×

பாப்பாபட்டி கிராமம் வன்முறை பூமியாக சித்தரிப்பு; ஜனநாயகன் திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு: தயாரிப்பாளர், இயக்குநர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

 

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா பாப்பாபட்டி கிராம மக்கள் சார்பாக சின்னச்சாமி, ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: முதலமைச்சர் நடிகர் விஜய் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவான ஜனநாயகன் திரைப்படம் ஜூலை 23ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தின் தொடக்க மற்றும் முடிவு பகுதிகளில், உசிலம்பட்டி அருகேயுள்ள பாப்பாபட்டி கிராமத்தில் ஊராட்சி மன்றத்தேர்தல் நடைபெற்றது போலவும், அங்கு வாக்களிக்க முற்படுபவர்களின் கைகள் வெட்டப்படுவது போலவும், பள்ளிச் சிறுமிகள் மற்றும் பெண்கள் மீது வன்முறைத் தாக்குதல்கள் நடத்தப்படுவது போலவும் அப்பட்டமான பொய்யான காட்சிகள் இடம்
பெற்றுள்ளன.

பாப்பாபட்டி கிராம மக்கள் தங்களது உரிமைகளுக்காகவும், சட்டப் போராட்டங்களின் வழியிலும் போராடி வந்த வரலாற்றை மறைத்து, கிராமத்தை சாதி வெறி பிடித்த பகுதியாகவும், வன்முறை பூமியாகவும் தவறாக சித்தரித்துள்ளனர். இது கிராம மக்களின் கண்ணியத்திற்கும், நற்பெயருக்கும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பாப்பாபட்டி கிராம மக்கள் அளித்த புகார்களை ஆய்வு செய்து, படத்தில் உள்ள அவதூறு மற்றும் வன்முறையைத் தூண்டும் காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும். ஆட்சேபனைக்குரிய காட்சிகள் முழுமையாக நீக்கப்படும் வரை திரைப்படத்தை திரையரங்குகளிலோ அல்லது பிற ஊடகங்களிலோ திரையிட இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். கிராமத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததற்காக படக்குழுவினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் வித்யாசாகர் ஆஜராகி, ‘‘கிராமத்தை சாதி வெறி பிடித்த பகுதியாகவும், வன்முறை பூமியாகவும் தவறாக சித்தரித்துள்ளது ஏற்புடையது அல்ல. எனவே, அந்த காட்சிகளை உடனடியாக நீக்குமாறு உத்தரவிட வேண்டும். ஏற்கனவே இந்த படம் சமூக வலைதளங்களில் வெளியானபோதே எங்களது ஊர் பெயரை நீக்க வேண்டும் என மனு அளித்திருந்தோம், அதைக் கூட பரிசீலனை செய்யவில்லை’’ என்றார். ஒன்றிய அரசின் துணை சொலிசிட்டர் கோவிந்தராஜன் ஆஜராகி, ‘‘இந்த படத்தில் பாப்பம்பட்டி என்று தான் வருகிறது, பாப்பாபட்டி இல்லை. மனுதாரர் சமூக வலைதளங்களில் படத்தை பார்த்ததாக சொல்கிறார். அதுவே சட்ட விரோதம். எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என்றார்.

இதனையடுத்து நீதிபதிகள், ‘‘சட்டவிரோதமாக படத்தை பார்த்து எப்படி ஆட்சேபனை தெரிவித்தீர்கள்? இது போன்ற விஷயங்களை ஊக்குவிக்க முடியாது’’ என்றனர். பின்னர், மனுவிற்கு திரைப்பட தணிக்கை குழு தலைவர், பட தயாரிப்பாளர் வெங்கட் நாராயணன், இயக்குநர் ஹெச்.வினோத் ஆகியோர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

Tags : Papapatti ,Madurai ,Court ,Chinnasamy ,Usilampatti taluka, Madurai district ,H. Vinoth ,Chief Minister ,Vijay ,
× RELATED பொள்ளாச்சி சிடிசி மேடு பகுதியில்...