×

காதலிக்க மறுத்த மாணவிக்கு கத்திகுத்து போலீசுக்கு பயந்து வாலிபர் தற்கொலை

சிதம்பரம்: காதலிக்க மறுத்த பிளஸ்1 மாணவியை வீடுபுகுந்து கத்தியால் குத்திய வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த சி.முட்லூர் பகுதியை சேர்ந்த சேகர் மகன் ஐயப்பன் (28), எலக்ட்ரீசியன். இவர் அருகிலுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பிளஸ்1 மாணவிக்கு காதல் வலை வீசியுள்ளார். பள்ளி செல்லும்போதெல்லாம் அந்த மாணவியை கடந்த 2 வருடமாக பின்தொடர்ந்து காதல் டார்ச்சர் செய்துள்ளார். அதற்கு அம்மாணவி படிப்புதான் முக்கியம் என மறுத்த நிலையில், “என்னை காதலிக்கவில்லை என்றால் உன்னை கொன்றுவிடுவேன்’’ என சம்பவத்தன்று மிரட்டியுள்ளார். ஆனால் அவனது மிரட்டலை பொருட்படுத்தாத மாணவி தொடர்ந்து படிப்பில் கவனம் செலுத்தி வந்துள்ளார்.

இதனிடையே நேற்று மாலை மாணவி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த ஐயப்பன், அவரது வீட்டுக்கு சென்று தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி உள்ளார். மாணவி அவரை கண்டித்த நிலையில், ஆத்திரமடைந்த ஐயப்பன், தான் கையில் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் மாணவியின் கழுத்து மற்றும் முதுகில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். மாணவியின் அலறல் சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு, தலைமறைவான ஐயப்பனை தேடினர்.

இதனிடையே சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி பின்புறம் உள்ள மரத்தில், ஐயப்பன் தூக்குப்போட்டு இறந்த நிலையில் தொங்கினார். இதையடுத்து அவரது உடலை நள்ளிரவில் கைப்பற்றிய போலீசார், சிதம்பரத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், மாணவியை கத்தியால் குத்திய வாலிபர் போலீசுக்கு பயந்து, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Chidambaram ,Cuddalore District Chidambaram ,C. Sekhar ,Ayyappan ,Mudlur ,
× RELATED சிங்கப்பூரில் இருந்து விமானத்தில்...