×

தண்ணீர் இன்றி வறண்டதால் மக்கள் ஏமாற்றம்; காவிரி கரைகளில் களை இழந்தது ஆடிப்பெருக்கு: ஷவர், குழாயில் வந்த தண்ணீரில் மங்கல பொருட்களை படையலிட்டு பெண்கள் வழிபாடு

திருச்சி: காவிரித்தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திருச்சி அம்மா மண்டபம் உள்பட டெல்டா மாவட்டங்களில் காவிரி கரைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடி வருகின்றனர். ஷவர், குழாயில் வந்த தண்ணீரில் பக்தர்கள் புனித நீராடி மங்கல பொருட்களை படையலிட்டு வழிபட்டனர். இதனால் ஆடி பெருக்கு களையிழந்தது. தமிழ் மாதங்களில் ஆடி மாதம் சிறப்பு வாய்ந்த மாதம். ஆடி முழுவதுமே அம்மன் கோயில்களில் உற்சவங்கள் நடைபெறும். அந்த வகையில் ஆடி 18ம் நாள் ஆடிப்பெருக்கு விழாவாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் காவிரி ஆறு நுழையும் ஒகேனக்கல் முதல் கடலில் சங்கமிக்கும் பூம்புகார் வரை காவிரி கரையோரங்களில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அதன்படி இந்தாண்டு ஆடிப்பெருக்கு விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக காவிரி பாயும் தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, காரைக்கால் உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் கொண்டாடப்பட்டது. இதற்காக மேட்டூரில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும். பருவ மழை பொய்த்ததாலும், மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படாததாலும் திருச்சி அகண்ட காவிரி, கொள்ளிடம், கிளை ஆறுகள் உட்பட நீர்நிலைகள் வறண்டு பாலைவனம் போல் காணப்படுகிறது. இதனால் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம் களையிழந்தது.

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் இன்று அதிகாலை முதலே மக்கள் திரண்டு வந்து புனித நீராடினர். இதற்காக மாநகராட்சி சார்பில் 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டிகள் 4 இடங்களில் அமைக்கப்பட்டிருந்தது. ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக தலா 20 என 40 ஷவர்கள் அமைக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் வசதிக்காக படித்துறையில் பெண்களுக்கு 10 இடங்களில் உடை மாற்றும் அறைகள் இருந்தது. 3 இடங்களில் ஒலிபெருக்கி அமைக்கப்பட்டிருந்தது.

காவிரி கரையில் காலை முதலே கூடிய மக்கள் அங்கு அமைக்கப்பட்டிருந்த ஷவர்களில், தொட்டிகளில் புனித நீராடி புத்தாடைகள் அணிந்தனர். பின்னர் படித்துறையில் வாழை இலையில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து தேங்காய், காதோலை கருகமணி, அரிசி, வெல்லம், பழங்கள் மற்றும் மங்கல பொருட்களை படையலிட்டு விளக்கேற்றி பூஜை செய்தனர். அவற்றை ஒரு வாழை மட்டையில் வைத்து ஆற்று மணலிலும், மைய பகுதியில் தேங்கியிருந்த தண்ணீரிலும் விட்டனர். மேலும் காவிரி அன்னைக்கும் தீபாராதனை காட்டி வழிபட்டு நன்றி தெரிவித்தனர்.

அம்மா மண்டபத்தில் அதிகளவில் புதுமண தம்பதிகள் திரண்டு வழிபாடு நடத்தினர். அப்போது திருமணத்தின்போது மணமக்கள் அணிந்த மாலைகளை ஓடை போல் ஓடிய நீரில் விட்டதுடன் சுமங்கலி பெண்களிடம் ஆசி பெற்றனர். பின்னர் மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டி கொண்டனர். திருமணமாகாத இளம்பெண்களும் தங்களுக்கு திருமணம் நடக்க வேண்டி கையில் மஞ்சள் கயிறு கட்டிக்கொண்டனர். பெண்கள், தங்களது மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும் வகையில் ஆற்றங்கரையோரம் உள்ள வேப்பமரத்தில் மஞ்சள் கயிறு கட்டினர். ஆண்களும் கைளில் மஞ்சள் கயிறு கட்டிக்கொண்டனர்.

மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற காவிரி துலாக்கட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது. இதற்காக நகராட்சி நிர்வாகம் சார்பில் காவிரி கரையில் கட்டப்பட்டுள்ள புஷ்கர தொட்டியில் போர்வெல் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டது. அதில் பக்தர்கள் புனித நீராடி காவிரி தாயை வணங்கினர். நாகை மாவட்டத்தில் நாகை புதிய கடற்கரை. வேளாங்கண்ணி கடற்கரை, கீழ்வேளூர் பகுதியில் உள்ள நீர்நிலைகளில் மக்கள், புதுமண தம்பதிகள் அதிகளவில் வழிபாடு நடத்தினர். தஞ்சை மாவட்டத்தில் காவிரி பாயும் திருவையாறு திருக்காட்டுப்பள்ளி, கும்பகோணம், பாபநாசம் ஆகிய பகுதிகளில் ஆடிப்பெருக்கு களைகட்டியது. திருவையாறு புஷ்ப மண்டப படித்துறையில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான மக்கள் வழிபாடு நடத்தினர். தஞ்சை பெரியகோயில் அருகே உள்ள படித்துறை, வெண்ணாறு படித்துறை, எம்.கே.மூப்பனார் சாலையில் உள்ள கல்லணை கால்வாய் படித்துறை, வடவாறு, கும்பகோணம் மகாமக குளம், பகவத் படித்துறை பகுதியிலும் ஆடிப்பெருக்கை கொண்டாடினர்.கரூர் அடுத்த நெரூர் காவிரி ஆற்றில் மக்கள் அதிகளவில் திரண்டு படையலிட்டு வழிபாடு நடத்தினர்.

காவிரிக்கு சீர் கொடுக்கும் ரங்கநாதர்;
ஆடிப்பெருக்கு அன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் காவிரி தாய்க்கு சீர் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி இன்று இந்த விழா நடந்தது. இதையொட்டி இன்று காலை 6.30 மணிக்கு நம்பெருமாள் தங்க பல்லக்கில் அம்மா மண்டபம் புறப்பட்டார். பின்னர் வழிநடை உபயங்கள் கண்டருளி காலை 11.30 மணிக்கு அம்மா மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு ரங்கநாதருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை வரை அங்கேயே வீற்றிருப்பார். மாலை 4.45 மணிக்கு காவிரி தாய்க்கு சீர்கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். சீதன பொருட்களாக பட்டு, தாலிபொட்டு, மஞ்சள் உள்ளிட்ட மங்கல பொருட்கள் காவிரி ஆற்றில் மிதக்க விடப்படும். இரவு 8.30 மணிக்கு அம்மா மண்படத்தில் இருந்து புறப்படும் நம்பெருமாள், வெளிஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றிக்கொண்டு இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் அடைகிறார்.

ஒகேனக்கல், மேட்டூரிலும் மக்கள் ஏமாற்றம்;
சேலம் மாவட்டம் மேட்டூர் காவிரியில் தண்ணீர் இல்லாததால், மக்கள் வருகை இன்று மிகவும் குறைவாகவே இருந்தது. இதனால், மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். குறைந்த அளவிலேயே மக்கள், ஆங்காங்கே குட்டை போல் தேங்கி நின்ற நீரில் நீராடி சென்றனர். சிலர், கொண்டு வந்திருந்த குலதெய்வங்களின் சிலை, ஈட்டி உள்ளிட் பூஜை பொருட்களை சுத்தம் செய்து, சிறப்பு பூஜை செய்து எடுத்து சென்றனர். மேட்டூர் அணைக்கட்டு முனியப்பனுக்கு பக்தர்கள் பொங்கல் வைத்து ஆடு, கோழி பலியிட்டு தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். இதேபோல், பூலாம்பட்டி, தேவூர் பகுதியில் காவிரியாற்றில் புனித நீராட 10 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு, தேங்கிய தண்ணீரில் புனித நீராடினர். சில இடங்களில் புதுமணத்தம்பத்தினர் புது தாலிக்கயிறு கோர்த்து கொண்டனர். தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஆடிப்பெருக்கு நாளில் ஆயிரக்கணக்கான மக்கள் புனித நீராடுவார்கள். ஆனால், நடப்பாண்டு காவிரியில் அதிகளவு தண்ணீர் வராததால், அங்கும் ஆடிப்பெருக்கு விழா களையிழந்து காணப்பட்டது. குறைந்த அளவு மக்கள் வந்து நீராடிச் சென்றனர்.

Tags : Cauvery ,Aadi Perukku ,Trichy ,Aadi Perukku festival ,Amma Mandapam ,
× RELATED தஞ்சை திருவோணம் பகுதியில் சிலிண்டர்...