×

மேகதாது அணை குறித்து ஒரு சார்பாக விவாதித்து முடிவெடுக்கப்படும் ஆபத்து; காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க அன்புமணி வலியுறுத்தல்

 

சென்னை: பாமக தலைவர் அன்புமணி இன்று வெளியிட்டுள்ள அறி்க்கை: தமிழ்நாடு மற்றும் புதுவைக்கு காவிரியில் தண்ணீர் வழங்குவது குறித்து விவாதிப்பதற்கான காவிரி மேலாண்மை ஆணையத்தின் 50ம் கூட்டம் டெல்லியில் வரும் 29ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தில் அங்கம் வகிக்கும் 4 மாநிலங்களில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் ஆகிய மாநிலங்களில் முழு அதிகாரம் பெற்ற அரசுகள் இல்லாத சூழலில் இந்தக் கூட்டத்தை நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும். காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் காவிரி நடுவர் மன்றமும், உச்சநீதிமன்றமும் அளித்தத் தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தருவது குறித்து மட்டும் விவாதிக்கப்பட்டால் அதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்டுவதற்கு குறுக்கு வழியிலாவது அனுமதி பெற்றுவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கும் கர்நாடக அரசு, இப்போதுள்ள சூழலை பயன்படுத்திக் கொண்டு மேகதாது அணை குறித்து காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்த முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

மேகதாது அணை குறித்து காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டால், தமிழ்நாட்டின் சார்பில் எத்தகைய நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்பது குறித்து கூட்டத்தில் பங்கேற்கும் நீர்வளத்துறை செயலாளருக்கு எந்த வழிகாட்டுதலும் வழங்கப்படவில்லை. தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்து முடிவுகள் அறிவிக்கப்படாத நிலையில், இப்போதுள்ள அரசால் எந்தக் கொள்கை முடிவுகளையும் எடுக்க முடியாது. இத்தகைய சூழலில் கூட்டத்தில் பங்கேற்கும் அதிகாரிகள் தவறான நிலைப்பாட்டை எடுத்தால் அது தமிழ்நாட்டுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

எனவே, மேகதாது அணை விவகாரத்தில் காவிரி பாசன மாவட்ட விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக முடிவெடுக்கப்படுவதைத் தவிர்க்க வரும் 29ம்தேதி டெல்லியில் நடைபெறவுள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் ஆகிய மாநிலங்களில் புதிய அரசுகள் பங்கேற்கும் வரை ஒத்திவைக்க வேண்டும். ஒருவேளை கூட்டத்தை நடத்துவது தவிர்க்க முடியாதது என்றால், அதில் மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்கப்படாது என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் முன்கூட்டியே உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Tags : Megadhat Dam ,Anbumani ,Cavieri Management Commission ,Chennai ,Caviar Management Commission ,Delhi ,Tamil Nadu ,Puduju ,Pamaka ,President ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,029 கனஅடி