×

என்னை இசைக்கடவுளாகவே பார்த்துக்கொள்ளட்டும்: 50 ஆண்டுகளை நிறைவு செய்த இளையராஜா

சென்னை: இசைத்துறையில் நேற்று முன்தினம் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இசைஞானி இளையராஜா, பால்கி இயக்கும் தமிழ் படத்துக்கான பாடல் ஒலிப்பதிவை சென்னையில் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், தன்னை நேரில் வந்து வாழ்த்திய பத்திரிகையாளர்கள் முன்னிலையில் இளையராஜா பேசியதாவது: உங்களுக்குத்தான் இது 50 வருடங்கள். எனக்கெல்லாம் வருடமே இல்லை. தினமும் வேலை செய்கிறேன்.

இப்போது பால்கியின் தமிழ் படத்துக்காக பாடல் ரெக்கார்ட் செய்கிறேன். பாடகியிடம், ‘சற்று ஓய்வு எடுங்கள். நான் இல்லாமல் பாடினால் திருத்தம் சொல்ல முடியாது’ என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறேன். வருடம்தான் ஓடிக்கொண்டு இருக்கிறதே தவிர, நான் அங்கேயேதான் இருக்கிறேன். நான் எப்படி வந்தேனோ, இன்னமும் அப்படியேதான் சென்று கொண்டிருக்கிறேன். இசையை தவிர எனக்கு எதுவும் தெரியாது.

இந்த நேரத்தில் இந்த 50வது ஆண்டை நினைவு வைத்து எனக்கு வாழ்த்து சொல்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் இருக்கிறீர்கள். அதனால் நான் இருக்கிறேன். அடுத்து எனது 75வது வருட இசை நிறைவுக்கு நாங்கள் மீண்டும் வருவோம் என்று சொல்கிறீர்கள். சொல்வதுதான் சொல்கிறீர்கள், 100வது வருடம் என்று சொல்லக்கூடாதா? ‘எல்லோரும் உங்களை இசைக்கடவுளாக பார்க்கிறார்களே?’ என்று கேட்கிறீர்கள்.

அவர்கள்தானே பார்க்கிறார்கள். கடவுளுக்கு தான் கடவுள் என்ற நினைப்பு இருக்குமா? இருக்காது. இசைக்கடவுளாக பார்க்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளட்டும். அதில் எனக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை. அதனால் அவர்கள் ஒன்றும் கூடிப்போவது இல்லை. அவர்கள் என்னை அவ்வளவு மதிக்கிறார்கள் என்ற அன்புதான் இதில் தெரிகிறது.

Tags : Ilayaraja ,Chennai ,Balki ,
× RELATED கருப்பு விமர்சனம்…