‘திரிஷ்யம்’ படத்தின் முதல் 2 பாகங்களுக்கு கிடைத்திருந்த வெற்றியை தொடர்ந்து, தற்போது ‘திரிஷ்யம் 3’ திரைக்கு வந்துள்ளது. 3 பாகங்களிலும் ஜார்ஜ் குட்டியாக நடித்த மோகன்லாலின் மகளாக நடித்தவர், எஸ்தர் அனில். தமிழில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டபோது, கமல்ஹாசனின் மகளாக எஸ்தர் அனில் நடித்தார். அவர் கூறுகையில், ‘நான் 2010ல் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தேன். அப்போது நிறைய விஷயங்களை நானாக கற்றுக்கொண்டேன். 2013ல் திடீரென்று எனது வாழ்க்கை மாறியது.
‘திரிஷ்யம்’ படம் இந்திய அளவில் எனக்கு புகழ் கொடுத்தது. திரையுலகிலும், சொந்த வாழ்க்கையிலும் எனது பாதையை அப்படம் மாற்றி அமைத்தது. ‘திரிஷ்யம் 3’ வெளியாகி ஏகப்பட்ட நினைவுகளை புதுப்பித்துள்ளது. படத்தின் மீதான எதிர்பார்ப்பு, ஆர்வம், வாழ்த்து, சின்ன பதற்றம் என்று, பல்வேறு மனநிலையில் காத்திருக்கிறேன். எனது மனதில் நன்றியுணர்வு அதிகமாக நிறைந்துள்ளது. டைரக்டர் ஜீத்து ஜோசப்பை சந்தித்த அந்நாளை என்னால் மறக்க முடியாது. அவர்தான் என்னை நம்பி தேர்வு செய்தார். எனது பாதையை வடிவமைத்த அதிர்ஷ்டத்துக்கும், சரியான நேரத்துக்கும், மனிதர்கள் எடுத்த நல்ல முடிவுகளுக்கும் மனமார்ந்த நன்றி’ என்றார்.
