சென்னை: தமிழகத்தில் 7வது நிதிக்குழு அறிக்கை தாக்கல் செய்யும் காலக்கெடுவை தமிழக அரசு நீட்டித்துள்ளதால் உள்ளாட்சி தேர்தல் தள்ளி போகும் நிலை உருவாகியுள்ளது. இதனால் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள தவெக அரசு பயப்படுகிறதா என எதிர்கட்சிகள் விமர்சிக்க தொடங்கியுள்ளன.
தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்ற நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் ஆகிய சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.
தவெக அரசுக்கு தனிப் பெரும்பான்மை இல்லாத நிலையில், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா உள்ளிட்ட 6 அதிமுக எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். எனவே அந்த தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட நிலையில், திடீர் திருப்பமாக அந்த தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால் அந்த தொகுதியில் தேர்தல் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
எனவே வரும் 31ம்தேதி மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அடுத்தகட்ட முடிவு தொடர்பாக உத்தரவு வெளியாகும் என்ற தகவல் கூறப்படுகிறது. சட்டசபை தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி கூட்டணி ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றிக் கழகம், உள்ளாட்சித் தேர்தலிலும் அதே அளவு வெற்றியை பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்த தொடங்கியுள்ளது.
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தவெக ஆட்சி அமைந்திருந்தாலும், கவுன்சிலர்கள் முதல் மேயர் வரை தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் திமுக, அதிமுகவினர் மட்டுமே உள்ளனர். எனவே விரைவில் உள்ளாட்சி மன்ற தேர்தல் நடத்தி தவெக அந்த இடத்தை பிடிக்க திட்டமிட்டு வருகிறது. இதற்கான பணிகளை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை மாநகராட்சிகள் 25, நகராட்சிகள் 148, பேரூராட்சிகள் 490, ஊராட்சி ஒன்றியங்கள் 388, கிராம ஊராட்சிகள் 12,618க்கும் மேற்பட்டவை உள்ளன. இந்த உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் பொதுவாக 5 ஆண்டுகள். 2021ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதனால் இந்த ஆண்டின் இறுதி அல்லது 2027ம் ஆண்டின் தொடக்கத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது.
அந்த வகையில், இந்தாண்டு இறுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது 7வது மாநில நிதிக்குழுவின் பதவிக்காலத்தை தமிழ்நாடு அரசு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவில், “கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளின் நிதி நிலையை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள 7வது மாநில நிதிக்குழுவின் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்பு நிர்ணயிக்கப்பட்டிருந்த ஆகஸ்ட் 31க்கு பதில் டிசம்பர் 31 என நீட்டிக்கப்பட்டு திருத்தம் செய்யப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது தள்ளிப்போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உள்ளாட்சித் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் இல்லாமல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடத்த வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதே நேரம் சட்டமன்ற தேர்தலில் முதல்வர் விஜய் மீதான ஈர்ப்பு காரணமாக மக்கள் வாக்களித்துள்ளனர். அது விரைவில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல் அல்லது உள்ளாட்சி மன்ற தேர்தலில் பிரதிபலிக்காது என திமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் கூறுகின்றனர். எனவே உள்ளாட்சி மன்ற தேர்தலை தற்போது நடத்தாமல் காலம் தாழ்த்துவது தோல்வி பயம் என்றும் அவர்கள் விமர்சித்து வருவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
