மழை பெய்ய வேண்டி பவானிசாகர் அணை விநாயகருக்கு 1008 குடம் தண்ணீர் அபிஷேகம்

*விவசாயிகள் சிறப்பு வழிபாடு

சத்தியமங்கலம் : பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 46 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்து தற்போது அணையின் நீர்மட்டம் 56 அடியாக உள்ளது. குடிநீர் தேவையை மட்டுமே பூர்த்தி செய்யும் அளவில் நீர் இருப்பு உள்ள நிலையில் கடந்த ஆண்டு இதே நாளில் அணை நீர்மட்டம் 100 அடியாக இருந்தது.

நீர்மட்டம் குறைவாக உள்ளதால் பவானிசாகர் அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்கால் மற்றும் பவானி ஆற்றில் பாசனத்திற்கு நீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே மழை பெய்ய வேண்டி கீழ்பவானி பாசன பகுதி விவசாயிகள் மற்று கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கம் சார்பில் 1வது மைல் முதல் 124வது மைல் வரை உள்ள ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட ஆண், பெண் விவசாயிகள் பவானிசாகர் அணையின் மேல் பகுதியில் உள்ள சாகர் சக்தி விநாயகர் கோவிலில் 1008 குடம் தண்ணீர் ஊற்றி சிறப்பு வழிபாடு செய்தனர்.

அணையின் கீழ் பகுதியில் இருந்து கோவில் வரை நூற்றுக்கும் மேற்பட்டோர் வரிசையாக நின்று அணையில் இருந்து தண்ணீர் எடுத்து குடங்கள் மூலம் தண்ணீர் ஊற்றி அபிஷேகம் செய்து மழை வேண்டி மனமுருக வழிபாடு நடத்தினர். ஒவ்வொரு ஆண்டும் இது போல் 1008 குடம் தண்ணீர் ஊற்றி வழிபாடு நடத்தப்பட்டு வருவதாகவும், இந்த ஆண்டு பருவ மழை பொய்த்துள்ள நிலையில், இனி வரும் நாட்களில் மழை பெய்து பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Related Stories: