
ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் திருமண வாழ்க்கை, கடந்த 19 ஆண்டுகளாக மீடியாவில் பேசுபொருளாக இருந்து வருகிறது. அவர்களை பற்றிய வதந்திகளும், சர்ச்சைகளும் வெளியாகாத நாட்களே இல்லை. இந்நிலையில் அபிஷேக் பச்சன் அளித்த பேட்டியில், ‘ஐஸ்வர்யா ராய் எனது உயிர் தோழி. மகள் ஆராத்யாவை தலைசிறந்த பண்புகளுடன் வளர்த்ததற்கான முழு பெருமையும் அவரையே சேரும். அடுத்த வருடம் எங்களின் 20வது ஆண்டு திருமண நாளை விமரிசையாக கொண்டாட திட்டம் வைத்திருக்கிறேன். 2000ல் வெளியான `தாய் அக்ஷர் பிரேம் கே’ என்ற இந்தி படத்தின் ஷூட்டிங்கில் முதல்முறையாக சந்தித்தோம்.
அப்போது நாங்கள் நல்ல நண்பர்களாக பழகினோம். அன்று, ஐஸ்வர்யா ராய்தான் எனது வாழ்க்கை துணை ஆவார் என்று கனவில் கூட நினைக்கவில்லை. 2006ல் வெளியான `உம்ராவ் ஜான்’ என்ற இந்தி ஷூட்டிங்கில் எங்கள் காதல் மலர்ந்தது. `குரு’ படத்தில் சேர்ந்து நடித்தபோது எங்கள் நட்பும், காதலும் உறுதி அடைந்தது. `குரு’ என்ற இந்தி படத்தின் பிரீமியர் காட்சிக்காக நியூயார்க்கிற்கு சென்றபோது, நான் தங்கியிருந்த ஓட்டலின் பால்கனியில் வைத்து ஐஸ்வர்யா ராயிடம் எனது காதலை வெளிப்படுத்தி, திருமணம் செய்துகொள்ள சம்மதமா என்றேன். அப்போது எந்தவித பந்தாவும் இல்லாமல், மிகவும் இயல்பாக எனது காதலை ஐஸ்வர்யா ராய் சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்டார். 2007 ஏப்ரல் 20ம் தேதி எங்கள் திருமணம் நடந்தது’ என்றார்.

