×

முழு பயிர்க்கடன் தள்ளுபடியை வலியுறுத்தி அனைத்து விவசாய சங்கத்தினர் கவன ஈர்ப்பு கூட்டம்

*ஆலோசனை கூட்டத்தில் முடிவு

ஊட்டி : ஊட்டியில் உள்ள ஒய்பிஏ அரங்கில் இளம் படுகர் சங்கம், மலை மாவட்ட சிறு விவசாயிகள் நல சங்கம், 4 சீமை படுகர் நல சங்கம் மற்றும் பல்வேறு விவசாய சங்கங்களின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு இளம் படுகர் சங்க தலைவர் ராமசந்திரன் தலைமை தாங்கினார்.

மலை மாவட்ட சிறு விவசாயிகள் நல சங்க தலைவர் தும்பூர் போஜன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் விவசாயிகள் எதிர் கொள்ளும் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

தொடர்ந்து இளம் படுகர் சங்க தலைவர் ராமசந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளின் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு தவெக தெரிவித்தது.

ஆட்சி பொறுப்பேற்ற நிலையில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் விகிதாச்சார அடிப்படையில் தள்ளுபடி என்பதை எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாது. எனவே தமிழக அரசு 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். தற்போது விவசாயிகள் பயன்படுத்தும் ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து ஆகியவைகளின் விலை உயர்வால் விவசாயிகள் அந்த விலை கொடுத்து வாங்க முடிவதில்லை.

எனவே ஒன்றிய, மாநில அரசுகள் தலையிட்டு விலை உயர்வை குறைத்து 50 சதவீத மானியம் வழங்க வேண்டும். கடந்த 1980ம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் தங்கள் அனுபோகத்தில் உள்ள நிலங்களை சர்வே செய்து தனித்தனியாக சப்-டிவிஷன் செய்து பட்டா பாஸ் புத்தகம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால் நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இப்பணிகள் நடைபெறவில்லை.

இதனால் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் தங்கள் நிலங்களை வங்கிகளில் அடகு வைத்து கடன் பெறவோ, விற்கவோ முடியாத நிலை மற்றும் அரசு அறிவிக்கும் சலுகைகளை பெற முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே அரசு உடனடியாக தலையிட்டு இந்த மாவட்ட நிலங்களை தற்போது அனுபோகம் செய்பவர்களின் பெயரில் தனியாக சர்வே செய்து சப்-டிவிஷன் செய்து பட்டா பாஸ்புத்தம் வழங்க வேண்டும்.

நீலகிரி மாவட்டத்தில் 65 ஆயிரம் சிறு குறு தேயிலை விவசாயிகள் உள்ளனர். அவர்களை நம்பி சுமார் 5 லட்சம் விவசாய தொழிலாளர்கள் உள்ளனர். ஆனால் கடந்த 30 ஆண்டுகளாக பசுந்தேயிலைக்கு கட்டுப்படியாகக்கூடிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கடும் பாதிப்பிற்கு ஆளாகி பெரும்பாலான விவசாயிகள் பிைழப்பு தேடி வெளி மாவட்டங்கள், மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து விட்டனர்.

இதனால் நீலகிரியில் உள்ள தேயிலை தோட்டங்கள் பெரும் பணம் படைத்தவர்களால் அழிக்கப்பட்டு பங்களாக்களாகவும், ரிசார்ட்டுகளாகவும் மாறியுள்ளன. விரைவில் கான்கிரீட் காடுகளாக மாறும் நிலை உள்ளது.

எனவே இதனை தடுக்க பசுந்தேயிலைக்கு கட்டுப்படியாகும் விலை வழங்க வழி வகை செய்ய வேண்டும். வனவிலங்குகள் தொல்லை அதிகரித்துள்ள நிலையில் மனிதர், விவசாய பயிர்களை காக்க சோலார் மின்வேலி அமைத்து தர வேண்டும்.

விவசாயிகளின் பாதுகாப்பிற்காக ரப்பர் குண்டு துப்பாக்கி பயன்படுத்த உரிமம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும் ஆகஸ்ட் 3ம் தேதியன்று ஊட்டி ஏடிசி திடலில் கவன ஈர்ப்பு கூட்டம் நடக்கிறது. இதில் விவசாயிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்’’ என்றார்.

Tags : Ooty ,Young Farmers Association ,Hill District Small Farmers Welfare Association ,4 Seemai Farmers Welfare Association ,YPA Hall ,
× RELATED பழைய ரயில்வே ஸ்டேஷன் அருகே ரயில் மோதியதில் 9 ஆடுகள் பலி