சென்னை: தமிழில் ‘ஸ்டார்’, ‘பிளாஸ்ட்’, ‘இதயம் முரளி’ ஆகிய படங்களின் மூலம் கவனத்தை ஈர்த்தவர், பிரீத்தி முகுந்தன். அடுத்து ஹரீஷ் கல்யாண் ஜோடியாக ‘தாஷமக்கான்’ என்ற படத்திலும், இந்தியில் ‘நாக்ஸில்லா’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். மாடலிங்கில் இருந்து திரையுலகிற்கு வந்துள்ள அவர், ஆரம்பகாலத்தில் எதிர்கொண்ட அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், ‘நான் மாடலிங் துறையில் இருந்தபோது ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது. அப்போது எனக்கு வயது 18. ஆனால், என்மீது எனக்கே நம்பிக்கை இல்லை. என்னால் ஆடிஷன் செய்ய முடியாது, என்னை நானே அவமானப்படுத்திக் கொள்வேன், எனக்கு நடிக்க தெரியாது என்று பல்வேறு பயங்களுடன் இருந்தேன்.
அப்போது எனது பெற்றோர் நேரடியாக கல்லூரி விடுதிக்கு வந்து என்னிடம் பேசினார்கள். ‘நீ ஏன் முயற்சி செய்து பார்க்கக்கூடாது? பரவாயில்லை, இதுதான் தொடக்கம். நீ முயற்சி செய்தே ஆக ேவண்டும்’ என்று என்னை உற்சாகப்படுத்தி, ஆடிஷனுக்கு அனுப்பி வைத்தார்கள். அந்த வார்த்தைகள்தான் எனக்கு முதல் அடியை எடுத்து வைக்க துணிச்சலை கொடுத்தது. ஆடிஷனில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், அந்த அனுபவம்தான் சினிமா மீது எனக்கு உண்மையான காதலையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தியது’ என்றார்.
