×

பொள்ளாச்சி சிடிசி மேடு பகுதியில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்திலிருந்து நாளை முதல் பஸ்கள் இயக்கம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மத்திய பகுதியில் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம் செயல்படுகிறது. இந்த பேருந்து நிலையங்களில் இருந்து உள்ளூர் சுற்றுவட்டார பகுதி மட்டுமின்றி கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், மதுரை, வால்பாறை, பழனி, திண்டுக்கல், மேட்டுப்பாளையம், ஊட்டி மற்றும் மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த இரண்டு பேருந்து நிலையங்களில் இருந்து, அரசு மற்றும் தனியார் பஸ்கள் என தினமும் சுமார் 250க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுவதால், பயணிகளின் எண்ணிக்கை எப்போதும் அதிகமாக இருக்கும்.

இதனால், நகரை அடுத்துள்ள கோவை ரோடு சிடிசி மேட்டில் நகராட்சிக்கு உட்பட்ட இடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, ரூ.7.50 கோடி மதிப்பீட்டில் துவங்கப்பட்டது. இந்த புதிய பேருந்து நிலைய திறப்புவிழா சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. அதன் பின்னர் தேர்தல் அறிவிக்கப்பட்டதால், சிடிசி மேடு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படவில்லை. இருந்தாலும் பேருந்து நிலையத்தை சுற்றிலும் பல்வேறு கலைநயத்துடன் ஓவியங்கள் வரையப்பட்டதுடன், மீதமுள்ள பணிகளும் நடைபெற்று வந்தது.

தற்போது சிடிசி மேடு புதிய பேருந்து நிலையத்தில் பராமரிப்பு பணி மற்றும் பேருந்து போக்குவரத்து வசதிக்கான அனைத்து ஏற்பாடும் தயார் படுத்தப்பட்டுள்ள நிலையில், நாளை (புதன்) முதல் சிடிசி மேடு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து, பொள்ளாச்சி நகராட்சி மற்றும் போக்குவரத்து துறை சார்பில், பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை முதல் கட்டமாக தாராபுரம், பல்லடம், திருப்பூர், சேலம், ஈரோடு மற்றும் நகர பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிடிசி மேட்டில் உள்ள புதிய பேருந்து நிலையத்திலிருந்து பஸ்கள் இயக்கம் துவங்கப்படுவதால், அதற்கான ஏற்பாடுகளை நகராட்சி நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Tags : Pollachi CDC Medu ,Pollachi ,Coimbatore ,Tiruppur ,Erode ,Karur ,Madurai ,Valparai ,Palani ,Dindigul ,Mettupalayam ,Ooty ,
× RELATED விருதுநகரில் அரசு அலுவலகத்திற்குள் புகுந்த மரநாய் மீட்பு