×

மேகதாது விவகாரம் ஒன்றிய அரசு தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கியது ஏன்? அண்ணாமலை சரமாரி கேள்வி

 

சென்னை: மேகதாது விவகாரத்தில் ஒன்றிய அரசு தனது முந்தைய நிலைப்பாட்டிலிருந்து திடீரென பின்வாங்கியது ஏன் என்று அண்ணாமலை கேள்வி எழுப்பிள்ளார். வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த 16.2.2018 அன்று, உச்ச நீதிமன்றம் வழங்கிய காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான தீர்ப்பில், கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே எந்தவொரு கட்டமைப்பையும் புதிதாக ஏற்படுத்த, காவிரி நதி பாயும் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரியின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை என நேற்றைய தினம், மாநிலங்களவையில், காவிரி நதி தொடர்பாக, ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சகம் அளித்துள்ள பதில் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

கடந்த 5.8.2021 அன்று அன்றைய ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், அணை கட்டுமானத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) தயாரிக்க, கர்நாடக மாநிலத்துக்கு வழங்கப்பட்ட அனுமதி நிபந்தனைக்குட்பட்டது என்றும், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு சட்டத்தின்படி, காவிரி கடைமட்டத்தில் பாயும் மாநிலங்களின், (குறிப்பாக தமிழ்நாட்டின்) ஒப்புதல் இன்றி, நதியின் குறுக்கே அணை உள்ளிட்ட கட்டமைப்புகளை அமைக்க முடியாது என்றும் நாடாளுமன்றத்திலேயே தெளிவாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தமிழ்நாட்டு விவசாயிகளின் உரிமைகளையும், நலன்களையும் புறக்கணித்து, ஒன்றிய அரசு தனது முந்தைய நிலைப்பாட்டிலிருந்து திடீரென பின்வாங்கியிருப்பது, கர்நாடக தேர்தல் அரசியலுக்காகவா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இத்தகைய முக்கியமான விவகாரங்களில், ஒன்றிய அரசு, நேர்மையாகவும், வெளிப்படையாகவும், ஒரே நிலைப்பாட்டிலும் செயல்பட வேண்டும் என எதிர்பார்ப்பது தவறா?. தமிழ்நாட்டு மக்களை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரு சகோதர மாநிலங்களுக்கிடையேயான நல்லுறவை பாதிக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவிரி விவகாரத்தில் சட்டத்திற்கும் நீதிக்கும் உட்பட்டு செயல்படுமாறு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

 

Tags : Union Government ,Megeda ,Annamalai ,Chennai ,president ,We the Leaders ,
× RELATED பொள்ளாச்சி சிடிசி மேடு பகுதியில்...