×

முதல்வர் விஜய் ஆக.3ம் தேதி கர்நாடகா செல்வது உறுதி: முதல்வர் டி.கே.சிவகுமாருடன் ஹெலிகாப்டரில் பயணம் செய்து மேகதாது செல்வதாகவும் தகவல்

 

சென்னை: காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்னை தமிழ்நாடு – கர்நாடகா இடையே நூற்றாண்டுகளுக்கு மேலாக தொடர்ந்தாலும், மேகதாது அணை பிரச்னை என்பது கடந்த 10 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்நிலையில், காவிரி படுகையில் 5வது அணையாக மேகதாதுவை கட்டி முடிக்க கர்நாடக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதை தடுக்க வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சிகள், விவசாய அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

மேகதாதுவில் அணை கட்டினால் தமிழக டெல்டா பகுதிகள் பாலைவனமாகி விடும், 20 மாவட்டங்களில் குடிநீர் பிரச்னை ஏற்படும் என்று கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஆனால், கர்நாடக அரசும், முதல்வர் டி.கே.சிவகுமாரும் மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கான பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். இதனால் கடந்த சில நாட்களாக இரண்டு மாநிலத்தின் எல்லை பகுதியில் பதற்றமான சூழ்நிலை உள்ளது.

இதற்கிடையே, தமிழக முதல்வர் விஜய் – கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் ஆகஸ்ட் 3ம் தேதி பெங்களூருவில் சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதை தொடர்ந்து, உச்ச நீதிமன்ற தீர்ப்பு மற்றும் காவிரி நதிநீர் ஆணையத்தின் தீர்ப்பு தமிழகத்திற்கு சாதகமாக இருப்பதால், இந்த சந்திப்பில் பங்கேற்கக்கூடாது என்று தமிழக முதல்வர் விஜய்க்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் விவசாய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும், அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டவும் திமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

பல்வேறு கட்சி தலைவர்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் விஜய் – டி.கே.சிவகுமார் சந்திப்பு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், இருமாநில முதல்வர்கள் சந்திப்பு நடப்பது தற்போது உறுதியாகியுள்ளது. இதற்காக, ஆகஸ்ட் 3ம் தேதி காலை சென்னையில் இருந்து தனி விமானத்தில் முதல்வர் விஜய் பெங்களூரு செல்ல இருக்கிறார். அன்று பிற்பகல் 12 மணிக்கு கர்நாடக தலைமைச் செயலகமான விதான் சவுதாவில் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாரை சந்தித்து பேசுகிறார்.

அதன்பின்னர், இருவரும் ஹெலிகாப்டரில் மேகதாது அணை அமைய உள்ள இடத்தையும், கர்நாடகாவில் உள்ள காவிரி பாசன பகுதிகளையும் பார்வையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்ப்புக்கு மத்தியில் நடைபெறும் இந்த இருமாநில முதல்வர்கள் சந்திப்பில் என்ன முடிவு எட்டப்படப்போகிறது என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Chief Minister ,Vijay ,Karnataka ,D.K. Shivakumar ,Megedatu ,Chennai ,Cauvery ,Tamil Nadu ,Megedatu dam ,Cauvery basin ,
× RELATED கால்நடை மருத்துவ படிப்புக்கு தரவரிசை பட்டியல் வெளியீடு