×

தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்ததை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகளில் தளர்வு: பணம் எடுத்துச் செல்ல உள்ள கட்டுப்பாடுகள் நீக்கம்

சென்னை: தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நிறைவடைந்ததை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகளில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பணம் எடுத்துச்செல்வதற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 சட்டப்பேரவை தொகுதிக்குமான தேர்தல் நேற்று முன்தினம் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. காலை 7 மணியில் இருந்தே வாக்காளர்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இளைஞர்கள், இளம்பெண்கள் உற்சாகத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்தனர். சட்டப்பேரவை தேர்தலில் தமிழகத்தில் 85.16 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்கிடையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு இருந்தன. வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் தமிழகம் முழுவதும் வாகன சோதனை நடத்தி தீவிரமாக கண்காணித்து வந்தனர். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு செல்வதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மார்ச் 15ம் தேதி முதல் ஏப்ரல் 22ம் தேதி வரை தமிழகத்தில் பறக்கும்படையினர் நடத்திய சோதனையில் சுமார் ரூ.1,262 கோடி மதிப்புள்ள பணம், தங்கம், வெள்ளி, பரிசு பொருட்கள், போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இதில் பணமாக மட்டும் ரூ.543 கோடி பறிமுதல் செய்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறி இருந்தார்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்ததை அடுத்து, தேர்தல் நன்னடத்தை விதிகளில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்பு குழு திரும்பப் பெறப்பட்டன. அதேநேரம் மற்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் மே 4ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். அனைத்து பூத்களிலும் பதிவான வாக்கு விவரங்களை தேர்தல் பார்வையாளர்கள் நேற்று சரிபார்த்தார்கள். இதில் குளறுபடி கண்டறியப்பட்டால் அந்த பூத்தில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவுக்கு அவசியம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் மொத்தமுள்ள 62 வாக்கு எண்ணிக்கை மையங்களில் பதிவான வாக்கு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. அங்கு துணை ராணுவம், போலீசார் இணைந்து 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பதிவான வாக்குகள் மே 4ம் தேதி காலை 8 மணிக்கு எண்ணப்பட்டு, உடனுக்குடன் முன்னணி நிலவரங்களை தெரிவிக்க தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

* தமிழகத்தில் தேர்தல் தேதி மார்ச் 15ம் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
* மார்ச் 15ம் தேதி முதல் ஏப்ரல் 22ம் தேதி வரை தமிழகத்தில் பறக்கும்படையினர் நடத்திய சோதனையில் சுமார் ரூ.1,262 கோடி மதிப்புள்ள பணம், தங்கம், வெள்ளி, பரிசு பொருட்கள், போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
* தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்ததை அடுத்து, தேர்தல் நன்னடத்தை விதிகளில் தளர்வு அளிக்கப்பட்டு, பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்பு குழு திரும்பப் பெறப்பட்டன.

Tags : Tamil Nadu ,Chennai ,
× RELATED பக்தர்களின் வழிபாட்டு முறையில்...