×

மின்வாரிய ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரம் செய்யக்கோரி கோட்டைக்குள் அமைச்சரை முற்றுகையிட்ட பணியாளர்கள்: ‘பார்க்கலாம்’ என்ற பதிலால் கொந்தளிப்பு

 

சென்னை: மின்சார வாரியத்தில் பணியாற்றும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தலைமைச் செயலகத்திற்கு உள்ளேயே மின்சாரத்துறை அமைச்சரை முற்றுகையிட்டு கேள்வி எழுப்பிய ஒப்பந்த பணியாளர்களால் பரபரப்பு ஏற்பட்டது. பார்த்துக்கொள்ளலாம் என அமைச்சர் நிர்மல்குமார் பதிலளித்ததால் பணியாளர்கள் கொந்தளித்தனர். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்சார ஒப்பந்த ஊழியர்கள் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தங்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்திற்கு பின்புறத்தில் சுமார் 7000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், அங்கிருந்து ஐந்திற்கும் மேற்பட்ட மின்சார வாரியத்தின் ஒப்பந்த பணியாளர்கள் தலைமைச் செயலகத்திற்கு புறப்பட்டு வந்தனர். அப்போது மின்சாரத்துறை அமைச்சர் தலைமைச் செயலகத்தின் முதல் தளத்திலிருந்து கீழ்தளத்திற்கு வந்து வாகனத்தில் ஏறும்போது, மின்சாரத்துறையின் ஒப்பந்த பணியாளர்கள் மின்சார துறையின் அமைச்சர் நிர்மல்குமாரை முற்றுகையிட்டு, தமிழக வெற்றிக் கழக அரசு அமைந்த உடன் ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வோம் என கூறினீர்கள்.

ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்கள் கழிந்த பின்னரும் எங்களை இன்னமும் ஏன் பணி நிரந்தரம் செய்யவில்லை என அமைச்சரிடம் முற்றுகையிட்டு கேள்வி எழுப்பினர்.
அப்போது அமைச்சர் அவர்களுக்கு பதில் கூற முடியாமல், பார்த்துக் கொள்ளலாம், பொறுமையாக இருங்கள் என கூறினார். திடீரென அந்த பகுதியில் இருந்தவர்கள் அனைவரும் அமைச்சரை முற்றுகையிட்டதால் உடனடியாக அமைச்சர் அங்கிருந்து காரில் புறப்பட்டார்.

இதுகுறித்து தமிழக மின்சார வாரியத்தின் ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க மாநில தலைவர் மகேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: தவெக இதுவரை ஐந்து முறை ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வோம் என எங்களுடன் சேர்ந்து போராடிவிட்டு, தற்போது எங்களை பணி நிரந்தரம் செய்யாமல் இழுத்தடிக்கிறது. சாகும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும். தமிழ்நாடு முழுவதும் உயிர் போகும் வரை போராடுவோம். மின்சாரம் இல்லாமல் ஆக்கவும் தெரியும். அமைச்சரை முற்றுகையிட்டு நாங்கள் கேள்வி எழுப்பினால் அமைச்சர் முறையாக பதில் அளிக்க மறுக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags : Electricity Board ,Chennai ,Minister ,Electricity ,
× RELATED கனிமங்களை கொண்டு செல்ல நிரந்தர தடை...