* வீழ்ந்தது செல்ஸீ பிரைட்டன் அதிரடி
லண்டன்: பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் நேற்று பலம் வாய்ந்த செல்ஸீ – பிரைட்டன் அணிகள் மோதின. துவக்கம் முதல் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரைட்டன் அணியின் பெர்டி கேடியோக்லு, 3வது நிமிடத்தில் முதல் கோல் போட்டு அசத்தினார். அவரைத் தொடர்ந்து, அந்த அணியின் ஜேக் ஹின்செல்வுட் 50வது நிமிடத்திலும், டேனி வெல்பெக் 90+1வது நிமிடத்திலும் மேலும் 2 கோல் போட்டனர். மாறாக செல்ஸீ அணியால் ஒரு கோல் கூட போட முடியவில்லை. எனவே, 3-0 என்ற கோல் கணக்கில் பிரைட்டன் அணி அபார வெற்றி பெற்றது.
* சபலென்காவுக்கு லாரஸ் விருது
மாட்ரிட்: சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான லாரஸ் விருதுகள், மாட்ரிட் நகரில் நடந்த விழாவில் வழங்கப்பட்டன. ஆண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனை விருது, பெலாரசை சேர்ந்த டென்னிஸ் சூப்பர் ஸ்டார் அரீனா சபலென்காவுக்கு (27) வழங்கப்பட்டது. ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர் விருது, ஸ்பெயினை சேர்ந்த உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரர் கார்லோஸ் அல்காரசுக்கு வழங்கப்பட்டது. சிறந்த விளையாட்டு அணிக்கான விருது, பாரிஸ் ஜெர்மேன் கால்பந்து அணிக்கு வழங்கப்பட்டது. உலகின் சிறந்த இளம் விளையாட்டு வீரர் விருது, ஸ்பெயின் நாட்டின் கால்பந்து வீரர் லாமின் யாமலுக்கு வழங்கப்பட்டது.
* பிரெஞ்ச் ஓபனில் ஆட வீனஸ் விருப்பம்
மாட்ரிட்: அமெரிக்காவை சேர்ந்த முன்னாள் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் (45), 7 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை படைத்தவர். 45 வயதானபோதும் அவ்வப்போது டென்னிஸ் போட்டிகளில் ஆடி வருகிறார். சமீபத்தில் அவர் ஆடிய 10 போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்தார். நேற்று முன்தினம் நடந்த மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கேட்லின் குவெடோவிடம் தோல்வியை தழுவினார். தோல்விகளை கண்டு கலங்காத வீனஸ், அடுத்த மாதம் துவங்கவுள்ள பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகளில் ஆட பரிசீலித்து வருகிறார்.
