சென்னை, ஆக.4: சென்னையில் இயங்கி வரும் சர்வதேச வணிக நிறுவனங்கள் மற்றும் உலகளாவிய திறன் மையங்களின் பயன்பாடு கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனால், சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான முன்னணி அலுவலக இடங்களின் காலி அளவு வெகுவாகக் குறைந்துள்ளது. ரியல் எஸ்டேட் தரவு மற்றும் ஆய்வு நிறுவனமான சிஆர்இ மெட்ரிக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2023ம் ஆண்டில் 15.8 சதவீதமாக இருந்த அலுவலக இடங்களின் காலியளவு, இந்த ஆண்டு ஜூன் மாத இறுதியில் 9.9 சதவீதமாகக் (சுமார் 10%) குறைந்துள்ளது. புதிய அலுவலகக் கட்டுமானங்களின் அளவை விட, நிறுவனங்களின் அலுவலக இடங்களுக்கான தேவை 1.8 மடங்கு அதிகமாக உள்ளது.
சென்னை நகரில் தற்போது மொத்தம் 12 கோடி சதுர அடி பரப்பளவிலான உயர்தர வணிக அலுவலக இடங்கள் (கிரேட் ஏ/ஏ+) பயன்பாட்டில் உள்ளன. மேலும் 4.2 கோடி சதுர அடி பரப்பளவிலான புதிய அலுவலகக் கட்டுமானப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சென்னையில் தற்போது 400க்கும் மேற்பட்ட உலகளாவிய திறன் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 2 லட்சத்திற்கும் அதிகமான தொழில்வல்லுநர்கள் பணிபுரிகின்றனர். இந்தியாவில் உள்ள பிற பெருநகரங்களை விட, சென்னைதான் தேசிய சராசரியை விட இருமடங்கு வேகத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் உலகளாவிய திறன் மையமாக உருவெடுத்துள்ளது.
பெங்களூரு, டெல்லி, மும்பை போன்ற பிற பெருநகரங்களுடன் ஒப்பிடுகையில் சென்னையில் அலுவலக வாடகை மற்றும் பராமரிப்புச் செலவு மிகவும் குறைவு. டெல்லியில் சதுர அடிக்கு ரூ.182, மும்பையில் ரூ.175, குருகிராமில் ரூ.106, பெங்களூருவில் ரூ.92 என மாதாந்திர வாடகை இருக்கும் நிலையில், சென்னையில் முன்னணி அலுவலக இடங்களின் வாடகை சதுர அடிக்கு வெறும் ரூ.75 மட்டுமே. இதன் மூலம் பிற நகரங்களை விட 20% முதல் 60% வரை குறைவான செலவில் நிறுவனங்களால் உயர்தர உள்கட்டமைப்பைப் பெற முடிகிறது. மேலும், இந்தியாவில் உள்ள பிற முன்னணி நகரங்களை விட சென்னையில் பணிபுரியும் ஊழியர்கள் வேலையை விட்டு விலகும் விகிதம் மிகவும் குறைவாக உள்ளது.
பொறியியல் அல்லாத துறைகளில் 5.9% மற்றும் பொறியியல்/ ஆராய்ச்சித் துறைகளில் (ER&D) 8% மட்டுமே ஊழியர்கள் விலகல் விகிதம் உள்ளது. சென்னை ரியல் எஸ்டேட் சந்தையில் டிஎல்எப் நிறுவனம் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. தவிர இன்னும் 10க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களும் சென்னையின் வணிக அலுவலகச் சந்தையில் முக்கிய முதலீடுகளை செய்துள்ளன.
