×

கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியது அரசின் கொள்கை முடிவு: ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்

மதுரை: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியது அரசின் கொள்கை முடிவு என உயர் நீதிமன்றக் கிளையில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்குவது அரசின் கொள்கை முடிவு எனத் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, கரூருக்குப் பயணம் மேற்கொண்ட முதலமைச்சர், பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அரசுப் பணி நியமன ஆணைகளை வழங்கினார். அதே நேரத்தில், பணி நியமனம் வழங்கப்பட்ட நாளன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது; அப்போது, தற்காலிக அடிப்படையில் மட்டுமே இப்பணி நியமனங்களை வழங்கலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், ‘இதுபோன்ற கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்க அரசுக்கு அதிகாரம் உள்ளதா? கொள்கை முடிவு எடுத்து அரசு இதனை வழங்க முடியுமா? இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) விதிகள் என்ன கூறுகின்றன?’ என்பதையெல்லாம் கேட்டறிந்த பின்னரே நாங்கள் எங்களுடைய இறுதி நிலைப்பாட்டை அறிவிப்போம் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கூறியிருந்தது.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது. நாம் தமிழர் கட்சி மற்றும் மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் மற்றும் திண்டுக்கல்லைச் சேர்ந்த சமூக ஆர்வலர் எனப் பலர் இது குறித்துப் பொதுநல வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தனர்.

அவர்களது மனுக்களில், கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களில் தகுதியின் அடிப்படையில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கிய அரசின் முடிவு, சட்டப்பூர்வமான பணியாளர் தேர்வு முறையைப் பின்பற்றாமல் செய்யப்பட்ட ஒரு தற்காலிக ஏற்பாடாகும். மேலும், இது தங்களுக்குப் பிடித்தமான அரசுப் பணியைத் தேர்ந்தெடுத்துப் பெறும் தவறான ஒரு வாய்ப்பை உருவாக்கிவிடும்’ என்று குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நடைபெற்று வரும் இந்த விசாரணையில், இரு தரப்பிலும் கடுமையான வாதங்கள் முன்வைக்கப்பட்டது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களில், ‘இதுபோன்ற விபத்து மற்றும் அசம்பாவிதச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நேரடியாக அரசு வேலை வழங்கும் முடிவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். போட்டித் தேர்வுகள் மற்றும் சட்டப்பூர்வ விதிமுறைகளின் அடிப்படையிலேயே அரசுப் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.

நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் ஆர். சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வில் தற்போது இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, ‘கருணை அடிப்படையிலான இதுபோன்ற சிறப்புப் பணி நியமனங்களுக்குத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) அனுமதி தேவையில்லை’ எனத் தேர்வாணையத்தின் சார்பில் நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Karur ,Icourt ,Madurai ,Government of Tamil Nadu ,High Court Branch ,High Court ,
× RELATED வளைகுடா நாடுகளில் பணிபுரிவோரில்...