×

தோவாளை தாலுகா அலுவலக வளாக பகுதியில் குவிந்து கிடக்கும் ஜல்லி, ஓலைகளால் இடையூறு: விஷஜந்துக்கள் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம்

பூதப்பாண்டி: தோவாளை தாலுகா அலுவலக வளாக பகுதியில் குவிந்து கிடக்கும் ஜல்லி, ஓலைகள் பொதுமக்களுக்கு இடையூறை ஏற்படுத்தி வருகிறது. குமரி மாவட்டம் பூதப்பாண்டி, அழகியபாண்டியபுரம், தாழக்குடி உள்ளிட்ட பேரூராட்சிகள் மற்றும் 16 கிராம ஊராட்சிகளை கொண்ட தோவாளை தாலுகா அலுவலகம் பூதப்பாண்டியில் உள்ளது. தாலுகா அலுவலகத்துக்கு தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் அலுவலகத்தின் வளாக பகுதியில் குவித்து வைக்கப்பட்டுள்ள எம்.சாண்ட், ஜல்லி, கருங்கற்கள் மற்றும் ஓலைகள் பொதுமக்களுக்கு இடையூறை ஏற்படுத்தி வருகிறது.

அதாவது தாலுகா பகுதியில் ஓவர் லோடுடன் வந்து பிடிக்கப்படும் லாரி, டெம்போ உள்ளிட்ட வாகனங்கள், பாஸ் இல்லாத வாகனங்கள் பாரத்துடன் பறிமுதல் செய்யப்பட்டு தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் போலீசார், வருவாய் துறையினர் ேரஷன் அரிசி கடத்தல் வாகனங்களையும் பறிமுதல் செய்து தாலுகா அலுவலக வளாக பகுதியில் நிறுத்துகின்றனர்.

இவ்வாறு பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை குறிப்பிட்ட நாள் அவகாசம் கொடுத்து அபராதத்தை செலுத்தி கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் நீண்ட நாட்களை கடந்து வாகன உரிமையாளர்கள் அபராதத்தை செலுத்துகின்றனர். அதற்குள் லாரி, டெம்போ உள்ளிட்ட வாகனங்களின் டயரில் காற்று இறங்கிவிடுகிறது. இதனால் வேறு வழியின்றி லாரியில் இருக்கும் ஜல்லி, எம்.சாண்டை அலுவலக பகுதியிலேயே கொட்டிவிட்டு செல்கின்றனர். இதனால் தாலுகா அலுவலகத்தை சுற்றி எங்கு பார்த்தாலும் ஜல்லி, மணல் குவியல் குவியலாக காணப்படுகிறது. மேலும் தாலுகா அலுவலக சுற்றுவட்டார பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டிட பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு மீதி உள்ள ஓலைகளை அலுவலக வளாக பகுதியில் கொண்டு வந்து போட்டு செல்கின்றனர்.

இவற்றின் காரணமாக தாலுகா அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை நிறுத்த இடம் இல்லாமல் அவதியடைந்து வருகின்றனர். இதற்கிடையே குவித்து வைக்கப்பட்டுள்ள ஓலைகளில் விஷ ஜந்துக்கள் நடமாட்டமும் உள்ளது. இதனால் அங்கு வரும் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் சென்று வருகின்றனர். இதற்கிடையே தாலுகா அலுவலக பின்பகுதியில் இலுப்பை மரங்கள் உள்ளன. தற்போது ஓலை உள்ளிட்ட கழிவுகள் காரணமாக இலுப்பை மரத்தின் வேர் பகுதி பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது.

எனவே பொதுமக்கள் நலன்கருதி தோவாளை தாலுகா அலுவலக வளாக பகுதியில் குவிந்து கிடக்கும் ஜல்லி, எம்.சாண்ட் மற்றும் ஓலைகளை அகற்றுவதோடு வளாக பகுதியை தூய்மையாக வைத்திருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Dhawale Taluga ,Jalli ,Taluga ,Bothapandi ,Bhoodapandi ,Kumari District Bothapandi ,Alagiyapandiapura ,Thadhakudi ,
× RELATED மசினகுடி- தெப்பக்காடு சாலையோரம்...