*உறவினர்கள் சாலை மறியலால் பரபரப்பு
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த மோகன்தாஸ் மனைவி தனம் (42). இவர், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டை பேராங்குளம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் உடலை பரிசோதனை செய்தபோது கர்ப்ப பையில் நீர்கட்டி இருப்பதாகவும், அதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனத்திற்கு, அந்த தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. பின்னர் தனம் மருத்துவரின் அறிவுரையின் பேரில் 10 நாட்களுக்கு ஒருமுறை அந்த மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 23ம்தேதி அன்று வழக்கம் போல் அந்த மருத்துவமனைக்கு சென்ற தனத்திற்கு, மருத்துவர் ஸ்டீராய்டு ஊசி போட்டதாகவும், இதனால் தனம் மயங்கி விழுந்ததாகவும் கூறப்படுகிறது. உடனடியாக மருத்துவர்கள் ஐசியு-வுக்கு மாற்றி வென்டிலேட்டர் வைத்து சிகிச்சை மேற்கொண்டு வந்தனர். இதன் பிறகு தனத்தின் உறவினர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு தனியார் மருத்துவமனை நிர்வாகம், தனத்தின் உறவினர்களிடம் ரூ.1 லட்சம் கொடுத்து மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தியுள்ளது. அதன்படி அவரை, உறவினர்கள் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சைக்காக அனுமதித்த தனம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் புதுக்கோட்டையில் சிகிச்சை அளிக்கப்பட்ட தனியார் மருத்துவமனையை நேற்று மதியம் 1 மணியளவில் முற்றுகையிட்டனர். தனம் உயிரிழப்புக்கு மருத்துவர்களின் தவறான சிகிச்சை தான் காரணம், தவறு செய்த மருத்துவர் மீது வழக்கு பதிய வேண்டும்.
தனியார் மருத்துவமனை உரிமைத்தை ரத்து செய்து மூட வேண்டும், உயிரிழந்த தனத்தில் உடலை உடற்கூறு ஆய்வு செய்து அவர் உயிரிழந்ததற்கான காரணத்தை தெரியப்படுத்த வேண்டும்.திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தனத்திற்கு சிகிச்சைக்கு செலவான தொகையை தனம் உயிரிழப்புக்கு காரணமான மருத்துவமனை நிர்வாகமே தர வேண்டும் என முழக்கங்கள் எழுப்பி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கணேஷ் நகர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மருத்துவமனை நிர்வாகத்திடம் உறவினர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து சென்றனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதனைத்தொடர்ந்து புதுக்கோட்டை- ஆலங்குடி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் தனியார் மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததால் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
