×

3 வேளையும் பிஸ்கெட் சாப்பிட்டு உயிர் பிழைத்தேன்: நவாசுத்தீன் சித்திக்கி

 

மும்பை: ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் வில்லனாக நடித்தவர் பாலிவுட் நடிகர் நவாசுத்தீன் சித்திக்கி. அவர் சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: ஆரம்பக் காலத்தில் நமக்குள்ளே ஒரு பெரும்தன்னம்பிக்கையும், நடிப்பின் மீது ஒரு தீராத ஆர்வமும் இருக்கும். ஆனால், அடுத்தடுத்து எதிர்கொள்ளும் தோல்விகளும், நம்முடைய தன்னம்பிக்கையை மெல்ல மெல்லச் சிதைக்கத் தொடங்கும். நம் மீது நமக்கே சந்தேகம் வரத் தொடங்கும். என்னையே சந்தேகித்து, ‘நாம் இந்தத் துறைக்குச் சரிப்பட்டு வரமாட்டோமோ’ என்று மனநிலை உண்டானது. அந்த இக்கட்டான மனநிலையை நான் கடந்து வந்துள்ளேன். ஒவ்வொரு முறையும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கும் போது, அது கடைசி நேரத்தில் கைநழுவிப் போகும். ஏறத்தாழ 10 ஆண்டுகளாக என்னைத் துரதிர்ஷ்டசாலியாகவே நான் கருதிக்கொண்டிருந்தேன். பெரிய வாய்ப்புகள் தேடி வரும்போது, அவை எதிர்பாராத விதமாகத் தடையாகிப் போகும்.

அப்போதெல்லாம் நான் என் நண்பர்களிடம் ‘எனக்குத் திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்துவிட்டது’ என்று மிகத் தற்பெருமையுடன் கூறுவேன். ஆனால், படப்பிடிப்பு தொடங்கும் நேரத்தில் என்னைத் தூக்கி எறிந்துவிடுவார்கள். சில நேரங்களில் எனக்கு தகவல் கூடத் தெரிவிக்க மாட்டார்கள். அந்தத் தருணங்களில் நடுரோட்டில் நின்று அழ வேண்டும் என்று தோன்றும். அப்படி அழுதும் இருக்கிறேன். ஆனால், யாராவது என்னைப் பார்த்துவிடக் கூடாதே என்று சுற்றும் முற்றும் கவனித்துக்கொண்டே அழுவேன். அந்த வறுமை நிறைந்த நாட்களில், ஒரு நாளைக்கு மூன்று வேளையும் பார்லே-ஜி பிஸ்கட்டை மட்டுமே சாப்பிட்டு உயிர் பிழைத்திருக்கிறேன். இன்றும் அந்த பிஸ்கட்டை சாப்பிடும்போதும், பழைய டெல்லி நாட்கள்தான் நினைவுக்கு வரும். அன்று நான் அனுபவித்த அந்தத் துயரம் இன்றும் என் மனதின் அப்படியே இருக்கிறது. இவ்வாறு பகிர்ந்திருக்கிறார்.

 

Tags : Nawazuddin Siddiqui ,Mumbai ,Bollywood ,Rajinikanth ,
× RELATED சேயோனில் பாக்ய போர்ஸ்