×

ஆர்ஜே பாலாஜியை கடுமையாக சாடிய விநியோகஸ்தர்

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான படம் ‘கருப்பு’. திரிஷா, சுவாசிகா, இந்திரன்ஸ், நட்டி நட்ராஜ், யோகி பாபு, ஷிவதா, அனகா மாயா ரவி உள்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசை அமைத்துள்ளார். இப்படம் இதுவரை ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சூர்யாவின் அதிக வசூல் செய்த படமாக மாறியுள்ளது. கடந்த மே 14ம் தேதி ‘கருப்பு’ படம் வெளியாவதாக இருந்தது. ஆனால் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவுக்கு ஏற்பட்ட சில நிதி பிரச்னை காரணமாக அன்று படம் வெளியாகவில்லை. அன்று இரவுக்குள் அனைத்து பிரச்னைகளும் சரிசெய்யப்பட்டு மறுநாள் (மே 15) ‘கருப்பு’ படம் வெளியிடப்பட்டது.

படம் வெளியாக தாமதமானதால் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி தனது காரில் அமர்ந்தபடி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், அறிவித்தபடி படத்தை வெளியிட முடியாததற்கு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு கண்கலங்கி பேசி இருந்தார். இந்நிலையில், திரையரங்கு உரிமையாளரும், விநியோகஸ்தருமான திருப்பூர் சுப்பிரமணியம் பேசிய கருத்துகள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறுகையில், ‘எந்த ஒரு பெரிய திரைப்படமும் திட்டமிட்டபடி முடிவடைவது கிடையாது. உதாரணமாக ‘கருப்பு’ படம் கடந்த தீபாவளிக்கே வெளியாக வேண்டி இருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் சுமார் 8 மாதங்கள் தாமதமாகி தற்போது வெளியாகியுள்ளது.

ஒரு படம் வெளியாகும் முன்பு கடைசி 2 நாட்களில் தயாரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளும், அவர்கள் அனுபவிக்கும் மனஅழுத்தங்களும் அவர்களுக்கு மட்டுமே தெரியும். ஒரு படம் வெளியீட்டு நேரத்தில் சிக்கல்களை சந்திக்கும்போது, அதில் பணியாற்றிய நடிகர்களோ அல்லது தொழில்நுட்ப கலைஞர்களோ பெரும்பாலும் உதவிக்கு வருவதில்லை. ஆனால் ‘கருப்பு’ படம் சிக்கலில் இருந்தபோது நடிகர் சூர்யா மட்டுமே நேரடியாக அக்கறை காட்டினார்.

படம் வெளியாவதற்கு முன்பு காரில் உட்கார்ந்து கொண்டு கவலையால் கண்ணீர் வடிக்கும் இயக்குனர்கள் கூட, படம் வெற்றியடைந்த பிறகு ‘இந்த வெற்றிக்கு நான்தான் காரணம்’ என்று பெருமை பேசத் தொடங்கிவிடுகிறார்கள். ஆனால் ஒரு படம் வெளியாவதற்கு முன்பு தயாரிப்பாளர்கள் சந்திக்கும் கஷ்டங்கள் குறித்து யாரும் பேசுவதில்லை’ என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

Tags : RJ Balaji ,Suriya ,Trisha ,Swasika ,Indrans ,Natty Natraj ,Yogi Babu ,Shivatha ,Anaka Maya Ravi ,Sai Abhayankar ,S.R. Prabhu ,
× RELATED ஆட்டி விமர்சனம்