×

கேரளாவில் இருந்து வந்து சேரும் குப்பைகளின் புகலிடமாகும் கம்பம் மெட்டு மலைச்சாலை

*தடுப்பு நடவடிக்கைக்கு வலியுறுத்தல்

கம்பம் : தமிழக – கேரள எல்லையான கம்பமெட்டு சோதனைச் சாவடி கம்பத்தில் இருந்து 10 கிமீ தொலைவில் உள்ளது. மொத்தம் 18 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட இச்சாலையில், நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயணிக்கின்றனர்.

இவ்வழியாக கேரளாவில் உள்ள ஏலத் தோட்டத்திற்கு தமிழகத்திலிருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் சென்று வருகின்றனர். கேரளாவில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் தங்களது மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக கம்பம் வந்து செல்கின்றனர்.

இதன்படி முக்கியத்துவம் வாய்ந்த இச்சாலை, மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் இரு மாநில எல்லை என்பதால், கம்பம் மெட்டில் தமிழகம் மற்றும் கேரளாவிற்கு என தனித்தனியான சோதனைச் சாவடிகள் உள்ளன. வனத்துறைக்கு சொந்தமான சோதனை சாவடி மற்றும் காவல்துறைக்கு சொந்தமான சோதனை சாவடிகள் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் தமிழக வனத்துறைக்கு சொந்தமான இப்பகுதி முழுவதிலும் கேரளாவில் இருந்து லாரிகளில் கொண்டு வந்து கொட்டப்படும் கழிவுகள் ஏராளமாக ஆங்காங்கே சாலையோரம் கொட்டப்படுகின்றன. இதனால் இப்பகுதி முழுவதும் துர்நாற்றத்துடன், சுகாதாரக் கேடு அதிகரித்துள்ளது.

வனத்துறை சார்பில் முறையான கண்காணிப்பு இல்லாததால், சோதனைச் சாவடிகளை மீறி கேரளாவில் இருந்து கழிவுகள் தமிழக வனப்பகுதியில் கொட்டப்படுகிறது. சோதனை சாவடிகளில் உள்ள சிசிடிவி காமிராக்கள் உயர் அதிகாரிகளால் ஆய்வு செய்யப்படுதில்லை என்பதை இது சுட்டிக் காட்டுவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே புறவழிச்சாலை அமைப்பதற்காக ஆயிரக்கணக்கான மரங்கள் இப்பகுதியில் வெட்டப்பட்டுள்ளதால் வனப்பகுதி வெகுவாக குறைந்துள்ளதுடன், மழை அளவு வருடத்திற்கு வருடம் பின்னோக்கி செல்கிறது. இந்நிலையில் மருத்துவக் கழிவுகளும் தமிழக வனப்பகுதியில் கொட்டப்பட்டால் மரங்கள் அழிந்து போகும் என்பது இயற்கை ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

எனவே கம்பம் மெட்டு சோதனைச் சாவடிகளில் போலீசார் மற்றும் வனத்துறையினர் கண்காணிப்பு பணிகளைதீவிரப்படுத்தி, கேரளாவில் இருந்து குப்பைக் கழிவுகள் கொண்டு வருவதை தடுக்க வேண்டும். பணிகளில் கவனம் செலுத்தாமல் இருப்போர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Gampam Medu Manichal ,Kerala ,Tamilaga-Kerala ,Kampametu ,
× RELATED முதல்வர் அலுவலக இடமாற்றத்தால்...