×

டாஸ்மாக் மதுபான கொள்முதல் முறைகேடு விவகாரம்;செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

 

சென்னை: டாஸ்மாக் மதுபான கொள்முதல், டெண்டர் முறைகேடு, சட்டவிரோதமாக பார் நடத்தியது, டாஸ்மாக்கில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்றதில் பல கோடி ஊழல் செய்ததாக தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை ஜூலை 28ம் தேதி வழக்குப்பதிவு செய்தது. கடந்த ஆட்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, டாஸ்மாக் நிறுவன முன்னாள் நிர்வாக இயக்குநர் எஸ்.விசாகன், முன்னாள் மண்டல மேலாளர்கள் டி.ராமதுரை முருகன், ஆர்.பன்னீர்செல்வம், செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் ரத்தேஷ்ராஜ், செந்தில் பாலாஜியின் முன்னாள் நேர்முக உதவியாளர் பாஸ்கர், கரூர் கார்த்திக் என்கிற முலனூர் எஸ்.கார்த்திக் ஆகிய 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்க கோரி உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார்.இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, டாஸ்மாக் ஒரு தனிப்பட்ட நிறுவனம். அதில் அமைச்சருக்கு முழு அளவில் பங்கு இல்லை. இந்த குற்றச்சாட்டில் அவருக்கு தொடர்பில்லை என்றார்.

காவல்துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. அமைச்சர் சொல்லித்தான் அனைத்தும் நடந்துள்ளது. பல 100 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. இந்த வழக்கில் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட வேண்டும். எனவே, முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளது. அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, போலீஸ் காவலில் விசாரிக்க வேண்டிய தேவை உள்ளது என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைத்து அதிகாரிகளும் அதிகார துஷ்பிரயோகம் செய்ததற்கான முகாந்திரம் உள்ளது. காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய தேவை உள்ளது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

Tags : TASMAC ,Senthil Balaji ,Chennai ,Tamil Nadu government ,Anti-Corruption Department ,
× RELATED கால்நடை மருத்துவ படிப்புக்கு தரவரிசை பட்டியல் வெளியீடு