சென்னை: ஆளுநரின் தமிழர் விரோத போக்கு ஏற்புடையதல்ல என்று அமைச்சர் வன்னிஅரசு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில் தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே! அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே! தமிழணங்கே! உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! என அன்னைத்தமிழுக்கு வாழ்த்துப்பா படைத்த மனோன்மணியம் சுந்தரனார் பெயரிலான பல்கலைக்கழகத்திலேயே தமது தமிழ் வெறுப்பு கலகத்தை லோக்பவன் தொடங்கியுள்ளது.
இன்று மனோன்மணியம் பல்கலைக்கழகத்தில் நடக்கும் பட்டமளிப்பு விழாவை தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சர் விசுவநாதன் புறக்கணித்துள்ளார். இவரோடு சேர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களும் பல மாணவர்களும் புறக்கணித்திருப்பது வரவேற்புக்குரியது. ஆளுனரின் தமிழர் விரோதப்போக்கு ஏற்புடையதல்ல. அவரவர் தாய்மொழிக்கு முன்னுரிமை தராமல், வந்தேமாதரம் மூலம் போலி தேசபக்தியை கட்டமைக்க முனைவது அரசியலமைப்பு சட்டத்துக்கே எதிரானதாகும். இதைத்தான், நேரு காலத்திலிருந்து இப்போதுவரை ஆர்எஸ்எஸ் கும்பல் செய்து வருகிறது. தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியும் வந்து சேரவில்லை.
தமிழ்மொழிக்கு ஒதுக்க வேண்டிய நிதியை மறுத்து சமற்கிருதத்துக்கு ஒதுக்கும் வஞ்சனை. காவிரியிலிருந்து உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நீரையும் திறந்து விடுவதில்லை. எல்லாவற்றிலும் ஒன்றிய பாஜக அரசு கள்ள மவுனமே காக்கிறது. இந்த சூழலில், வந்தே மாதரம் மட்டும் திணிப்பது சரியா? தமிழ்நாட்டின் உணர்வுகளை புறக்கணிக்கும் ஆளுனர் மாளிகையின் தமிழர் விரோதப்போக்கு கண்டனத்துக்குரியதாகும். என்று குறிப்பிட்டுள்ளார்.
