×

காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டும் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர கர்நாடகா மறுப்பு: ஆக.2ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு கர்நாடக முதல்வர் அழைப்பு

 

புதுடெல்லி: காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டபடி அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு தினமும் வினாடிக்கு 3,500 கனஅடி தண்ணீரை காவிரியில் இருந்து திறந்துவிட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் நேற்று கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் தமிழகத்துக்கு தண்ணீர் தருவதற்கு கர்நாடகம் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்த உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது. மேலும் இதுகுறித்து ஆலோசனை நடத்த ஆகஸ்ட் 2ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி ஒவ்வொரு மாதமும் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் கூடி நீர் பங்கிட்டை உறுதி செய்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் டெல்லியில் நடந்த காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்கள் தினமும் வினாடிக்கு 3,500 கனஅடி நீரை திறந்து விட வேண்டும். இரு மாநில எல்லையான பிலிகுண்டுலு அளவீட்டு நிலையத்தில் இருந்து தமிழகத்துக்கு நீர் செல்வதை உறுதி செய்ய வேண்டும் என கர்நாடகா அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் அவசர ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் கர்நாடகாவில் போதிய மழை பெய்யாத காரணத்தினால், குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இச்சூழலில் தமிழகத்துக்கு நீரை திறந்துவிட இயலாது. காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் உத்தரவை எதிர்த்து, காவிரி மேலாண்மை ஆணையத்தில் முறையிட உள்ளோம் என்று தெரிவித்திருந்தார்.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 54வது அவசர கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே ஹல்தர் தலைமையில் நேற்று டெல்லியில் நடந்தது. இதையடுத்து அந்த கூட்டத்தில் தமிழக பிரதிநிதிகள் நீர்வளத் துறையின் முதன்மைச் செயலாளர் சத்யபிரதா சாகு, காவிரி தொழில்நுட்பப் பிரிவு மற்றும் மாநிலங்களுக்கிடையிலான நீர்வளப் பிரிவின் தலைவர் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் மத்திய தொழில்நுட்பப் பிரிவு மற்றும் மாநிலங்களுக்கிடையிலான நீர்வளப் பிரிவின் பிரதிநிதிகள் ஆகியோர் சென்னையில் இருந்தவாறு காணொலி வாயிலாக கலந்து கொண்டனர். இதேபோன்று கர்நாடகா, கேரளா மற்றும் புதுவை ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இதில் கர்நாடகவை சார்ந்த பிரதிநிதிகள் மட்டும் கூட்டத்தில் நேரடியாக டெல்லி வந்து பங்கேற்றனர்.

இதையடுத்து கூட்டத்தின் முடிவில் கர்நாடக பிரதிநிதிகள் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டபடி அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு தினமும் வினாடிக்கு 3,500 கனஅடி தண்ணீரை காவிரியில் இருந்து திறந்துவிட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து மாநில அரசோடு கலந்து ஆலோசித்த பின்னர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்’’ என்றனர்.

டி.கே.சிவகுமார் பேட்டி: டெல்லியில் செய்தியாளர்களிடம் முதல்வர் டி.கே.சிவகுமார் கூறும்போது, ‘‘மழைப்பற்றாக்குறை மற்றும் வறட்சி போன்ற சூழல் நிலவும் நிலையில், தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிடுமாறு காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆலோசிக்க வரும் ஆகஸ்ட் 2ம் தேதி காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியுள்ளேன், இதில் காவிரி பிரச்னை தொடர்பாக தீவிரமாக ஆலோசனை நடத்தப்படும். மேலும் காவிரி பிரச்னை மற்றும் மேகதாது அணை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வரும் 3ம் தேதி தமிழ்நாடு முதல்வர் விஜய், பெங்களூரு வருகிறார். நாம் ஒருவருக்கொருவர் சண்டையிட விரும்பவில்லை. நாட்டின் சட்டம் உள்ளது. நாம் ஒருவரையொருவர் மதிப்போம். அனைவரின் உணர்வுகளையும் மதிப்போம். மாநிலங்கள் வேறாக இருந்தாலும் நாடு ஒன்றுதான். நாம் இந்தியர்கள்’’ என்றார்.

* காவிரியில் தண்ணீர் தர மறுப்பு; சிரித்தபடி சென்ற நீர்வளத்துறை அமைச்சர்

காவிரியில் தண்ணீர் திறந்து விட முடியாது என்று கர்நாடகா கை விரித்துள்ளது. இது குறித்து சென்னையில் ஆய்வுக்குச் சென்ற தமிழக நீர்வளத்துறை அமைச்சர் புஸ்சி ஆனந்திடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். கர்நாடகா அமைச்சர் மறுத்தது, முதல்வர் விஜய் பெங்களூர் செல்வது குறித்து கேள்விகளை நிருபர்கள் தொடர்ந்து கேட்டனர். ஆனால் எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்காமல் சிரித்தபடியே சென்றார். அவர் பதில் அளிக்க முடியாமல் சிரித்தபடி சென்றாரா, நிருபர்களை தவிர்ப்பதற்காக சிரித்தபடி சென்றாரா அல்லது தனது நிலையை நினைத்து சிரித்தபடி சென்றாரா என்பது தெரியாமல் நிருபர்கள் குழம்பிவிட்டனர்.

Tags : Karnataka ,Tamil Nadu ,Cauvery Management Board ,Chief Minister ,New Delhi ,Cauvery Water Management Authority ,Karnataka government ,Cauvery ,Cauvery Water Regulatory Committee.… ,
× RELATED 2026 ஏப்.-ஜூன் காலாண்டில் இந்தியாவில்...