×

பெரியாறு அணையில் தண்ணீர் திறக்கவில்லை நடவு பணிகள் நடைபெறாமல் வீணாகிப்போன நாற்றுகள்

* அதிக வளர்ச்சியால் கருகி வரும் அவலம் * விவசாயிகள் வேதனை

சின்னமனூர் : பெரியாறு அணையில் இருந்து, இந்த ஆண்டு முதல் போக சாகுபடிக்கு உரிய காலத்தில் பாசன நீர் திறக்கப்படவில்லை. இதனால் சின்னமனூர் பகுதியில் நாற்றுகள் அதிக வளர்ச்சியடைந்து வீணாகி வருகிறது.

இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள சுமார் 15,000 ஏக்கர் அளவிலான விவசாய நிலத்தில், ஆண்டுதோறும் இரு போகம் நெல் சாகுபடி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

இதற்கு முல்லைப் பெரியாறு அணையில் திற்க்கப்படும் தண்ணீர் காரணமாக அமைகிறது. இதன்படி மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உருவாகும் பருவ மழை காரணமாக, முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் அதிக அளவில் வந்து சேரும். இதனால் அணையின் நீர்மட்டம் உயரும்.

இதையடுத்து வழக்கமாக ஜூன் மாதம் முதல் தேதியில் அரசு அனுமதியுடன் பொதுப்பணித்துறையினர், கம்பம் உள்ளிட்ட தேனி, திண்டுக்கல் மாவட்ட பகுதிகளின் முதல் போக நெல் சாகுபடிக்காக அணையில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கம். இதனை எதிர்பார்த்து இப்பகுதியில் உள்ள வயல்களில் விவசாயிகள் நெல் மணிகளை தூவி நாற்றுக்களை வளர்த்து வைப்பர்.

இவை வளர்ச்சியடையும் நேரத்தில் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்பதால், தங்கள் வயல்களில் நீர்பாய்ச்சி, நடவு பணிகளை தொடங்கி ஜூலை மாத இறுதிக்குள் முடிவுக்கு கொண்டு வருவர்.

இதன் தொடர்ச்சியாக களையெடுத்தல், உரமிடுதல், நோய் தாக்குதலுக்கான மருந்து தெளித்தல் போன்ற பணிகளை விவசாயிகள் அடுத்தடுத்து மேற்கொள்வர். முடிவில் இந்த வயல்களில் நெற்கதிர்கள் உருவாகி முதிர்ச்சி அடையும் நிலையில், பகுதி வாரியாக அறுவடை பணிகள் துவங்கி அக்டோபர் மாதத்தில் முடிப்பர்.இதையடுத்து 2ம் போக நெல் சாகுபடிக்காக நவம்பர் மாதம் நாற்றாங்கல் பாவுவது இப்பகுதி விவசாயிகளின் வழக்கமாக உள்ளது.

இந்நிலையில் நடப்பாண்டில் எல் நினோ உள்ளிட்ட பல்வேறு காலநிலை மாறுபாடுகள் காரணமாக, உரிய நேரத்தில் பருவமழை துவங்காமல் போனது. இதனால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயராததால், முதல் போக சாகுபடிக்கான பாசன நீரை அணையில் இருந்து ஜூன் முதல் தேதியில் திறக்க முடியாமல் போனது. இதனால் முதல்போக சாகுபடிக்கான வயல்கள் அனைத்தும், தற்போது வறண்ட நிலையில் காணப்படுகிறது.

இதன்படி சின்னமனூர் பகுதியில் குச்சனூர், துரைச்சாமிபுரம், மார்க்கையன் கோட்டை பகுதிகளில் சில விவசாயிகள் 100 ஏக்கருக்கும் மேலாக விவசாய நிலம் வைத்துள்ளனர். இவர்களில் சிலர் ஊற்று நீர் மற்றும் ஆழ்குழாய் கிணறுகள் வாயிலாக கிடைக்கும் தண்ணீர் உதவியுடன், குறித்த நேரத்தில் பருவமழை பெய்து, அணையில் இருந்து பாசன நீர் திறக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் நாற்றுக்களை பாவினர். இவர்களில் சில விவசாயிகள் 25 நாட்களில் பறித்து நடவு செய்யும் வகையில் வளர்ச்சி அடையும் நெல் விதைகளை நாற்றங்கால் பாவியுள்ளனர்.

இதனால் தற்போது அவை பறித்து நடவு செய்யப்பட வேண்டிய காலத்தையும் கடந்து, நாற்றுக்களாகவே அதிக அளவில் வளர்ச்சியடைந்து வயலிலேயே வீணாகி வருகிறது. இதற்கிடையே தற்போது முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் பருவமழை பெய்து அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தமிழகத்தில் பாசனத்திற்கான தண்ணீர் திறக்கப்படும்.

ஆனால் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு வளர்ச்சியடைந்த அவற்றை பறித்து வயலில் நடவு செய்தால், உரிய பலன் கிடைக்காது. இதனால் அவற்றைநடவு செய்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதன்படி சின்னமனூர் பகுதியில் முதல் போகம் நெல் சாகுபடி பணிகள் முழுமையாக முடங்கியுள்ளதும், பல இடங்களில் வயல் வெளிகள் கட்டாந்தரையாக காட்கி அளிப்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags : Periyar Dam ,Chinnamanur ,
× RELATED மதுரை மீனாட்சி கோயிலின் ரூ.60 கோடி...