நன்றி குங்குமம் தோழி
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே இங்கே ஆங்கிலேயரின் ஆட்சியால் இங்கிலீஷ் வாழ்க்கை முறை என்பது பலரிடமும் இருந்தது. அதன் தொடர்ச்சியாக தொலைக்காட்சி வழியாகவும், வேறு ஊர்களுக்கும், நாடுகளுக்கும் செல்வதன் மூலமாகவும் தொடர்ந்து நாம் மேலை நாடுகள் எனக் கருதப்படும் மேற்கத்திய நாடுகளின் வாழ்க்கை முறையின் பாதிப்பினால் (Influence) இப்போதும் அவர்களது வாழ்வியல் முறைகளை பின்பற்றுகிறோம்.
மேலும், இதற்கு முக்கியமானக் காரணமாக இன்றைக்கு சமூக ஊடகங்களும் (Social Media), இணையமும் இருக்கிறது எனலாம். இதனால் தவறான தகவல்கள், வழக்கங்கள், நம் உணவு முறை, வாழ்க்கை முறை, தூக்கம், ஆரோக்கியம் என அனைத்தையும் பாதிக்கிறது. பல வளர்ந்த நாடுகளில்தான் ஆரோக்கியம் சார்ந்த சிக்கல்கள் நிறைய இருக்கிறது. நீரிழிவு நோயில் இந்தியா முன் சென்று கொண்டிருக்கிறது என்றும் ஆய்வுகள் சொல்கின்றன.ஆகவே நாம் கடைபிடிக்கும் தவறான இங்கிலீஷ் பழக்க வழக்கங்கள் என்ன? அதன் பாதிப்புகள் யாவை? தவிர்க்க என்ன செய்வது? இவற்றில் இயன்முறை மருத்துவத்தின் பங்கு யாது? என்பது அனைத்தையும் இங்கே தெரிந்துகொள்வோம்.
இளம் வயதின் முக்கியத்துவம்…
இளம் வயதில் நம் உடல் சார்ந்த மாற்றங்கள் என்னென்ன செய்கிறோமோ அவை அனைத்தும் வயதானக் காலத்திற்கான விதையே. நம் தசை திறன், மூட்டு ஆரோக்கியம், ஸ்திரத்தன்மை, ஒருங்கிணைப்புத் திறன், மனம் மற்றும் உடல் ஆற்றல் என அனைத்தும் இருபது முதல் நாற்பத்தி ஐந்து வயது வரை நாம் எப்படி உடலை பேணிக்காக்கிறோம் என்பதனைப் பொறுத்தே அமைகிறது.
இங்கிலீஷ் வாழ்க்கை…
அறிவியல் கண்டுபிடிப்புகளை நாம் நமது சோம்பல் தனத்திற்காக தவறாகப் பயன்படுத்துவதால் நமது ஆரோக்கியம் கேள்விக்குறியாகிறது. பதப்படுத்தப்பட்ட உணவு, குப்பை உணவுகள், உடனடியாகத் தயாரிக்கும் உணவுகள் என உணவு முறைகள் ஒரு பக்கம். உடல்ரீதியான எந்தவித உழைப்பும் இல்லாமல் அமர்ந்த இடத்திலேயே நாள் முழுவதும் வேலை பார்க்கும் மாற்றம் மறுபக்கம் என நம் ஆரோக்கியத்திற்கும், இயற்கைக்கும் எதிராக மேலை நாடுகளை போலவே மாறிக்கொண்டே வருகிறோம்.
காரணங்கள்…
*உலகமயமாக்கலின் விளைவாக எளிதில் தாக்கமடைவது (Influenced). உதாரணமாக, காலை உணவில் வெளிநாட்டு உணவான பேன் கேக் (Pan Cake) உண்பது.
*எதற்காகவும் இன்று உடல் உழைப்பை செலுத்த வேண்டிய அவசியமில்லாமல் இருப்பது. உதாரணமாக, வீட்டை பெருக்குவதற்கு ‘ரோபோடிக் கிளீனர்’ பயன்படுத்துவது.
*ஆரோக்கியம் சார்ந்த விஷயங்கள் அனைத்தும் நமக்கு தெரிந்திருந்தாலும் அதனை தினசரி வாழ்க்கை முறையில் பயன்படுத்தாமல் மெத்தனமாக இருப்பது. உதாரணமாக, சூரிய ஒளியில் நிற்பது நல்லது எனத் தெரிந்தும் நாம் நிற்கத் தவறுவது.
*முந்தைய தலைமுறையை விட பொருளாதாரம் மேம்பட்டு இருப்பதினால் அதிக உணவுகளை அவ்வப்போது உண்டு கழிக்கிறோம்.
*ஆரோக்கியத்தில் நேரம் செலுத்துவதற்கு நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டிருப்பது.
*நமக்கு உண்மையில் தேவை இருக்கிறதா என சிந்திக்காமல் வாடிக்கையாளர் மனநிலையில் அனைத்து பொருட்களையும் வாங்கிக் குவிப்பது.
*தன்னைப் பற்றி மட்டுமே எப்போதும் சிந்தனைகள் இருப்பது. இதனால் எப்போதும் நம்மை ஒரு ‘Comfort zone’ல் வைத்து உடல் அளவில் வேலைகள் செய்யாமல் இருப்பது.
ஏற்படும் சிக்கல்கள்…
* முறையான மாதவிடாய் சுழற்சி இல்லாமல் இருப்பது.
* பிசிஓடி பிரச்னை.
* ஆண்களுக்கு விந்தணு சார்ந்த பிரச்னைகள்.
* அதிகமான இன்சுலின் எதிர்ப்புத் தன்மை.
* மூளை மூடுபனி (Brain Fog). அதாவது, சாப்பிட்டவுடன் மந்தமாக இருப்பது, எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாமல் இருப்பது.
* ரத்த சர்க்கரை அளவு எப்போதும் அதிகமாகவே இருப்பது.
* திடீரென ரத்த சர்க்கரை அளவு உயர்வதை குளுக்கோஸ் ஸ்பைக் (Glucose Spike) என மருத்துவத்தில் சொல்வோம்.
* உணவு உண்பதில் அதிக உந்துதல் (Cravings) ஏற்படுவது. இதனால் தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை எதையாவது உண்டு கொண்டே இருப்பது. இப்படி ஒருநாள் முழுவதும் தொடர்ந்து, பிறகு தினசரி அப்படியே நிகழ்வது.
* வயிற்றைச் சுற்றி உள்ள கொழுப்புப் படலம் அதிகமாவது.
* தசை மற்றும் எலும்பு மூட்டு ஆரோக்கியத்தில் குறை ஏற்படுவது.
* எளிதாய் உடல் சோர்வு உண்டாவது.
* அடிக்கடி மன அழுத்தம் மற்றும் படபடப்பு ஏற்படுவது.
* தொலைபேசி, தொலைக்காட்சி, கஞ்சா போன்ற பழக்கங்களுக்கு அடிமையாவது.
விளையும் விளைவுகள்…
உடற்பருமன், குழந்தையின்மை, கொழுப்பு படிந்த கல்லீரல், நீரிழிவு நோய், இளம் வயதிலேயே வயதான தோற்றம், மெட்டபாலிக் சிண்ட்ரோம் (Metabloic Syndrome) என்று சொல்லப்படும் பல உடல் சிக்கல்கள் ஒன்றிணைந்த நிலை, இதய அடைப்பு, பக்கவாதம், முதுகு வலி, கழுத்து வலி போன்ற மூட்டுப் பிரச்னைகளால் இளம் வயதிலேயே பாதிக்கப்படுவது, மனச்சோர்வு (Deppression), பதட்டம் போன்ற பாதிப்புகள் நிகழலாம்.
தடுக்கும் வழிமுறைகள்…
* வாரத்திற்கு ஐந்து நாட்களாவது உடற்பயிற்சிகள் செய்வது.
* சர்க்கரை சத்து, மாவுச் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடும் அளவினை குறைப்பது.
* இனிப்புப் பண்டங்களை சாப்பிட வேண்டும் என்ற உந்துதலை (Sweet Cravings) குறைப்பது.
* தினசரி வாழ்க்கை முறையில், உடல் உழைப்பில் ஈடுபடுவது. உதாரணமாக, கைகளில் துணிதுவைப்பது.
* தொலைக்காட்சி, தொலைபேசி போன்றவைகளுக்கு அடிமையாகாமல் இருப்பது.
* சத்தான உணவுகளை உண்பது. குறிப்பாக புரதம், நல்ல கொழுப்புச் சத்து, நார்சத்து இவைகளை தினமும் மூன்று வேலை உணவுகளிலும் சேர்த்துக் கொள்வது.
* வாழ்க்கையின் பயன் என்ன என்பதனை உணர்ந்து அதற்கான பாதையில் பயணிப்பது.
* ‘தான்’ என எப்போதும் இல்லாமல் பிறருக்காகவும் இருப்பது.
* முறையான தூக்கத்தினை தினசரி கடைபிடிப்பது. இரவில் சீக்கிரமாகவே தூங்குவது.
* தினசரி குறைந்தது இரண்டு லிட்டர் நீராவது அருந்துவது.
* சமூகம் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடும் போது மன ஆரோக்கியம் மேம்படுகிறது. உதாரணமாக, குறைந்தபட்சம் பலருடன் பேசி பழகுவது.
* உடல் உழைப்பு சார்ந்த பொழுதுபோக்குகளில் ஈடுபடுவது. உதாரணமாக மலை ஏறுவது, நடன வகுப்புகளில் சேர்வது, சைக்கிளிங் செய்வது.
இயன்முறை மருத்துவத்தின் பங்கு…
நாம் ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சிகள் கட்டாயம் செய்ய வேண்டும். எனவே, உடற்பயிற்சிகள் கற்றுக்கொள்ள அருகிலுள்ள இயன்முறை மருத்துவரை அணுகி உடல் தசை பரிசோதனைகளை செய்துகொள்வது அவசியம்.நம் தசை திறனுக்கேற்ப, தொழிலுக் கேற்ப, தேவைக்கேற்ப உடற்பயிற்சிகளை பரிந்துரைத்து கற்றும் தருவர். இதனால் உடற் பருமன், மூளை மந்தம், மனப்பதட்டம் குறைவதும், சுறுசுறுப்பான வாழ்க்கை முறையில் இயங்கவும் உதவுகிறது. மேலும், ஹார்மோன் சார்ந்த சிக்கல்களும் குறைகிறது.
முழுமையான வாழ்க்கை முறை மாற்றத்திற்கு அருகிலுள்ள உணவியல் நிபுணரை அணுகி உணவு சார்ந்த தெளிவுகளையும், பொது மருத்துவரை அணுகி உடல் சார் தெளிவுகளையும், பரிசோதனைகளையும் அறிந்து செயல்படுவது அவசியம்.மொத்தத்தில் நம் பாரம்பரிய வாழ்க்கை முறையை கடைபிடிப்பதும், அதற்கு துணை நிற்கும் விதமாக அறிவியல் காரணங்களை கண்டுபிடிப்பதும்தான் சிறந்தது. ‘ஆரோக்கியமே சிறந்த செல்வம்’, ‘வருமுன் காப்போம்’ போன்ற பழமொழிகள் பழையதாக இருந்தாலும், அதுவே எக்காலத்துக்குமான படிப்பினை; உண்மை என்பதனைக் கருத்தில் கொண்டு, இளையோர் அனைவரும் ஆரோக்கியமாக வாழும் நல்வழியினை தேர்வு செய்து பின்பற்றுவோம்.
தொகுப்பு: கோமதி இசைக்கர் இயன்முறை மருத்துவர்
