×

மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது; மண்டபத்தில் 600 விசைப்படகுகள் கரை நிறுத்தம்: 4 ஆயிரம் மீனவர்கள் வீடுகளில் முடங்கினர்

 

மண்டபம்: தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கிய நிலையில், மண்டபத்தில் 600 விசைப்படகுகள் கரைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. இதனால், 4 ஆயிரம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளில் மீன்கள் இனப்பெருக்கத்திற்காகவும், கடலில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாகவும், ஆண்டுதோறும் ஏப்.15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் கடைப்பிடிக்கப்படும். இதன்படி இந்தாண்டு நேற்று இரவு மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது.

இதனால், ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கடலோரப் பகுதியில் 620 விசைப்படகுகளை மீனவர்கள் நேற்று மீன் பிடித்து கரை வந்த பிறகு மண்டபம் கோவில்வாடி, வடக்கு கடற்கரை மற்றும் மேற்கு வாடி, தெற்குவாடி ஆகிய கடலோரப் பகுதிகளில் கடலில் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தினார்கள். மேலும் படகுகளில் வைத்திருந்த மீன்பிடி சாதனங்களான மீன்பிடி வலைகள், குளிர்சாதனப் பெட்டிகள், டீசல் சேமிப்பு கேன்கள் உள்பட அனைத்து பொருட்களையும் பாதுகாப்பாக வீடுகளுக்கு எடுத்துச் செல்லும் பணியை மீனவர்கள் தொடங்கி உள்ளனர்.

4 ஆயிரம் மீனவர்கள் முடங்கினர்
மீன்பிடி தடைக்காலம் தொடங்கியதால் 61 நாட்களுக்கு படகில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு வேறு எந்த மாற்று தொழிலும் கிடையாது. இதேபோல, கரையில் மீன்களை உலர வைக்கும் பணியில் ஈடுபடும் மீனவர்கள், வியாபாரிகளுக்கு மீன்களை விற்பனை செய்யும் தொழிலாளிகளுக்கும் மாற்று தொழில்கள் கிடையது. இதனால் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

உணவு கடைகள், தேநீர் கடைகள், விசைப்படகுகளுக்கு உதிரி பாகங்கள் வழங்கும் கடைகள் வைத்திருக்கும் உரிமையாளர்கள் மீன்களை ஏற்றி செல்லும் மூன்று சக்ரவாகனங்கள், ஆட்டோ தொழிலாளிகள், பணியாளர்களுக்கும் இந்த 61 நாட்களும் வருவாய் பாதிக்கப்படும்.

Tags : Tamil Nadu ,
× RELATED கமுதி அருகே பொன்னு விளையுற பூமியில்...