்கறிஞர்களாகப் பணியாற்றுவதால், இந்த வழக்கில் ஒருதலைப்பட்சமான முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறி, அவர் விசாரணையில் இருந்து விலகக் கோரி கெஜ்ரிவால் மனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால், இந்த வாதங்களை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்றம், வெறும் யூகங்களின் அடிப்படையில் இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைக்க முடியாது என்றும், ‘நீதிமன்ற அறை என்பது கற்பனை நாடக மேடை கிடையாது’ என்றும் காட்டமாகத் தெரிவித்தது. போதிய ஆதாரங்கள் இல்லாமல் நீதிபதி மீது குற்றச்சாட்டுகளை அடுக்கியதைக் கண்டித்த நீதிமன்றம், இந்த வழக்கை தள்ளுபடி செய்தது.

 

Tags : iCourt ,Kejriwal ,New Delhi ,Atmi Party ,Arvind Kejriwal ,Delhi High Court ,Delhi ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் 62 மையங்களில் 4ம்...