திருமலை: அமெரிக்க-ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் கப்பல் நிறுத்தம் எதிரொலியால் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆனால் நிலைமை படிப்படியாக மாறி வரும் நிலையில் தற்போது ஆந்திராவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை என்று அதிகாரிகள் கூறினாலும், பல்வேறு இடங்களில் பெட்ரோல், டீசல் கிடைக்காததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக திருப்பதி, கடப்பா, விஜயவாடா, விசாகப்பட்டினம், கர்னூல் உள்ளிட்ட பல மாவட்டத்தில் கையிருப்பு இல்லாததால் பல பெட்ரோல் பங்க் மூடப்பட்டுவிட்டன. சில பெட்ரோல் பங்க்குகள் மட்டுமே இயங்குகிறது. அங்கு கார், இருசக்கர வாகன ஓட்டிகள் படையெடுப்பதால் கூட்டம் அலைமோதுகிறது.
1 அல்லது 2 லிட்டர் பெட்ரோல் வாங்கி வந்தவர்கள், இப்போது வாகன டேங்க்கை முழுவதும் நிரப்பிக்கொள்கின்றனர். அதேபோல் சிலர் கேன்களில் பெட்ரோல், டீசல் வாங்கி எடுத்து செல்கின்றனர். கிராமப்புறங்களில் நெல் அறுவடை நடைபெற்று வருகிறது. டீசல் தட்டுப்பாடு காரணமாக அறுவடை இயந்திரங்களை வரவழைப்பதில் சிரமப்படுகின்றனர். இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர் அறுவடை செய்ய முடியாமல் உள்ளது. இதுகுறித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கூறுகையில், ‘தினமும் எரிபொருள் வழங்கும் 3 எண்ணெய் நிறுவனங்கள் 4 அல்லது 5 நாட்களுக்கு ஒருமுறைதான் டேங்கர்களை அனுப்புகிறது. இதனால் போதிய அளவில் பெட்ரோல், டீசல் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்படுத்துகிறது’ என்கின்றனர்.
