சென்னை:தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடையை ஆகஸ்ட் 24ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், இரு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். அதேபோல, கரூர் தொகுதி எம்.எல்.ஏ. எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ. சி.விஜயபாஸ்கர், பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ஆகியோர் ராஜினாமா செய்தனர்.
இவர்களின் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள போது, இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்க வேண்டும் எனக் கோரி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, தேர்தல் வழக்கு முடிவுக்கு வரும் முன்பு அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவது அரசு பணம் செலவிடப்படுவதுடன், ஒரே தொகுதிக்கு இரண்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் சாசன பிரச்னை எழும் என்று குறிப்பிட்டு, ஐந்து தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த வழக்கில் இந்திய தேர்தல் ஆணையம், ஒன்றிய அரசு, சட்டப்பேரவை செயலாளர், முதல்வர் விஜய், எம்.எல்.ஏ.,க்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், ஜெயக்குமார், இசக்கி சுப்பையா உள்ளிட்டோர் மூன்று வாரங்களில் பதிலளிக்குமாறும் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் பட்டியலிடப்பட்டிருந்தும் விசாரணைக்கு வரவில்லை. இதையடுத்து, மனுதாரர் தரப்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர், இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து நீதிபதிகளின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.இதைக்கேட்ட நீதிபதிகள், ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை ஆகஸ்ட் 24ம் தேதி வரை நீட்டித்து விசாரணையை தள்ளிவைத்தனர்.
