×

முதல்வருக்கு மிரட்டல் விடுத்து பேசியதாக குற்றச்சாட்டு திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமீன் மனு மீது தீர்ப்பு தள்ளிவைப்பு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

 

சென்னை: முதல்வருக்கு மிரட்டல் விடுத்து பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. கோவில்பட்டியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசிய விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜீ.வி.மார்க்கண்டேயன் முதலமைச்சருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் அவதூறாகப் பேசியதாக தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்துள்ளனர். ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை தூத்துக்குடி நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதையடுத்து, தன்னை சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், ஜாமீன் வழங்கக் கோரியும் மார்க்கண்டேயன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. மார்க்கண்டேயன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், விசாரணைக்கு அழைத்து நோட்டீஸ் அனுப்பாமல் நேரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். உச்ச நீதிமன்ற விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதால், நீதிமன்ற காவலில் வைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். ஜாமீன் வழங்க வேண்டும். குற்றம் புரிந்ததற்கான எந்த காரணமும் இல்லாமல், மாஜிஸ்திரேட் இயந்திரத்தனமாக கைது உத்தரவு பிறப்பித்துள்ளார். பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் எதுவும் பேசவில்லை. மனுதாரர் இரண்டு முறை சேர்மேனாகவும் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். எதிர்க்கட்சி என்ற முறையிலேயே விமர்சனம் செய்தார் என்று வாதிட்டார்.

காவல் துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பேசியது சமூக வலைதளங்களில் வைரலானது. கைது செய்வதற்கான காரணங்களில் திருப்தி அடைந்த பிறகே போலீசார் கைது செய்தனர். கைதுக்கு முன் இரண்டு முறை தகவல் வழங்கப்பட்டு அது வீடியோ பதிவு செய்யப்பட்டது என்றார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளார்.

Tags : DMK ,MLA Markandeyan ,Madras High Court ,Chennai ,MLA ,Markandeyan ,Kovilpatti ,Vilathikulam ,
× RELATED கனிமங்களை கொண்டு செல்ல நிரந்தர தடை...