மும்பை: ஷாஹித் கபூர், கிரித்தி சனோன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வரும் இந்தி திரைப்படம் ‘காக்டெய்ல் 2’. இந்தப் படத்தில் கிரித்தியும் ராஷ்மிகாவும் லெஸ்பியன் (ஒரே பாலின ஈர்ப்பாளர்கள்) காதலர்களாக நடித்துள்ளனர் என்று இணையத்தில் சில தகவல்கள் பரவின.
இது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் ஷாஹித் கபூர், இயக்குநர் ஹோமி அதாஜானியா, தயாரிப்பாளர்கள் தினேஷ் விஜன் மற்றும் லவ் ரஞ்சன் ஆகியோர் இந்த தகவல்களை முற்றிலுமாக மறுத்துள்ளனர். இது ஒரு சிக்கலான முக்கோண காதல் கதையே தவிர, ஒரே பாலின காதல் கதை அல்ல என்று அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இந்த வதந்தி எப்படி பரவியது என்பது குறித்து இயக்குநர் ஹோமி அதாஜானியா பேசுகையில், படப்பிடிப்பு தளத்தில் சும்மா பேசிக்கொண்டிருந்தபோது உருவான யோசனை தான் இது என்றார். ‘‘கிரித்தியும் ராஷ்மிகாவும் நிஜ வாழ்க்கையில் நல்ல தோழிகள். அவர்கள் நெருக்கமாக பழகுவதைப் பார்த்து, ‘ஒருவேளை இவர்கள்தான் காதலர்கள், ஷாஹித் கபூர் இவர்களுக்கு இடையே வரும் மூன்றாவது நபர் என்று கதை இருந்தால் எப்படி இருக்கும்?’ என ஜாலியாக பேசினோம். அதை யாரோ சீரியஸாக எடுத்துக்கொண்டு வதந்தியை கிளப்பிவிட்டனர’’ என்று கூறினார்.
