சென்னை: மதுரை கிழக்கு தொகுதி தவெக எம்.எல்.ஏ. கார்த்திகேயனுக்கு எதிரான வழக்கை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற கோரியும், சிறப்பு நீதிமன்றத்திற்கு அரசியல் சாராத சிறப்பு அரசு வழக்கறிஞர்களை நியமிக்க கோரியும் தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், சோமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரமோத்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில், தமிழகத்தில் தற்காலிக அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அமர்வு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராவதற்காக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளது.
மதுரை மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ள பாண்டி, மதுரை கிழக்கு தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. எஸ்.கார்த்திகேயனின் உறவினர் மட்டுமல்லாமல், அவரும் த.வெ.க. கட்சியைச் சேர்ந்தவர்தான். மதுரை கிழக்கு தொகுதி தவெக எம்.எல்.ஏ.,வுக்கு எதிராக திருமங்கலம், மதுரை மாவட்ட அமர்வு நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றம் ஆகியவற்றில் மூன்று குற்ற வழக்குகளின் விசாரணை நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்டவரின் உறவினராகவும், அவர் சார்ந்த கட்சியைச் சேர்ந்தவருமான அரசு வழக்கறிஞர் பாண்டி எம்எல்ஏ கார்த்திகேயன் வழக்கில் தனது கடமையை எப்படி நிறைவேற்றுவார் என்று எதிர்பார்க்க முடியாது. மதுரை மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களின் உறவினர்களும், த.வெ.க கட்சியினரும் தான் அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது, எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி, நீதி பரிபாலனத்தை பாதிக்கச் செய்யும். இது பொதுமக்கள் மத்தியில் நீதித்துறை மீதான நம்பிக்கையை குலைத்து விடுவதுடன், உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்பு நடைமுறையை வீழ்த்தி விடும் என்பதால் எம்.பி., எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான வழக்குகளில் நேர்மையான, சுதந்திரமான, அரசியல் சார்பில்லாதவர்களையே அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கவேண்டும்.
மதுரை கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. கார்த்திகேயனுக்கு எதிரான வழக்கை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும். தமிழ்நாடு முழுவதும், இந்நாள், முன்னாள் எம்.பி. எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான வழக்குகளில், சுதந்திரமான, அரசியல் சாராத, சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் உறவினர்கள் அல்லாதவர்களை அரசு சிறப்பு வழக்கறிஞர்களாக நியமிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
குற்றச்சாட்டிற்குட்பட்ட எம்எல்ஏ கார்த்திகேயனின் நெருங்கிய உறவினர் அரசு வழக்கறிஞர் என்பதால் எம்எல்ஏ மீதான வழக்கிலிருந்து அரசு வழக்கறிஞர் பாண்டியை நீக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனு உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
