×

மினிமம் கியாரன்ட்டி முறையை கைவிட்ட ஓடிடி நிறுவனங்கள்: தமிழ் சினிமாவுக்கு பேரிடி

சென்னை: திரைப்படத் தயாரிப்பில் நீண்ட காலமாக இருந்து வந்த உத்தரவாத தொகை (Minimum Guarantee – MG) அடிப்படையில் படங்களை வாங்கும் முறையை ஓடிடி நிறுவனங்கள் தற்போது முற்றிலுமாகக் கைவிட்டு வருகின்றன. அதற்குப் பதிலாக, தியேட்டர்களில் படம் எந்த அளவுக்கு ஓடுகிறது மற்றும் மக்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து பணத்தைப் பகிர்ந்து கொள்ளும் வருவாய் பகிர்வு முறை (Revenue-Sharing / Pay-per-view Model) என்ற புதிய போக்கை நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், ஜியோ பிளஸ் ஹாட்ஸ்டார் போன்ற நிறுவனங்கள் கையாளத் தொடங்கியுள்ளன.

கடந்த ஓரிரு ஆண்டுகளில் முன்னணி நடிகர்களின் பல பெரிய பட்ஜெட் படங்கள் தியேட்டர்களில் படுதோல்வி அடைந்தன. ஆனால், ஓடிடி நிறுவனங்கள் அந்தப் படங்களை ரிலீசுக்கு முன்பே ரூ.80 கோடி, ரூ.100 கோடி எனப் பெரும் தொகை கொடுத்து வாங்கியிருந்ததால், அவர்களுக்குப் பயங்கர நஷ்டம் ஏற்பட்டது. இந்தியாவில் ஓடிடி சந்தாதாரர்களின் எண்ணிக்கை ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டி புதியதாக உயரவில்லை. இதனால், பழையபடி பெரிய தொகையை முதலீடு செய்வது ஓடிடி நிறுவனங்களின் வணிகத்திற்குப் பெரும் சுமையாக மாறியுள்ளது.

இனி ஒரு திரைப்படத்தை ஓடிடி தளம் வாங்கும் போது, முன்கூட்டியே மொத்தப் பணத்தையும் தராது. மாறாக, ஒரு படம் தியேட்டரில் வெளியாகி எவ்வளவு வாரங்கள் வெற்றிகரமாக ஓடுகிறது, தியேட்டரில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதைப் பொறுத்து ஓடிடி தொகை மாறுபடும். தியேட்டரில் ஹிட் அடித்தால் ஓடிடி நிறுவனங்கள் அதிகத் தொகை தரும். தோல்வி அடைந்தால் மிகக் குறைந்த தொகையே கிடைக்கும். ஓடிடி தளத்தில் படம் வெளியான பிறகு, அதை மக்கள் எத்தனை மணி நேரம்/நிமிடங்கள் பார்க்கிறார்கள் (Watch Time) கணக்கிடப்படும்.

இந்த ‘வியூவர்ஷிப்’ எண்ணிக்கையின் அடிப்படையில் தயாரிப்பாளருக்கு ராயல்டி போலப் பணம் பிரித்து வழங்கப்படும். முன்பு படம் தியேட்டரில் தோற்றாலும், ஓடிடி உரிம விற்பனை மூலம் தயாரிப்பாளர்கள் தப்பித்து வந்தனர். ஆனால் இப்போது அந்தப் பாதுகாப்பு சூழல் இல்லாததால், படம் தியேட்டரில் தோற்றால் தயாரிப்பாளர் மொத்தமாக நஷ்டமடைய வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. ஓடிடி பிசினஸ் சுருங்கியதால், தயாரிப்பாளர்கள் இரண்டாம் கட்ட நடிகர்களின் சம்பளத்தைக் குறைக்கத் தொடங்கியுள்ளனர்.

படம் ஜெயித்தால் மட்டுமே தயாரிப்பாளருக்குப் பணம் என்பதால், நடிகர்களும் லாபத்தில் பங்கு கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த மாற்றத்தால் ஏற்படும் நன்மைகள்: நட்சத்திர அந்தஸ்தை மட்டும் நம்பிப் படம் எடுப்பது குறையும். கதை நன்றாக இருந்தால் மட்டுமே தியேட்டரிலும் ஓடும், ஓடிடியிலும் நல்ல வருமானம் கிடைக்கும் என்பதால் தரமான சினிமாக்கள் உருவாக வழிவகுக்கும்.சிறு பட்ஜெட் படங்களுக்கு அடித்தளம்: பெரிய படங்கள் ஓடிடியில் விற்கத் திணறும் வேளையில், தியேட்டரில் நல்ல வரவேற்பைப் பெறும் சிறு மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்கள் (உதாரணமாக சமீபத்திய ‘தாய் கிழவி’, ‘யூத்’, ‘பிளாஸ்ட்’) ஓடிடி மூலம் அதிக லாபம் சம்பாதிக்க இது ஒரு நல்வாய்ப்பாக மாறியுள்ளது.

* எந்த படம் என்ன விலை?
தனுஷ் நடித்த ‘கர’ படத்தின் டிஜிட்டல் உரிமம் ரூ.40 கோடிக்கு நெட்ஃபிளிக்ஸ் தளத்திற்கு விற்கப்பட்டுள்ளது. தனுஷின் முந்தைய படங்களோடு ஒப்பிடும்போது ஆரம்பத்தில் ரூ.80 – ரூ.90 கோடி வரை எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தியேட்டரில் இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று, உலகளவில் சுமார் ரூ.50 கோடி மட்டுமே வசூலித்ததால், ஓடிடி நிறுவனங்கள் விலையைக் குறைத்து ரூ.40 கோடிக்கு ஒப்பந்தம் செய்தன.

பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் டுடே’, ‘டிராகன்’, ‘டியூட்’ படங்கள் முறையே ரூ.40 கோடி, ரூ.52 கோடி, ரூ.45 கோடி என ஓடிடியில் விலை போன நிலையில் எல்ஐகே படம் ரூ.15 கோடிக்கு மட்டும் விலைபோனது. கார்த்தி நடித்த ‘வா வாத்தியார்’ படம், ரூ.40 கோடி பட்ஜெட்டில் உருவாகி, ரூ.10 கோடி மட்டுமே வசூலித்தது. இதனால் வியூவர்ஷிப் அடிப்படையில் இந்த படம் வாங்கப்பட்டுள்ளது.

 

Tags : Chennai ,Netflix ,Amazon ,Jio Plus ,Hotstar ,
× RELATED சூப்பர் ஹீரோ ஆனார் அர்ஜுன் தாஸ்