வேலூர் மாநகரில் கடந்த 6 மாதங்களில் போக்குவரத்து விதிகளை மீறி வாகன ஓட்டிகளுக்கு ரூ.1.06 கோடி அபராதம்: போலீசார் தகவல்

 

வேலூர், ஜூலை 27: வேலூர் மாநகரில் கடந்த 6 மாதங்களில் போக்குவரத்து விதிகளை மீறி வாகன ஓட்டிகளுக்கு ரூ.1.06 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர். வேலூர் மாநகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து விதி மீறலில் வாகன ஓட்டிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது, அதிக வேகமாக செல்வது, சிறுவர்கள் பைக் ஓட்டுவது, குடித்து விட்டு வாகனம் இயக்குவது மற்றும் நம்பர் போர்டு இல்லாமலும், ஒரு வழிப்பாதையில் வாகனம் செல்வது, சாலையோரம் வாகனங்களை நிறுத்துவது உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதை தடுக்கும் விதமாக போலீசாரும் அடிக்கடி வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, லைசென்ஸ் இல்லாமல் வாகனம் இயக்குவது, வாகனத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்குவது உள்ளிட்ட பல்வேறு விதி மீறிலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். அதன்படி, இந்தாண்டு ஜனவரி மாதம் ஜூன் மாதம் வரை வேலூரில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 14 ஆயிரத்து 700 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.1 கோடியே 6 லட்சத்து 75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறுகையில், ‘வேலூர் மாநகராட்சி பகுதிகளில் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 6 மாதத்தில் மட்டும் 14 ஆயிரத்து 700 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், 470 வழக்குகள் குடிப்போதையில் வாகனம் இயக்கிய வாகன ஓட்டிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் என்று ரூ.4.70 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹெல்மெட் அணியாமல், செல்போன் பேசியப்படி செல்வது, பைக்கில் 3 பேர் செல்வது உள்ளிட்ட விதி மீறல் தொடர்பாக ரூ.1.06 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது’ என்றனர்.

Related Stories: